லாசர் மொய்சேவிச் ககனோவிச், ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர். ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினின் மிகமுக்கியமான தளபதி. ஸ்டாலினிசம் என்ற சொல்லை உருவாக்கியவராக அவரையே சொல்கிறார்கள். ஸ்டாலினிசம் என்பது 1934-ல் இருந்து 1953 வரை ஸ்டாலின் சோவியத் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கையைக் குறிக்கிறது. இன்றைக்கு பொதுவாக மிக அதிகப்படியான அரசு சர்வாதிகாரத்தைப் பயன்படுத்துதல் என்ற பொருளில் ஸ்டாலினிசம் வழங்கப்படுகிறது. ஸ்டாலின் உயிரோடு இருந்தவரை தன்னை மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட், லெனினின் மாணவர் என்றே அழைத்துக் கொண்டார். மற்றவர்கள் ஸ்டாலினிசம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும் அவர் பயன்படுத்தவில்லை. லாசர் ஸ்டாலினின் கொள்கைகளைக் கடுமையாகப் பயன்படுத்தியமையால் அவர் இரும்பு லாசர் என்று அழைக்கப்பட்டார். ஸ்டாலின் மறைவுக்குப் பின்னால் குருசேவுக்கு எதிராக கலகம் நடத்த முயன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது இன்னொரு ஸ்டாலினிசம் உருவாகும் காலகட்டம். ஆனால் இந்த இசம் முழுக்க முழுக்க வேறுமாதிரியானது. அதனுடன் இதை ஒப்பிடவே கூடாதுதான். ஆனால் இந்த சொற்பிரயோகம் முக்கியமானது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று திமுகவின் மு.க.ஸ்டாலின் தன் கட்சிப் பதவியைத் துறக்க முற்பட்டு அது நாடகம் என்று அழகிரி தரப்பால் விமர்சிக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். சந்தேகமில்லாமல் இன்று ஸ்டாலின் திமுகவின் வெற்றி தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருக்கிறார். குஷ்புவிலிருந்து பழனிமாணிக்கம், கே.பி.இராமலிங்கம் வரையிலான சலசலப்புகளுக்கு அவர் காரணமாகிறார். இப்போது அண்ணாயிசம், கருணாநிதியிசம் தாண்டி திமுகவின் ஸ்டாலினிசம் உருவாகிவிட்டது. இந்த புதிய இசம்
கட்சியை மீட்குமா?
தற்போது அதிரடியாக சுமார் 33 நிர்வாகிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் இதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.
“கடந்த தேர்தலில் மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் சொந்தக் கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க முயன்றார் அந்த பெரும்புள்ளி. அப்போதே அவரைக் கண்டித்திருக்கலாம். ‘இளைதாக முள்மரம் கொல்க’ என்பார்கள். இப்போது மரமான பின் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்தார் அந்திமழையிடம் பேசிய திமுக மூத்த நிர்வாகி ஒருவர். இதில் தவறு செய்தும் தப்பியவர்களும் தவறு செய்யாமல் சிக்கியவர்களும் உண்டு.
உதாரணத்துக்கு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளர் தேர்தலுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில்,“என் பொறுப்பில் உள்ள பகுதியில் அதிகம் வாக்குகள் வாங்கித் தருவேன். இது என் வேட்டி மீது சத்தியம். அப்படிச் செய்யாவிட்டால் இனி வேட்டியே கட்டமாட்டேன்” என்று கடும் ஆவேசத்துடன் சபதம் செய்தார். அத்துடன் சொன்னமாதிரியே 3000 வாக்குகள் அதிகமாக அந்த எம்பி தொகுதியில் அவர் பகுதியில் மட்டும்தான் திமுக அதிக வாக்குகள் பெற்றது. ஆனால் அவரை இடைநீக்கம் செய்துள்ளனர். இன்னொருவர் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பதவிக்கு நின்று தான் பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் திமுகவுக்கு அதிகம் வாக்குகளைப்பெற்றுத் தந்தார். அவருக்கும் இடைநீக்கமே பரிசு.
