ஓவியம் ரவி பேலட்
சிறப்புப்பகுதி

ரயில் கொள்ளையர்கள்!

திலகவதி ஐபிஎஸ்

2001 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நான் ரயில்வே ஐஜி ஆக பணிபுரிந்துகொண்டிருந்தேன். அது ஒரு வேறுபட்டதும் வித்தியாசமானதுமான பணி.

அந்த காலகட்டத்தில் அந்த பிரிவின் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யமாட்டார்கள். போதுமான ஆட்களும் இருக்கமாட்டார்கள். ஆனால் ஏதாவது குற்றம் நடந்துவிட்டால் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும். ஆனால் குற்றங்கள் நடக்காத சமயத்தில் அவற்றை முன்கூட்டியே தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யும் தளவாடங்கள், அடிப்படைக் கட்டுமானங்கள் எதுவும் அந்த துறையில் குறைவாக இருக்கும். அதில் பல வித்தியாசமான குற்றங்கள் நடக்கும். உதாரணத் துக்குப் பின்னிரவுகளில் களைத்துப்போய் மின்சார ரயில்களில் பயணம் செய்கிறவர்களை மட்டும் குறிவைத்துக் கொள்ளையடிப்பார்கள். இந்த பயணிகளிடம் ஏதோ ஒரு வாட்ச், ஒரு செயின் இப்படித்தான் இருக்கும். இதைப் பறிகொடுத்தவர்களும் புகார் கொடுக்க முன்வர மாட்டார்கள். ஆனால் இந்த கொள்ளையர்கள் ஒரு குழுவாக இயங்குவார்கள். இதற்கு அவர்கள் வைத்த பெயர் ஜப்தி. இவர்களைப் பிடித்து சிறைக்கு அனுப்பினோம்.

அந்த காலகட்டத்தில் பிஸ்கட் கொள்ளையர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. கொல்கத்தா, மும்பை போல தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில்கள் குறிவைக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் வந்து இறங்குபோது எல்லோரும் இறங்கிச் சென்றபிறகு முதல்வகுப்பில் பணியாளர்கள் போய்ப் பார்க்கும்போது சிலர் எழாமல் தூங்குவர். எழுப்பினால் அவர்கள் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பொருட்களை எல்லாம் இழந்து படுத்திருப்பது தெரியும். நாங்கள் பதறியடித்து ஓடி, அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால்தான் நினைவு திரும்புவர். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகும். அதன் பின்னர் அவர்கள் தாங்கள் இழந்த நகை பணம் பற்றிச்சொல்வார்கள். இவர்களின் நீண்ட பயணத்தில் எங்கே யார் இவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள் என்று கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருந்தது.

ராஜஸ்தானில் கூட அப்போது இப்படி யொரு சம்பவம் நடைபெற்றது. ஒரு ரயிலில் பயணித்த எல்லோரும் மயக்கம் அடைந்தனர். அவர்களின் பொருட்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டன. எப்படியெனில், கோவில் பிரசாதம் என எல்லோருக்கும் லட்டு கொடுக்கப்பட்டது. பிரசாதம் என்றதும் மறுகேள்வி இல்லாமல் எல்லோரும் வாங்கி சாப்பிட்டுவிட்டு மயங்கிவிட்டனர்! கல்யாணம் காலம், திருவிழாக்கள் போன்ற சமயங்களில் இது நடக்கும்!

சரி இதைத் தடுக்க என்ன செய்வது என யோசித் தோம். முதல் கட்டமாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை ஐந்து ஆறு மொழிகளில்அச்சடித்து விநியோகித்தோம். ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் செய்தோம். அந்நிய நபர்களிடம் இருந்து அவர்கள் எவ்வளவு அன்பாகப் பழகினாலும் அவர்கள் தரக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி உண்ணாதீர்கள்; பானங்களை அருந்தாதீர்கள்! என இவற்றின் மூலம் வலியுறுத்தினோம்.

