சிறப்புப்பகுதி

அமெரிக்காவில் தமிழ் ஏக்கம்!

முத்துமாறன்

இந்த கணினி யுகத்தில் தமிழ் நாட்டில் இருப்பவர்களை விட புலம் பெயர்ந்து சென்றிருப்பவர்கள் தான் தமிழ் மேல் அதிகம் பற்று கொண்டிருப்பவர்களாகத் தோன்றுகிறார்கள். அமெரிக்காவில் இயங்கும் அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம், அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் தமிழை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதற்கான பாடத்திட்டத்தை உருவாக்கி அங்கு 47 பாடசாலைகளை நிறுவி உள்ளது. இப்போது அவற்றில் 3500 மாணவர்கள் தமிழ் கற்று வருகிறார்கள். இதன் சிறப்பு, அனைத்து பள்ளிகளிலும் தரப்படுத்தப்பட்ட ஒரே பாடத்திட்டத்தை அவர்கள் பயின்றுவருகிறார்கள் என்பதாகும். அதற்கான பாடத்திட்டத்தை அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகமே உருவாக்கி உள்ளது. சமீபத்தில் அந்த கழகத்தின் தலைவர் முனைவர் அரசு செல்லையாவும் துணைத்தலைவர் சிவானந்தம் மாரியப்பனும் தமிழகம் வந்திருந்தனர்.

சிவானந்தம் மாரியப்பனை நாம் சந்தித்தோம். இவரது சொந்த ஊர்  மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் என்ற கிராமம். ஊரில் தந்தையார் நினைவாக நிறுவிய நூலகத்துக்கு ஈரோடு புத்தகத் திருவிழாவில் இருந்து சுமார் 800 நூல்களை வாங்கிக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியிருந்தவரிடம் உரையாடினேன். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா சென்றவர். அங்கே மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். தமிழ்ச்சேவை இவரது கூடுதல் பணி.

“அமெரிக்காவில் சுமார் இரண்டு லட்சம் தமிழ்க்குடும்பங்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் வசதிக்காகத்தான் இந்த தமிழ்ப்பள்ளிகள். இப்போது அதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம்.  வார இறுதியில் போய் படித்துக்கொள்ளலாம். இங்கே மாக்ஸ்முல்லர் பவனிலோ அல்லயன்ஸ் ப்ராங்காய்ஸிலோ படிப்பதுபோல்தான். அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பாடத்திட்டம்தான் அது. எங்கள் கழகம் நடத்தும் இந்த பாடத்திட்டத்துக்கு அங்குள்ள மாகாணங்களில் அரசு அங்கீகாரம் வாங்கவும் முயற்சி செய்துவருகிறோம்.” என்றுவிளக்குகிறார்.

“அமெரிக்காவில் ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்துக்கு மாறுதலாகிப் போவது சாதாரணமாக நடப்பது. எனவே ஒரு இடத்தில் படிப்பவர்கள் முதலாம் நிலையில் படித்துக் கொண்டிருந்தால் மாறுதலாகிப் போகின்ற இடத்திலும் அதே நிலையில் சேர்ந்து பயிலமுடியும். அதற்காகத்தான் அமெரிக்கா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை வைத்திருக்கிறோம். தமிழ் மொழிக்கு இப்படி இதற்கு முன்பு இருந்தது இல்லை. மற்ற மொழிகளுக்கு அவர்களின் நாடுகள் உதவி செய்கின்றன.”

தமிழ்நாட்டிலிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

‘’நிறைய. தமிழ் நாட்டில் மொழி தழைத்து இருந்தால்தான் அது உலகில் மற்ற இடங்களில் சிறப்பாக இருக்கும். அந்த மொழி முதலில் காப்பாற்றப் பட வேண்டிய இடம் தமிழ்நாடுதான். வெளிநாட்டில் அதைக் காப்பாற்ற முடியாது. இதில் ஒரு சங்கடம் என்னவென்றால் நாங்கள் முடிந்த அளவுக்கு பாடங்களைத் தனித்தமிழில்தான் உருவாக்கி உள்ளோம். அவர்களுக்கு பிறமொழிக் கலப்பின்றிச் சொல்லித் தருகிறோம். நாங்கள் சொல்லித்தருவதையும் தமிழ் ஊடகங்களையும் குறிப்பாக தொலைக்காட்சிகளைக் கவனிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே எல்லோரும் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறார்கள். எங்களை மட்டும் சுத்தமான தமிழில் பேசச் சொல்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.