திமுகவுக்குள் உள்கட்சி ரீதியில் மாற்றங்கள் அவசியமே. அவற்றைப் பலரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தலைமையிடம் தெரிவித்துள்ளனர். அதில் முக்கியமானது,“ஒரே ஆள் இரண்டுமுறைக்கு மேல் தொடர்ந்து கட்சிப் பதவியில் தொடரக்கூடாது. பல்வேறு மாவட்டங்களை எடுத்துப் பார்த்தால் தந்தை பொறுப்பில் இருந்தால் அதன்பின்னர் மகன் இருக்கிறார். பல்லாண்டுகளாகவே பதவி ஒரே குடும்பத்தின் கையில் உள்ளது. ஒரே நபருக்கு தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ,, எம்.பி பதவியில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கக் கூடாது.” என்பதாகும். இப்படியொரு விதிமுறை கட்சி அளவில் கொண்டுவரப்பட்டால் புதியவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகும் என்கிறார்கள். (ஆனால் இது தலைமைக்கும் பொருந்துமா? என்று கேட்பவர்கள் கட்சிக்குள் இருக்கத்தான் செய்வார்கள். அதையும் சமாளித்துத்தான் ஆகவேண்டும்).
பொன்முடி, பன்னீர்செல்வம், நேரு, எ.வ.வேலு போன்ற செல்வாக்கு படைத்த மா.செ.க்களின் ஆட்சி எல்லைகள் திமுக கட்சி மாவட்டங்களை 65 ஆகப் பிரித்ததில் குறுக்கப்பட்டுவிட்டன. இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட இம்முடிவை கருணாநிதியும் அன்பழகனும்தான் முன்வந்து எடுத்திருக்கவேண்டும் என்று கட்சியினர் கருதுகிறார்கள். ஸ்டாலின் தனக்கு ஆதரவாளர்களாக இருக்கும் இந்த மா.செ.க்களின் அதிகாரம் குறைக்கப்படுவதை விரும்பியிருக்கமாட்டார் என்பதே கட்சிக்காரர்களின் கருத்தாக உள்ளது.
அதிமுக காரர்களுடன் ஒப்பிட்டு ஒரு விஷயத்தை திமுக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். “முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்குள் வேறு மாவட்டத்துக்கு அடிக்கடி போகமாட்டார். ஆண்டுக்கு ஒருமுறை போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உள்ளூர்காரர்கள் கட் அவுட் வைத்து நமது எம்ஜிஆருக்கு விளம்பரம் கொடுத்து கலகலப்பாக்குவார்கள். செலவழிப்பார்கள். ஆனால் திமுகவை எடுத்துக் கொண்டால் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாதத்துக்கு நான்குமுறை கட்சிக்காரர்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். நல்லது. ஆனால் ஒவ்வொருமுறை செல்லும்போதும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து கட் அவுட்கள், முரசொலியில் விளம்பரம் என்று கட்சிக்காரர்களுக்குச் செலவாகிறது. காசு இல்லாதவர்கள், குறுக்குவழியில் சம்பாதிக்காதவர்கள்கூட கடன்வாங்கி இதற்காகச் செலவழிக்க வேண்டி உள்ளது. அத்துடன் இப்போதெல்லாம் ஸ்டாலின் உடன் பாதுகாப்புக்குச் செல்லும் காவலர்கள் உள்ளிட்ட ஆட்கள் நிறையபேருக்குத் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டி வந்துவிடுகிறதாம். சிலசமயம் இந்த குழுவினரின் எண்ணிக்கை 60-ஐயும் தாண்டிவிடுகிறது”
“தளபதி சுற்றுப்பயணம் வருகையில் பொதுவான, எளிமையான இடங்களில் தங்கினால் சாதாரண தொண்டர்கள் அவரைச் சந்திக்க வசதியாக இருக்கும். அவரோ கட்சியில் பெரும்பணக்காரர்களின் அகண்ட மாளிகைகளில் தங்குகிறார். அப்போது அந்த மாளிகையில் நுழையவே சாமானியத் தொண்டன் கூசுகிற நிலமையும் உள்ளது” என்கிற ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் இன்னொருவர்.
