எப்போது பேனா வாங்கினாலும் எழுதிப் பார்ப்பேன். உடனே வருகிற பெயர் மீரா. ‘மீ' சுழி போடும்போது சற்று அலைபோல மேலெழும்பி வரும். அதில் ஒரு சந்தோஷம் எழும். இப்போது அதெல்லாம் எதுவுமில்லை.ஆனாலும் பெயரெழுதும் பழக்கம் போகவில்லை. வேரில் ஒட்டிக்கொண்டவை, மரம் விழும்வரை உதிர்வதே இல்லை. ஒரு வரி வந்து போனது.
மீராவைப் பார்த்து வருடங்களாயிற்று. திசைகள் மாறிப் போனோம். நானும் குடும்பம், குழந்தை என்று ஒரு சராசரியின் வளையத்திற்குள் வந்துவிட்டேன்.
ராஜா ஸ்டேஷனரி கடையில் வாங்கும்போது மேலும் எழுதிப் பார்க்கலாம். கோபித்துக்கொள்ளமாட்டார். பக்கத்தில் நின்றிருந்தவர் நான் எழுதியதைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்தார். அது எனக்குப் பிடிக்கவில்லை.
காட்சிகள் பின்நோக்கிப் போக நான் மீரா என்று எழுதியதை மீராவின் இடது கை வாங்கி மாயன் என்று எழுதியது.மயக்கத்துடன் மீரா பார்த்தபோது கண்கள் ஒருமுறை மாயன் என்று உச்சரித்தது.
‘இது புனைபெயர் போலிருக்கும் நிஜப்பெயர்,'
சொல்லிச் சிரிப்பாள். இடது கையால் கன்னத்தைத் தட்டுவாள். நினைவுகள் துண்டிக்கப்பட்டு வலி சேர்ந்து வெறுமை தட்டியது.
‘என் மனைவி பேரும் மீராதான் சார்' முதலில் புன்னகைத்தவர் இப்போது சொல்லிவிட்டுச் சிரித்தார். பிறகு சற்று திரும்பிப் பார்த்தார். சாலை விளிம்பில் ‘பைக்' அருகில் அந்தப் பக்கம் பார்த்தபடி ஒரு பெண் நின்றிருந்தாள். வெயிலின் தாக்கத்தை அவள் பிடித்திருந்த குடை குறைக்கப் பார்த்தது. அப்போது அவள் 'மொபைல்' கீழே விழ இடது கையால் எடுத்தாள். நான் முகம் திருப்பி ராஜாவிடம் பேனா வாங்கிக்கொண்டேன்.
பக்கத்திலிருந்தவர் வாங்கிய பொருட்களோடு ‘பைக்' அருகே போனார். நான் திரும்பிப் பார்த்திருக்கலாம். செய்யவில்லை. பாய்ந்துவந்த ஆர்வத்திற்குத் தடைபோட்டுவிட்டேன்.
‘பைக்'கில் போனது மீராவாக இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம்; இடது கை பழக்கமுள்ள வேறோரு பெண்ணாக இருக்கலாம். மொபைலை இடது கையால் எடுத்தது இயல்பாக நிகழ்ந்திருக்கலாம்.
‘மீ'யின் வளைவு மீண்டும் ஒரு முறை அலைபோல் எழும்பியது. மீரா, இசை ரூபமாய் தெரிந்தது. எழுதிய தாளை எடுத்துக்கொண்டேன்.
என்னைக் கவனித்துக்கொண்டே இருந்த ராஜா கேட்டார்- ‘ஏதாவது கதை கிடைச்சுதா சார்?'
‘இல்லை' தலையாட்டினேன்.
‘சார் நீ ங்க சொன்ன ஒரு வரி இன்னைக்குக் காலையில இருந்து நினைவுல சுத்திக்கிட்டே இருக்கு,' ரசித்து அப்படியே திரும்பச் சொன்னார்.
விடைபெற்று நடந்தபோது அந்த வரி எனக்குள்ளும் ஓடியது...
மாயமான்களை
வனங்களாலும்
கண்டுபிடிக்க முடியாது.
நீச்சல்
நீச்சல் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தவனுக்கு மீன்கள் நீச்சல் கற்றுக்கொடுத்தன. நீந்தினான். மீன்போல் நீந்தினான். மீன்கள் சந்தோஷப்பட்டன. கொண்டாட்டக் கூச்சலிட்டுக் கரையேறினான்.
பின்னொரு நாள் தூண்டில்போட்டு மீன்களைப் பிடித்தான். துடித்துக்கொண்டிருந்த ஒரு மீன்
சொன்னது. ‘ உனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்ததற்கு நீ செய்யும் கைமாறு இதுதானா...'
‘எனக்குப் பசிக்கிறது. உங்களைச் சுட்டு சாப்பிட்டால்தான் அடங்கும்' என்றான்.
‘இதுபோல் அன்று நாங்கள் எங்கள் பசியை
நினைத்திருந்தால் உன்னைக் கொத்தித்தின்றிருப்போமே...' மீன் சொன்னது அவனைச் சுட்டது.
உடனே மீன்களை நீரில் வீசினான். எல்லாம் நீந்தி மறைந்தன. தூண்டிலை வீசிஎறிந்தான். மன அழுக்கைப் போக்க நதியில் குதித்து மீன்களோடு நீந்தினான்.
நவம்பர், 2022