சிறப்புப்பகுதி

அகம் முகம்: சுற்றி வரும் கேள்வி

ராஜா சந்திரசேகர்

அவன் காண்டம் யூஸ் பண்ணல... என்னயும் யூஸ் பண்ணல... ஜெண்டில்மேன் மாதிரி இருந்தானா, நடிச்சானான்னு தெரியல...என் கைய நீட்டச்சொல்லி உள்ளங்கைல முத்தம்  கொடுத்தான்...இது போதும்னான்... இது உனக்குப் போதுமான்னு கை நிறையப் பணம் வச்சான்... காண்டத்த தூக்கி எறிஞ்சான்...அது எங்கையோ முள்ளுச்செடியில போயி விழுந்துது. கவனமா இருன்னு சொல்லிட்டுப் போனான். போவும்போது அவன் குடுத்த பிளைங் கிஸ் என்ன சுத்தி வந்துக்கிட்டிருக்கு... இந்த மனுஷன  கடவுள் அனுப்பனாரா... இந்தக் கேள்வியும் சுத்தி வந்துக்கிட்டிருக்கு...'

குழந்தை வரைந்த குட்டி யானை

பேத்தி யானை படம் வரைந்து தாத்தாவிற்குக் காட்டக் காத்திருந்தாள்.

தாத்தா முதுகு வலியுடன் வந்தார். பாட்டிக்கு அவர் நடையிலேயே அது புரிந்தது. காப்பிக்கொண்டு வந்து தந்தார்.

‘வலி எப்பிடிங்க இருக்கு.'

‘வலி நலமாதான் இருக்கு. எனக்குதான் முடியல.'

துயரம் நெளியச் சொன்னார்.

பேத்தி வரைந்த யானையுடன் ஓடி வந்தாள்.

‘தாத்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்மா...அப்புறமா காட்டு.'

‘பார்வதி குழந்தைய ஏன் நிறுத்தற..நீ கொண்டாடா கண்ணு... ஏம்மா குட்டி யானை வரைஞ்சிருக்க...'

‘குட்டியானை பிடிக்கும் தாத்தா.  அதான்

வரைஞ்சேன்.'ஆச்சரியத்துடன் சொன்னாள்.

‘இந்த படத்துக்கு நூறு மார்க்.' தாத்தா சொன்னார். 

‘எங்க வீட்டச்சுத்தி வரும் குட்டி யானை.

எல்லோருக்கும் பிடிச்ச செல்ல யானை'

பாடியபடி ஓடினாள் குழந்தை.

இரவு தாத்தாவிற்கு முதுகு வலி கூடியது. முடியாமல் புரண்டு படுத்தார். அவர் கனவில் வந்த குட்டி யானை முதுகில் ஏறி மெல்ல அமுக்கியது.

தாத்தா திரும்பிப் படுத்தார். கனவில் வந்த யானை வலியைக்கொண்டுபோயிருந்தது. தாத்தாவிற்கு வியப்பாக இருந்தது.

குழந்தையைப் பாடிய வரிகளை முணுமுணுத்த தாத்தா கூடுதலாகக் கொஞ்சம் சேர்த்து பாடினார்.

குட்டி யானை....செல்ல யானை...

ஸ்டெதாஸ்கோப் தும்பிக்கையால்

சுற்றி வரும் டாக்டர் யானை

டீ மாஸ்டர் சரவணன்

சாலிகிராமம். மெட்ரோ ரயில் வேலைகளின் தீவிரம் நிறைந்த பகுதி. 80அடிச்சாலை அருகில் உள்ள

சத்யம் டீ கடை. காலை நடையில் தேநீர் அருந்துவது வழக்கம். டீ மாஸ்டர் சரவணன். மெல்லிய கோடு போட்டதுபோல் உடம்பு. நகரும் சித்திரம்.

உற்சாகத் தேனீ. அவர் டீ போடும் லாவகமும் அதைத் தரும் வேகமும் ரசிக்க வைக்கும்.

ஆர்டர் எடுப்பார். இட்லி வைப்பார். பூரி தருவார். வடை தட்டுக்குப் போகும். இடையிடையே டீ போடுவதும் நிற்காது.

கவனம் குவித்து அவர் செய்வதை பல கண்கள் கவனிக்கும்.

ஆட்டோகிராப் வாங்கியதில்லை. மற்றபடி  நான் அவருக்கு ரசிகன்.

அவர் கழுத்தில் புதிதாக ஒரு செயின் மின்னியது. கேட்டேன்.

சிரித்தபடியே வெட்கத்துடன் ஒன்னரை பவுன் என்றார். பெருமித நடை. வியர்வை சட்டைக்குள்ளே மின்னி அசையும் செயின்.

கொஞ்ச நேரம் இருந்தால் அவராக இன்னொரு அவுன்ஸ் டீ கொண்டுவந்து வைத்துவிடுவார்.கொஞ்சம் தேநீர். கொஞ்சம் வார்த்தைகள்.  உரையாடல் முடிந்துவிடும்.

தேநீரின் சுவைபோல் ஒரு நட்பு.

ஊருக்குப் போய் வந்தபிறகு சரவணனைப் பார்த்தபோது புன்னகை மின்னியது. கழுத்தில் செயின் மின்னவில்லை. கழுத்து வெறுமையை அணிந்தது போலிருந்தது.

‘சரவணன் செயினக் காணோம்.'

‘கழட்டி வச்சிட்டேன் சார்.'

‘கழட்டி, வச்சிட்டீங்களா.'

என் தொனியை மெதுவாய் புரிந்துகொண்டு வேகமாய்ச் சொன்னார்.

‘சார்...கழட்டி, வீட்ல வச்சிட்டேன்.'

நான் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

அடுத்த அவுன்ஸ் டீ டேபிளில் இருந்தது.