படைப்பின் தேடல் இந்தப் படத்தை எடுக்க வைத்தது.
காலை வாக்கிங் போகும்போது என் கண்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இது. உடனே க்ளிக்கானது. கொஞ்சம் நுட்பமாக காமிரா கோணம் பார்த்து பல படங்கள் எடுத்து இது சரியாக வந்தது. அவர் உறக்கம் கலையாமல் உணர்ந்து எடுத்தது.
இது ஓர் எளிமையான உறக்கம். நிம்மதியான நேரங்கள் உழைத்த ஆத்மா எல்லாம் மறந்து உறங்குகிறது.
இந்தப் படத்தைப் பார்த்தபின் உங்களுக்குச் சில கதைகள் தோன்றலாம்.
சிந்தனை சிறகசைத்து பேனாவை எடுக்கலாம். தயவுசெய்து சோகத்தைப் பிழிந்து இந்தப் படத்தின் மேல் ஊற்றிவிட வேண்டாம்.
இவை எல்லாமே தினசரி சித்திரங்கள். இவர்கள் தன்னளவுக்கு திருப்தியும் புரிதலும்கொண்டு பயணிப்பவர்கள்.
அணையாத இலக்குகொண்டவர்கள்.
அதில் ஒளிர்ந்து நடைபோட விரும்புவர்கள். அதை அடைய நாளாகலாம். அந்த எண்ணம் காலாவதியாகாது.
ஒன்று சொல்லத்தோன்றுகிறது.
வாழ்க்கை இருக்கிறது. அவரவர் வழிகளில் வாழ்க்கை இயங்குகிறது.
இன்ஷா அல்லா.
கத்தரிக்கோல் மனோபாவம்
‘ஏன் சார் பதட்டமாவே இருக்கீங்க?'
‘ஏன் சார் கோபப்பட்றீங்க?'
‘ஏன் சார் மாத்திமாத்தி சொல்றீங்க?'
‘ஏன் சார் ஒரு இடத்துல நிக்கமாட்றீங்க?'
‘ஏன் சார் நிம்மதியா தூங்கமாட்றீங்க?'
‘ஏன் சார் எதைஎதையோ சுமந்துக்கிட்டிருக்கீங்க?'
‘ஏன் சார் செல்போனையே நோண்டிக்கிட்டிருக்கீங்க?'
‘ஏன் சார் வேகமா வண்டி ஓட்றீங்க?'
‘ஏன் சார் ஹெல்மட் போடாம போறீங்க?'
‘ஏன் சார் உம்முன்னுபாக்கறீங்க?'
‘ஏன் சார் அவசரமா இருக்கீங்க?'
‘ஏன் சார் கட் பண்ற மாதிரி பேசறீங்க?'
‘ஏன் சார் இந்த கத்தரிக்கோல் மனோபாவம்? '
‘இதெல்லாம் நான் உங்ககிட்ட கேக்க நினைச்ச கேள்விங்க இல்ல சார்...
ஏன்கிட்டயே கேக்க நினைச்சது.“
துயரத்தின் நினைவுகள்
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மரணம்.சித்தப்பாவின் மகன் இறந்துவிட்டார். மாரடைப்பு உடனே கொண்டுபோய்விட்டது. வயது 55 இருக்கும். மகன் பிடெக் முடித்து இப்போதுதான் வேலையில் சேர்ந்துள்ளார். மிக அன்பான மனைவி. அற்புதமான குடும்பம். சட்டென வெறுமையானது போலாகிவிட்டது.
அந்த தம்பியின் அழகான புன்னகை மரணத்திலும் உயிர்த்திருந்தது. கண்ணாடிப்பெட்டிக்குள் சூறையாடப்பட்ட ஒரு வாழ்க்கை. அந்த வீடு நிசப்தமாக அழுவதுபோல் இருந்தது. ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் இருக்கின்றன. இழந்தவர்களுக்கு அது எந்தவிதத்தில் உதவி செய்யும்?
மெல்ல மீண்டெழுவார்கள். நாள் மறுபடியும் தன் சுழற்சியை ஆரம்பிக்கும். காலண்டரிலிருந்து தேதிகள் உதிரும். மனம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறும். காயங்கள் வடுக்களாகும். வடுகளிலும் வலிகள் பதிந்திருக்கும்.
நானும் ஒரு உறவினரும் தேநீர் அருந்தியப்படியே பேசினோம். கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கும் தம்பியின் நினைவுகள் கல்லெறிந்துகொண்டே இருந்தன. என் மனதில் ஓடியது.
துயரம் வடிய
தேநீர் அருந்தினோம்
தேநீர் அருந்தியபடியே
துயரத்தின் நினைவுகளுக்குத்
திரும்பினோம்!
ஜூலை, 2022