சிறப்புக்கட்டுரைகள்

வேண்டாம் பிடிவாதம்

ராம்பாபு

எங்கள் மருத்துவமனையில் நடுத்தரவயதான ஒரு பெண்மணியை  அவரது கணவர் சிகிச்சைக் காக சேர்த்திருந்தார். அவரது உடல் நிலை சரியாக இல்லை. கிட்டத்தட்ட அவர் பிழைக்கமாட்டார் என்ற நிலை. கணவருக்கு மனைவி மீது ஏதோ பிரச்னையில் கடுங்கோபம். அதனால் மனைவியிடம் அவர் பேசுவதை நிறுத்தியிருந்தார். ஆனாலும் கணவன் என்ற முறையில் கடமை ஆற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார். எவ்வளவு  செலவாகிறதோ ஒவ்வொரு நாளும் என்னிடம்  சொல்லுங்கள் நான் கட்டிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அவர் ஓர் அறை எடுத்து அதில் தங்கிக்கொண்டார். மனைவியைப் பார்ப்பதில்லை. பிற உறவினர்கள்தான் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பெரும்  கஷ்டமாகிவிட்டது. இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாயே; அவள் இறக்கும் தறுவாயில் இருக்கிறாள். நீ வந்து பேசு என்று அவரிடம் சொல்லிப் பார்த்தார்கள். அந்த மனிதர் கேட்கவே இல்லை. அந்த அளவுக்கு அவருக்குப் பிடிவாதம்.  இந்த சம்பவத்தில் என்ன ஆனது என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.

பிடிவாதம் என்பது மிக சிக்கலான ஒரு விஷயம். குழந்தைகள் பல பொருட்களைக் கேட்டு பிடிவாதம் பிடிப்பார்கள். சிலவற்றை வாங்கிக்கொடுப்போம். பலவற்றை வாங்கித்தராமல் சமாளிப்போம். பிடிவாத குணத்துடன் பல குழந்தைகள் வளர்வதையும் பார்க்கிறோம். பிடிவாதம் பெரியவர்களிடம் இருக்கும்போது அதனால்  அவர்கள் வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுகிறது. உறுதியாக இருப்பது வேறு பிடிவாதம் என்பது வேறு.  ஒரு வேலையை எப்படியாகிலும் முடிப்பேன் என்பது உறுதி. யார் என்ன ஆனாலும் பரவாயில்லை ஒரு விஷயம் எனக்கு கிடைத்தே ஆகவேண்டும்  என்று இருப்பது பிடிவாதம். இதனால் நிறைய வாழ்க்கையில் இழக்கவேண்டிவரும். நான் சொன்னதைத்தான் கேட்கவேண்டும் என்பார்கள். சண்டைபோட்டால் பேசமாட்டார்கள். எதிலும் சமரசம், ஒத்துப்போதல் என்கிற பேச்சே இருக்காது. தான்  நினைத்தது நடக்கவேண்டும் என்பார்கள்.

குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் பிடிவாதம் ஏற்பட்டால் நரகம்தான். ஒரு கதை சொல்கிறேன். உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஓர் இரவு ஒரு தம்பதிக்கு இடையே சண்டை. முற்றிப்போய்விட்டது. மனைவியுடன் பேசவே போவதில்லை என்று கணவன் முடிவு செய்கிறார். மறுநாள் காலையில் அவருக்கு  விமானம்  பிடிக்கவேண்டும். எழுப்பிவிட மனைவியிடம்தான் சொல்ல வேண்டும். இவர்தான் பிடிவாதக்காரர் ஆயிற்றே. மனைவியிடம் பேசவேண்டாம் என தீர்மானித்து  ஒரு தாளில் நாளைக்கு காலையில் ஐந்துமணிக்கு எழுப்பவும் என்று எழுதி மனைவியின் தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு உறங்கினார். நல்ல உறக்கம். காலையில் எழுந்துபார்த்தால் மணி எட்டு. விமானம் போய்விட்டது. மனைவியைப் பார்த்து காச்சு மூச்சு என்று கத்தினார்.  என்னிடம் சொல்லவே இல்லையே என்றார் மனைவி அமைதியாக. நான் தான் தாளில் எழுதி வைத்தேனே என்றார்.  அவரைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று அவரது தலையணையை தூக்கி ஒரு தாளைக் காண்பித்தார் மனைவி. அதில் ஐந்து மணி ஆகிவிட்டது எழுந்துகொள்ளுங்கள் என்று இருந்தது. பிடிவாதத்தைக் கைவிட்டு மனைவியிடம் இரவே பேசியிருந்தால் இது நடந்திருக்குமா?

ஆரம்பத்தில் நான் சொன்ன எங்கள் மருத்துவமனையில் நடந்த விஷயத்துக்கு வருவோம். பல நாட்கள் வரை கணவருக்கு மனமே இரங்கவில்லை. அப்புறம் ஒரு நாள் வந்தார். மரணப்படுக்கையில் இருந்த மனைவி அருகில் நின்று பேச முற்பட்டார். ஆனால் மனைவி உயிர் பறந்துபோய்விட்டது. ஓவென அவர் கதறி அழுதுவிட்டார். இவ்வளவு நாள் அவளுடன் பேசாமல் இருந்ததால் நான் என்ன இழந்திருக்கிறேன் என்று இப்போதுதான் உணர்கிறேன், என்று சொல்லிச் சொல்லி அழுதார். இப்போ அழுது என்ன பிரயோசனம் என்று எல்லோரும் சொன்னார்கள்.

பிடிவாதமாக இருந்து உறவுகளை இழப்பது நல்லதா? சின்ன சமரசங்கள் மூலம் வாழ்க்கையை இனிமையாக்கிக்கொள்வது புத்திசாலித்தனமா? யோசியுங்கள்.

(கட்டுரையாளர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையின்  நிர்வாகி)

செப்டம்பர், 2016.