இந்த நோட்டீஸ் அடிக்க எல்லாம் துறையில் நிதி கிடையாது. எல்லாம் பல நல்லுள்ளம் கொண்ட கொடையாளிகளிடம் பிச்சை எடுக்காத குறையாக கேட்டு வாங்கிதான் இந்த பிரசாரத்தை மேற்கொண்டோம்.

ஆனாலும் இந்த சம்பவங்கள் நிற்கவில்லை. இருப்பினும் ரயில் பெட்டிகளில் கண்பார்வை படும் இடங்களில் ஒட்டி வைத்தோம். இதன் பின்னரும் சம்பவங்கள் தொடர்ந்தன.

படித்தவர்கள், விவரமறிந்தவர்கள் என்று கருதப்படுகிறவர்களும் இதற்குத் தப்பவில்லை.

ஒருமுறை ராணுவ மேஜர் ஒருவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுத்தார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மயக்கம் தெளிந்தவரை நேரில் சந்தித்தேன்.

‘என்ன மேஜர்... நீங்கள் எவ்வளவு விவரமானவர்? எவ்வளவு மொழியில் எழுதிப் போட்டிருக்கோம். அதுக்குப் பிறகும் இப்படி ஏமாறலாமா?' எனக் கேட்டேன்.

‘நான் கொல்கத்தாவில் இருந்து வந்துகொண்டிருந்தேன். இடையில் ஒரு இளைஞர் ஏறினார். என்னுடன் சர்வதேச, உள்ளூர் அரசியல் எல்லாம் நன்றாகப் பேசிக்கொண்டு வந்தார். அவ்வளவு அருமையான ஆங்கிலம் பேசினார். காலில் நைக் ஷூ போட்டிருந்தார். அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது' என்றார் மேஜர்.

‘அவர் என்ன கொடுத்தார்?'

‘காபி. ஒரு ப்ளாஸ்கில் இருந்து எனக்கும் அவருக்கும் என் கண்முன்னே இரண்டு கிளாஸ் ஊற்றினார். ஒன்றை அவர் சாப்பிட்டார்; இன்னொன்றை எனக்குக் கொடுத்தார். இதில் சந்தேகப்பட ஏதும் இல்லை.. காபி சாப்பிட்டது மட்டுமே என் நினைவில் உள்ளது. அதன் பிறகு இங்குதான் விழிக்கிறேன்‘

ஆரம்பத்தில் பிஸ்கட்தான் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கொள்ளைக் கும்பல், பிஸ்கட் கொள்ளைக்கு எதிராக நிறைய பிரச்சாரம் செய்யப்பட்ட பின் தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொண்டனர். சாக்லேட், இனிப்புகள், காபி என பல வழிகளைக் கடைபிடித்தனர்.

இந்த மேஜருக்கு காபி கொடுக்க ‘டபிள் பிளாஸ்க்‘ என்ற மேஜிக் முறையைப் பயன்படுத்தி இருக்கவேண்டும். ஒருபக்கம் மயக்க மருந்து கலந்த காபி. இன்னொருபக்கம் கலக்காத காபி.

இந்த கொள்ளையர்களைப் பிடிக்க சிறப்புக் குழு ஒன்றை உடனே அமைத்தோம். அதுவரை நடந்த எல்லா குற்றங்களைப்பற்றியும் எழுதி ஒரு வரைபடம் தயாரித்தேன். மயங்கியவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை ஆராய்ந்து, எங்கே, எப்போது, எந்த ரயில் நிலையத்தில் நடக்கிறது என்கிற விஷயங்களை ஆராய்ந்தோம். ரயிலில் ஏறி, 4 &-5 மணிநேரம் கூடவே பயணம் செய்தபின்னர், நட்புடன் நெருங்கிப் பழகியபின்னர், பொழுது சாய்ந்தபிறகு, இரவு உணவு நேரத்தில்தான் இதைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்தோம். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை ஆராய்ந்தபோது பெரும்பாலும் விசாகப்பட்டணத்தில்தான் இது நடக்கிறது என தெரிந்தது.

