முரளிகிருஷ்ணன், ட்ரான்ஸ்பார்மா 
சிறப்புப்பகுதி

அன்று 40 பைசா சேமிப்பு; இன்று 40 லட்சம் ரூபாய் காரில் பயணம்

இரா. கௌதமன்

அது 2004 ஆம் ஆண்டு. பிராங்பர்ட் புத்தக கண்காட்சி.அமெரிக்கன் சயின்டிபிக் பப்ளிஷர்ஸ் என்ற நிறுவனம் உலகின் முதன்முதலாக நேனோ சயின்ஸ் மற்றும் நேனோ டெக்னாலஜி பற்றிய என்சைக்ளோபீடியாவை வெளியிடுகிறது.

அந்த புத்தகத்தை வடிவமைத்தது ஒரு தமிழர். அவர்களின் அழைப்பின்பேரில் அவரும் அங்கு சென்றிருக்கிறார். இதுவரை நேரில் சந்தித்திராத அவரைக் கண்டவுடன் அவர்களுக்கு வியப்பைவிட அதிர்ச்சி. நிச்சயம் நேரில் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய பொறுப்பை அந்த 28 வயது இளைஞரிடம் ஒப்படைத்திருக்க மாட்டார்கள். நீங்கள்தான் முரளி கிருஷ்ணனா? என்று அந்த நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் திரும்ப திரும்ப விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். இது டிரான்ஸ்பார்மா நிறுவனத்தின் நிறுவனர் முரளியின் வெற்றிக்கதை. திருநெல்வேலியிலிருந்து சென்னை வரையிலான அவருடைய பயணம் சுவாரசியமானது. அந்திமழை சார்பில் அவரிடம் பேசியதில் இருந்து...

’சொந்த ஊர் திருநெல்வேலி.அப்பா தொலைபேசித்துறை பொறியாளர். அம்மா வங்கி ஊழியர். 92-95 பிஎஸ்சி கணிதம் படித்துவிட்டு அப்பாவுடன் சென்னைக்கு வந்தேன். தி நகர்ல 5000 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் கோர்சுக்கு பணம் கட்டினார். மாம்பலம் மேன்ஷன் ஒன்றில் இடம்.கையில் இரண்டாயிரம் ரூபாய். இதுதான் இனிமேல் உனக்கு உலகம்,பார்த்துக்க.. என்று கிளம்பிவிட்டார்.

 மூன்று மாதம் கம்ப்யூட்டர் கோர்ஸ்சில் நண்பர்கள் மூலமாக ஜெர்மன் கம்பெனிக்கான டேட்டா என்ட்ரி வேலை தேடி வந்தது. முதலில் 750 ரூபாய் சம்பளம். பிஎஸ்சி  சான்றிதழ் வந்தபிறகு 1500 ரூபாய்னு சொன்னாங்க. அது Scientific publishing services என்ற மிகப்பெரிய கம்பெனி. டைடல் பார்க்கில் தொடங்கியிருந்தார்கள்.இந்த பிராஜக்டில் சேர்ந்த முதல் 50 பேரில் நானும் ஒருவன். இங்குதான் பப்ளிஷிங் துறை பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது. வெறும் டேட்டா என்ட்ரி என்றில்லாமல் அப்போது பதிப்பகத் துறையில் வந்த லேடெக், பிபி 2 போன்ற மென்பொருட்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

   இதற்கிடையில் அம்மா, சித்தி, மாமா எல்லோரும் வங்கியில் வேலை பார்த்ததனால இயல்பாவே எனக்கும் வங்கி வேலைக்கு போகணும்னு ஆசை இருந்தது. சென்னையில் வேலை பார்த்துக்கொண்டே பேங்க் எக்ஸாமுக்கும் படித்துக்கொண்டிருந்தேன். அதில் எழுத்து தேர்வில் தேர்வானேன். எப்படியும் தேர்வாகிவிடுவேன் என்ற நம்பிக்கையில் சென்னையில் வேலையை விட்டுட்டேன். அப்போ சம்பளம் 3500 ஆக உயர்ந்திருந்தது.ஆனால் இண்டர்வியூல போயிடுச்சு.பிஎஸ்சில இரண்டு பேப்பர் அரியர் வேற. வீட்ல செம திட்டு.