திமுகவின் இன்றைய சிக்கலுக்குக் காரணம் தலைமை விரும்பும் மாவட்டச் செயலாளர்களே தேர்வாவதுதான். இதுதான் மா.செக்கள் விரும்பும் ஒ.செ., கிளைச்செயலாளர்களே தேர்வாகும் நிலையை உருவாக்குகிறது. “முன்பு அப்படி அல்ல. மா.செக் கள் சுயசெல்வாக்குடன் திகழ்ந்தார்கள். மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாவட்டச் செயலாளர் தேர்தலில் மலைச்சாமியைத் தோற்கடித்து பொன்.முத்துராமலிங்கத்தை வெற்றிபெறவைக்க தலைமை ஆசைப்பட்டது. அதற்காக அக்னிராசுவையும் அவரைச் சேர்ந்த வேட்பாளர்களையும் தேர்தல் நாளில் வெளியூருக்கு அனுப்பவேண்டியிருந்தது. ஆனால்
சென்னையில் ஆர்.டி.சீத்தாபதியை எதிர்த்து டி.ஆர்.பாலு நின்றபோது அப்போது இளைஞராக இருந்த ஸ்டாலின் ஆதரவு இருந்தும்கூட பாலு சொற்பவாக்குகளே வாங்கினார்.” என்று சுட்டிக் காட்டுகிறார் ஒரு திமுக பார்வையாளர்.
திமுக பார்க்காத தோல்விகள் இல்லை. ஆனால் இந்தத் தோல்வி எதிர்பாராதது மட்டுமல்ல. எல்லோரையும் கவலைப்படவும் வைத்திருக்கிறது. ஏனெனில் இந்திரா மறைவு, ராஜிவ் படுகொலை நடந்த காலகட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளை தங்கள் கட்சியின் ஒட்டுமொத்த தோல்வியாகப் பார்த்த தொண்டர்கள், இன்று தாங்கள் உயிருக்குயிராய் நேசித்த தலைவரின் குடும்பமே தோல்விக்குக் காரணம் என்று கருதும் சங்கடமான நிலை உருவாகி உள்ளது.
இப்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக தவறுகள் செய்தால் அடுத்த தேர்தலில் திமுக வென்றுவிடும் என்று முன்பிருந்ததைப் போல் சும்மா இருந்துவிடமுடியாத சிக்கல் அதற்குள்ளது. ஏனெனில் மத்தியில் மோடிக்கு கிடைத்திருக்கும் வெற்றி, தமிழகத்தில் பாஜக உருவாக்கிய கூட்டணியை சட்டமன்றத்துக்கும் நீடிக்கச் செய்தால் பெரும் போராட்டத்தை திராவிடக் கட்சிகள் இரண்டுமே எதிர்கொள்ள நேரிடலாம். இந்த பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் உள்ளார்.
“தலைமைக்கு வருகிறவர்கள் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று விமர்சனம். தான் விரும்புவனவற்றையே சொல்லக்கூடியவர்களைக் கூட வைத்திருப்பது மகிழ்ச்சியைத் தரும். ஆனால் தனக்குப் பிடிக்காத ஆனால் உண்மையான விஷயங்களைச் சொல்லக்கூடிய சில ஆட்களையும் உடன் வைத்திருக்கவேண்டும். இந்த விஷயத்தை தளபதி புரிந்துகொண்டிருக்கிறாரா என்பது சந்தேகத்துக்குரியதாக உள்ளது” என்று சொல்கிறார் நாம் பேசிய திமுக மூத்த உறுப்பினர்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக இப்போதைக்கு ஸ்டாலின் செய்யவேண்டியது ஒன்றுள்ளது. 61 வயதான தளபதி இன்னும் தன் கையிலேயே இளைஞரணிச் செயலாளர் பதவியை எத்தனை நாளுக்கு வைத்திருப்பார்? அதை இன்னொருவரிடம் அவர் ஒப்படைக்கும் நாளில்தான் உண்மையான ஸ்டாலினிசம் தொடங்குகிறது.
ஏனெனில் திமுகவின் கொள்கைகளால், சமூக அடுக்குகளில் வளர்ந்த இளைஞர்களிடமிருந்து அக்கட்சி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. புதிய இளைஞர்களை ஈர்க்கும் தேவையும் உருவாகி உள்ளது.
ஜூலை, 2014.