சரி அதைவிடுங்கள். தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்குத் தமிழைச் சொல்லித்தர நூல்கள் இருக்கின்றன. ஆனால் மேலைநாட்டில் வாழ்பவர்களுக்கோ அல்லது பிறநாட்டவர்களுக்கோ தமிழை இரண்டாவது மொழியாகச் சொல்லித்தர தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் உண்டா என்றால் இல்லை. ஜப்பானிய மொழிக்கு, இந்தி மொழிக்கு, ஜெர்மன் மொழிக்கு என்றெல்லாம் பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழுக்கு என்று எதுவும் இல்லை. நாங்களே அமெரிக்காவில் இப்படி ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. திரும்பவும் சொல்கிறேன். இங்கே தமிழை நன்றாகப் பேசுபவர்களுக்கான பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால் அதை நாங்கள் அங்கே சொல்லிக் கொடுக்க இயலாது. அங்குள்ள மாணவர்களுக்கு தமிழை எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்துவிடுகிறோம். ஆனால் பேச வாய்ப்புகள் இல்லை. அதைச் சொல்லித்தர சரியான ஊடகங்களும் இல்லை. இப்போது இதற்காக இங்குள்ள கல்வி நிறுவனங்கள் உதவ முன்வந்துள்ளன. அது ஒரு நல்ல விஷயம். இதில் அரசும் தலையிட்டு உதவினால் நன்றாக இருக்கும். இங்கிருக்கும் பள்ளிகளுடன் அங்கிருக்கும் மாணவர்களைத் தொடர்பு படுத்தலாம். இவர்களிடமிருந்து அவர்கள் தமிழைக் கற்கலாம். அவர்களிடமிருந்து இவர்கள் ஆங்கிலம் கற்கலாம். இதில் செய்வதற்கு நிறைய இருக்கின்றன.” இதைச் சொல்லிக்கொண்டிருந்தவர் இன்னொரு விஷயத்தையும் கூறினார்.

“ அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்புவர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழிக் கல்வியில் சேர்த்துப் படிக்கவைப்பதில் சிரமம் இருப்பதால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்த்துவிடுகிறார்கள். அமெரிக்காவில் எங்கள் பாடத்திட்டத்தில் தமிழ்ப் படித்தவர்களாக இருந்தால் அதை அங்கீகரித்து இங்குள்ள பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டு ஏதாவது ஒரு நிலையில் சேர்ந்து தமிழைப் பள்ளியில் படிக்க அரசு சான்றிதழ்களை வழங்கினால் அங்கிருந்து வரும் மாணவர்களின் தமிழ்க் கல்வி தடைப்படாமல் இருக்கும் எல்லாவழியிலும் மக்களை ஊக்கப்படுத்தினால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும்”.

தமிழ் நாட்டில் ஆங்கிலமோகம்தானே இருக்கிறது?

“இந்த மோகத்தைத் தவறு என்றே சொல்ல வேண்டும். இன்று அமெரிக்காவில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழில் படித்துவிட்டு அங்கு வந்தவர்கள்தான். இது பற்றி அவர்களிடம் நாங்களே ஒரு கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறோம், அறிவுக்கும் ஆங்கிலத்துக்கும் தொடர்பில்லை. இங்கே தமிழ் மொழியில் படிப்பவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு 60,000 ரூபாய் அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் ஒரு சிறு அன்பளிப்பாக நாங்கள் அறிவித்ததும் இதனால்தான்.”

அமெரிக்காவில் அனைத்து பாடங்களையுமே தாய்மொழியில் சொல்லித்தரும் பள்ளிகளை உருவாக்குவதுதான் இவர்களில் எதிர்காலத் திட்டம். அதற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தமிழர்கள் அடர்த்தியாக இருப்பது முக்கியம். அங்குள்ள அரசுப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரச் செய்வதற்கும் தமிழ்க்குடும்பங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அந்த பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருப்பது முக்கியமாகும். கலிபோர்னியாவில் இது சாத்தியப்படலாம் என்று சொல்கிறார் சிவானந்தம்.

அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம் தமிழைச் சொல்லித் தருவதுடன் தமிழகக் கலைகளையும் சொல்லித்தர ஏற்பாடு செய்கிறது. ஏற்கெனவே பரதநாட்டியப் பள்ளிகள் அங்கு உள்ளன. அவற்றுடன் சிலம்பம், பறைக்குழுக்களும் அங்கு உருவாகி வருகின்றனவாம். கலாச்சார விழாக்களின்போது இந்த குழுக்களும் கலந்து கொள்கின்றன.

சிவானந்தத்துடன் பேசிக்கொண்டிருந்தவேளையில் அவர் சுத்தமான தமிழில் பதிலளித்தார். ஆங்கிலக் கலப்பே இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

செப்டம்பர், 2013 அந்திமழை இதழ்