  அப்பா கூட சண்டை போட்டுட்டு ஒரு நாள், பேக்கைத் தூக்கிட்டு திருநெல்வேலியிலிருந்து திரும்ப 97 ல் சென்னைக்கு வந்துட்டேன். பழைய மேன்ஷன் நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் மூலமா நியூ ஜென்னு பப்ளிசிங் சர்வீசஸ் கம்பெனியில் வந்த இரண்டே நாள்ல 4000 ரூபாய் சம்பளத்துல சேர்ந்துட்டேன். இரண்டு வருஷம் முடிந்திருந்தது. முதல் வருஷ முடிவில் கம்பெனி எம்டி ஒவ்வொருத்தரிடமும் அவங்க எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாங்கன்னு எழுதி கேட்டிருந்தார். நான் 6500 ரூபாய் குறிப்பிட்டிருந்தேன்.என்னை அழைத்து, ‘எந்த கம்பெனில 50 சதவீதத்துக்கு மேல இன்கிரிமெண்ட் குடுப்பாங்க’ன்னு கேட்டார். நான் என்னோட வேலையையும், அதிலிருந்து இவ்வளவு அவுட் புட் குடுத்திருக்கேன் என்பதையும் சொல்லி, நீங்க எவ்வளவு முடிவு செய்திருக்கிறீர்களோ அதை குடுங்கன்னு சென்னேன். கடைசியில பார்த்தா 8000 ரூபாய் சம்பளமும், பத்தாயிரம் ரூபாய்க்கான இன்செண்டிவ் செக்கும் கொடுத்தார். அப்போ ஹைதராபாத்தில் அமெரிக்க கம்பெனி ஒன்றின் கிளையை நிர்வகிக்கும் வாய்ப்பு வந்தது. நியூஜென் நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டு 99 ஜூன் மாதம் ஹைதராபாத் வந்தேன். தங்கும் இடத்துடன் 15000 ரூபாய் சம்பளத்தில் புது அத்தியாயத்தை தொடங்கியாச்சு.15 பேர் கொண்ட டீம். அவங்களுக்கு டைப் செட்டிங்னா என்னன்னு தொடங்கி பப்ளிசிங் பத்தின அத்தனை விஷயங்களையும் சொல்லிக்குடுக்கற வேலை.

சொல்லிக்குடுத்தத விட அதிகமா நான் கத்துக்கிட்டேன். அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் டெக்னிக்கல் கன்சல்டண்ட்டான மிர்கோ ஜாக் என்பவரிடம்தான் நான் ரிப்போர்ட் செஞ்சிட்டிருந்தேன். முதலில் டீமில் தேறுபவர்களுக்கு அமெரிக்காவில் ட்ரெயினிங் கொடுப்பதாக ஏற்பாடு.ஆனால் மூன்றே மாதத்தில் அமெரிக்காவில் உள்ளது போன்றே பப்ளிஷிங் சர்வீசஸஸ்க்கான முழு டெக்னிக்கல் செட்டப்பையும் தயார் செய்துவிட்டேன். ஒரு வருஷத்தில் 15 பேர் டீம் 130 பேர் டீமாக உயர்ந்துவிட்டது.

 2001 ல் ஹைதராபாத் கம்பெனி மேனேஜ்மெண்டுக்கும் அமெரிக்க அலுவலகத்திற்கும் இடையில் சுமூகமில்லாத நிலை வந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப பாண்டிச்சேரியிலிருந்து இண்டெக்ரா சர்வீசஸ் கம்பெனியிலிருந்து 200 பேர் கொண்ட டீமிற்கு மேனேஜர் ஆபரேஷன்ஸ் வேணும்னு என்னை தொடர்பு கொண்டாங்க. 35000 ரூபாய் சம்பளத்தில் பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன்.

இங்கே வந்த கொஞ்ச நாள்லயே பழைய அமெரிக்க கம்பெனியை பொருளாதார நெருக்கடியில மூடிட்டாங்கன்னு தகவல் கிடைத் தது. அதனோட டெக்னிக்கல் அட்வைசர் மிர்க்கோ அதற்கடுத்து Informa என்கிற கம்பெனியில் சேர்ந்துட்டார். அந்த கம்பெனியிலிருந்து வந்த 13 ஜெர்னல்களை பழைய அமெரிக்க கம்பெனி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.இப்ப அந்த பொறுப்பை யார் கிட்ட ஒப்படைப்பது என்ற கேள்வி வந்தபோது மிர்க்கோ என்னுடைய பெயரை சொல்லியிருக்கிறார். பாண்டி வந்த 8 மாதத்தில் இந்த வேலை வந்தது. தனியா செய்யலாம்னு முடிவு செய்து வேலையை விட்டேன்.