எனவே எங்கள் சிறப்புப் படையை சேர்ந்த ஒருவரை விசாகப்பட்டணத்தில் இருந்து நன்றாக உடையணிந்து முதல்வகுப்புப் பெட்டியில் சென்னை நோக்கி பயணம் செய்ய அனுப்புவது, அவரை யாரும் இப்படி மயக்க மருந்து கொடுக்க முயற்சி செய்தால் ஆளைப் பிடித்துவிடுவது என திட்டம் தீட்டினோம்.

இன்னொரு காவல்துறை குழுவினர் பிச்சைக் காரர்களை விட கேவலமாக உடையணிந்து ரயில் நிலையங்களில் உலவி கண்காணித்தார்கள்.

இந்த இரண்டு குழுக்களும் இரு ஆய்வாளர்கள் தலைமையில் இயங்கின. இரண்டு மாதங்கள் எங்கள் காவலர்கள் படாத பாடு பட்டு துப்பு துலக்கினார்கள். தினமும் ஆந்திரா, டெல்லி, கொல்கத்தா போன்ற நகர்களில் உள்ள அதிகாரிகளிடம் பேசி ஒத்துழைப்புக் கோரவேண்டும். உழைக்கவேண்டும்.

கடைசியில் ஒரு ஆளைக் கையும் களவுமாகப் பிடித்தனர். ஒரு காவலருக்கு மயக்க மருந்து கொடுக்க முயன்றபோது அவருடன் மாறு வேடங்களில் வந்திருந்த காவலர்கள் ரயில்பெட்டியிலேயே வைத்து அந்த கொள்ளையனைப் பிடித்தனர்.

அவனை இங்கே கொண்டு வந்து விசாரித்தபோதுமுழு உண்மையையும் கக்கினான். கொல்கத்தாவில் இதற்கு கல்லூரி மாதிரி ஒரு பயிற்சி மையமே நடந்துகொண்டிருந்தது என்று அவன் சொன்னபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்! நாடு முழுக்க செல்லும் நீண்டதூர ரயில்களில் கொள்ளை அடிப்பது வேலை. எங்கே பெரிய அளவுக்கு கொள்ளை அடித்தாலும் அவர்கள் செய்யும் முதல்வேலை திருப்பதிக்குப் போய் காணிக்கை செலுத்துவதுதான்! கொல்கத்தாவில் பிறந்து, விசாகப்பட்டினத்தில் கொள்ளை அடிக்கிறான்; திருப்பதிக்கு காணிக்கை அளிக்கிறான். பெங்களூர் பக்கமாக கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். மும்பை பக்கமாக இடம் வாங்கி செட்டில் ஆகிறான்.. இப்படி ஒவ்வொருவனும் ஒரு ‘முழு இந்தியனாக' வாழும் விதத்தை கதையாகச் சொன்னான்! சுமார் பத்து ஆண்டுகள் இந்த வேலை பார்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக வாழலாமாம்!

அவன் சொன்ன தகவலின் பேரில் உடனே மொத்த கும்பலையும் கைது செய்தோம்.

இவர்களை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்தோம். நிருபர்கள் எல்லோரும் வந்தார்கள். என்ன தகவல்கள் சொன்னாலும் சரி; இந்த கொள்ளையர்கள் பயன்படுத்தும் மருந்து பேர் மட்டும் வெளியே சொல்லக்கூடாது என்று கூறி இருந்தேன். ஆனாலும் செய்தியாளர் சந்திப்பு முடிந்தபின்னர், அதிகாரிகளிடம் நைச்சியமாக பேச்சுக் கொடுத்து, அந்த மருந்து பெயரையும் பத்திரிகைகளில் செய்தியாக சில நிருபர்கள் போட்டுவிட்டார்கள்! இந்த விவரம் வெளியானதில் எனக்கு வருத்தம்தான். ஏனெனில் பரவலாக பிற சமூக விரோதிகளுக்கும் இது உதவியாகப் போய்விடும் இல்லையா?

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)