தமிழில் இருக்கிற ஏராளமான பத்திரிகைகளுக்கு நடுவில் இன்னொரு புதிய பத்திரிகையா என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஒரு பத்திரிகைக்கு வாசிப்பனுபவம் தருவதைத் தாண்டி வேறென்ன பயன்பாடுகள் இருக்கின்றன? யோசித்தபோது...
1) குழந்தைக்கு அன்புடன் பேப்பர் ராக்கெட் செய்து கொடுக்க
2) அவசரத்துக்கு கை துடைக்க
3) சப்பாத்தி தேய்த்து அதை அடுக்கி வைக்க
4) தரையில் ஏதாவது கொட்டிவிட்டால் துடைக்க
5) கையில் சுருட்டி வைத்து கொசு அடிக்க
6) கடன்காரரைக் கண்டால் முகத்தை மறைத்துக்கொள்ள
7) இளம் பெண்களைக் கண்டால் படிப்பதுபோல் பாசாங்கு செய்ய
8) ரகசியமாக சில எண்களை எங்காவது குறித்துவைக்கும் பக்கங்களாக
9) மின்சாரம் இல்லாதபோது விசிறிக்கொள்ள
என்ன சரியா? ஒரு வேளை இன்னும் பல யோசனைகள் உங்களுக்கு தோன்றக்கூடும்...
அந்திமழையைப் பொருத்தமட்டில் எல்லாப் பக்கங்களையும் வாசிக்கக்கூடியவையாக, பயன்படுத்தக்கூடியவையாக அமைக்க முயற்சி செய்துள்ளோம். சிலபக்கங்களை ரசிக்கலாம். சிலவற்றை பத்திரப்படுத்தலாம்; சிலவற்றை ஒரு மெல்லிய புன்னகையோடு கடந்துசெல்லலாம். ஆனால் எந்தப் பக்கத்தை யும் நீங்கள் புறக்கணிக்க இயலாது என்றே கருதுகிறோம்.
மகிழ்ச்சியும் வெற்றியும் அந்திமழையின் எல்லாப்பக்கங்களையும் தீர்மானிக்கும் அடிநாதங்கள். எல்லாவற்றிலும் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன தேவையென்று நினைக்கிறோமோ நிச்சயம் அந்திமழை ஆசிரியர் குழு அதைத் தரத் தவறாது. நடுநிலை என்று சும்மா சொல்ல மாட்டோம். எல்லாவற்றிலும் சார்புநிலை எடுப்போம். நியாயமான சார்பாக அது இருக்கும். வாருங்கள் வாசிப்பைக் கொண்டாடுவோம்.
அன்புடன்
என். அசோகன்
நிர்வாக ஆசிரியர்
செப்டம்பர், 2012.