ஆனா வீட்ல திரும்பவும் செம திட்டு. இப்பதான் லைப்ல நல்ல சம்பளத்தோட செட்டில் ஆகிட்டிருக்க, கல்யாணம் செய்யலாம்னு பார்த்தா தனியா பிசினஸ் அது இதுன்னு திரும்பவும் சொதப்புறியே, மிர்க்கோ யாருன்னே உனக்கு தெரியாது.வெறும் மெயில் தொடர்ப வச்சுகிட்டு, எப்படி பிசினஸ் செய்வே? அப்படின்னு பெரிய எதிர்ப்பு.ஆனால் நான் மட்டும் நம்பிக்கையோட மிர்க்கோவோட புராஜக்ட்டை எடுத்து செய்ய ஆரம்பித்துவிட்டேன்.அதே சமயத்துல லோன் போட்டு சென்னையில் வீடு வாங்கியிருந்தேன். சென்னையில் என்னோட வீட்டில் நான் மட்டும் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.கம்பெனி எப்படி ஆரம்பிப்பது,வெளி நாட்டிலிருந்து பணம் வந்தால் என்ன செய்ய வேண்டும் எதுவும் எனக்கு தெரியாது. நண்பர் மூலமா தெரிஞ்ச ஆடிட்டரை பார்த்து 2002 -இல் டெக் நெட் பப்ளிஷிங் ஈ சர்வீசஸ் கம்பெனியை தொடங்கினேன்.மூன்று மாதம் கழித்து இன்வாய்ஸ் அனுப்பச் சொல்லி Informa கேட்டபோதுதான், ஆடிட்டர் கிட்ட கேட்டு அதை எப்படி செய்யனும்னு தெரிஞ்சுகிட்டேன். முதல் முறையா ஏறக்குறைய ஒன்றரை லட்ச ரூபாய்க்கு டாலரில் செக் வந்தது. அதன்பிறகுதான் பிசினஸ் ஆரம்பித்த விஷயத்தை வீட்டில் சொன்னேன். படிப்படியா அவங்க வேலையை அதிகப்படுத்தவே, ஆட்கள் வேலைக்கு எடுத்து கம்பெனியை பெரிதாக்க தொடங்கினேன்.

அடுத்த வாய்ப்பும் மிர்க்கோ வழியாகவே வந்தது. அமெரிக்கன் சயின்டிபிக் பப்ளிஷர்ஸ் என்று கலிபோர்னியாவிலுள்ள கம்பெனி உலகில் முதன்முதலா நேனோ சயின்ஸ், நேனோ டெக்னாலஜி பற்றி என்சைக்ளோபீடியா தயாரிக்கும் வேலையில் இறங்கி-யிருந்தார்கள். பத்தாயிரம் பக்கம், ஆறு மாதத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம்.தம்பியை இங்கே உட்கார வைத்துவிட்டு ஹைதராபாத் கிளம்பினேன்.முன்பு என்னுடைய டீமில் வேலைபார்த்த நண்பர்களை ஒருங்கிணைத்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இரண்டு நாட்களில் வேலையை தொடங்கி விட்டேன். குறித்த நேரத்தில் என்சைக்ளோபீடியாவை முடித்துக் கொடுத்தோம். 2004 பிராங்பர்ட் புத்தக கண்காட்சியில் அதை வெளியிட்டார்கள்.அந்த புத்தகத்தில் என்னுடைய பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்கள். மகிழ்சியான தருணம் அது. இதன்பிறகு அவர்களுடைய ஜர்னல்ஸ் அனைத்தையும் எங்களிடம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள். தொழில் வளர்ந்தது.

ஹைதராபாத்,சென்னை என்று திரும்ப திரும்ப சுற்ற வேண்டி இருந்ததால் ஹைதராபாத் கிளையை மூடிவிட்டு திரு நெல்வேலியில் புதிய கிளையை தொடங்கினோம்.இப்போது அப்பாவும்,அம்மாவும் டிரான்ஸ்பார்மாவில் இயக்குனர்கள். திருநெல்வேலி அலுவலகத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

 ஒரு கட்டத்தில் என்னுடைய கம்பெனியின் பெயர், நாம் செய்யும் வியாபாரத்திற்கு ஏற்றவாறு இல்லை, மாற்ற வேண்டும் என்று யோசித்த போது அப்பா சொன்ன பெயர் ‘டிரான்ஸ்பார்மா’.2010 லிருந்து டிரான்ஸ்பார்மா என்ற பெயரில் இயங்கிவருகிறோம்.கடந்த ஆண்டு 8 கோடி வியாபாரம் செய்தோம்.இந்த ஆண்டு இலக்கு 10 கோடி’ என்கிறார்.

 தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு இவர் சொல்வது: ‘ அன்றைக்கு திருவான்மியூரிலிருந்து அடையாருக்கு பஸ் டிக்கெட் 40 பைசா. அதை மிச்சப்படுத்தினால் இரவு வாழைப்பழம் ஒன்று கூடுதலாக சாப்பிடலாம்னு நடந்தே வருவேன். இன்று 40 லட்ச ரூபாய் ஆடி காரில் பயணம் செய்கிறேன். காரணம் எனக்கு பிடித்த தொழிலில் முழு மூச்சாக உழைத்தது,வாய்ப்புகள் கதவினை தட்டும்போது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டது. இதைச் சரியாக செய்தால் அனைவரும் சாதிக்கலாம்’.

அக்டோபர், 2013