சிறப்புக்கட்டுரைகள்

வேகமான மனிதர்!

உலகம் உன்னுடையது

செல்வ திருமகன்

ரெட்சன் அம்பிகாபதி

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது வீடுவீடாகச் சென்று பத்துரூபாய் வாடகையில் வீடியோ கேசட் விற்றுக்-கொண்டிருந்தார் அம்பிகாபதி. அப்போது சைக்கிளில்தான் பயணம். இப்போது அவர் அழைத்த அழைப்புக்கு வருவதற்கு சுமார் 5000 கார்கள் காத்திருக்கின்றன. நாம் அழைத்தாலும் அவை வருவதற்குத் தயார். ஆமாம்! அம்பிகாபதி பாஸ்ட் ட்ராக் கால்டாக்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

“கல்லூரியில் படிக்கும்போது பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக எங்கள் பகுதியில் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு வீடுவீடாக வாடகைக்கு விடுவேன்.அதுதான் நான் செய்த முதல் தொழில். அதில் பலருடைய அறிமுகம் கிடைத்தது. ரெட்சன் என்ற பெயரில் வீடியோ கடையும் ஆரம்பித்தேன். பின்னர் கேபிள் தொழில்.அதிலும் பழைய வாடிக்கை-யாளர்-கள்தான் கை கொடுத்தார்கள். மற்றவர்கள் 500 ரூபாய் டெபாசிட் வாங்கிக்கொண்டு இணைப்புகள் கொடுத்தபோது என்மீது உள்ள நம்பிக்கையால் என் வாடிக்கையாளர்கள் 1500 ரூபாய் கொடுத்து உதவினார்கள்.” என்று தன் தொழில் வாழ்க்கையின் ஆரம்பம் சொல்கிறார் ’ரெட்சன்’ அம்பிகாபதி.

பின்னர் கேபிள் தொழிலில் இருந்த தன் பங்குதாரர்களுடன் இணைந்து மோட்டார் தொழிலில் ஈடுபட முடிவு செய்தார். இதற்காக பெங்களூருவில் செயல்பட்டு வந்த ரேடியோ டாக்சி நிறுவனங்களைப் போய் பார்த்துவிட்டு வந்தார்கள். இங்கே வந்து 2001-ல் வங்கியில் கடன்வாங்கி 50 டாக்சிகளை வைத்து பாஸ்ட் ட்ராக் என்ற பெயரில் வயர்லெஸ் வாடகை டாக்சி தொடங்கியிருக்கிறார். பின்னர் அதை 100 டாக்சிகளாக அதிகப்படுத்தி ஓட்டினார்கள். ஆனால் வாகனத் தொழில்களுக்கே உள்ள சிரமங்களால் தொழில் நன்றாகப் போகவில்லை. ஒரு கட்டத்தில் வண்டிகளுக்கான மாதத் தவணையே கட்டமுடியவில்லை. நம்பிக்கையிழந்த சில பங்குதாரர்கள் விலகிக்கொள்ள பெரும் சவாலை சந்தித்தார் அம்பிகாபதி.

“சிரமமான அந்த நேரத்தில் ஒரு முடிவெடுத்தேன். எங்களிடம் இருந்த அனைத்து வண்டிகளையும் அதை ஓட்டிவந்த ஓட்டுநர்களிடமே கொடுத்துவிடுவது என்ற முடிவுதான் அது. அவர்களுக்கே விலை வைத்துக் கொடுத்தோம். அவர்கள் தொடர்ந்து எங்கள் நிறுவ

னத்துக்கே கார்களை ஓட்டினார்கள். சுமார் 100 வண்டி உரிமையாளர்களை உருவாக்கிய பெருமை எனக்கு அப்போது இருந்-தாலும் இது சரிப்படாது என்று சொன்னவர் களும் இருந்தார்கள். ஆனாலும் எனக்கு அதுதான் சரியெனப் பட்டது. மாதம் கால்சென்டருக்கு என்று ஒரு கட்டணம் வாங்கிக் கொண்டோம். கடந்த பத்தாண்டுகளில் இன்று எங்களிடம் சுமார் 5000த்துக்கும் மேற்பட்ட கார்களுடன் ஓட்டுநர்கள் இணைந்துள்ளார்கள். ஏராளனமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் ஃபாஸ்ட் ட்ராக் பணிபுரிகிறது. விரைவில் 6000 கார்கள் என்ற எண்ணிக்கையை எட்டுவோம்” அம்பிகாபதி நம்பிக்கையுடன் பேசிக்கொண்டே போகிறார்.

இவர் கால்டாக்சி சேவை ஆரம்பித்தபோது பாரதி கால்டாக்சி நிறுவனமும் களத்தில் இருந்தது. இப்போது புதிதாக கால் டாக்சி நிறுவனங்களும் நுழைந்துள்ளன. இருப்பினும் எண்ணிக்கையில் முதலிடத்தில் பாஸ்ட் ட்ராக்தான் நீடிக்கிறது.

“இது ஓட்டுநர்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவைப் பொருத்தது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பொருத்தது. எல்லா மாதங்களிலும் போதுமான அளவுக்கு வாடிக்கையாளர்கள் அழைப்பு இராது. அப்போது ஓட்டுநர்களை சுயமாக சவாரி பிடித்து ஓட்டி சமாளிக்குமாறு ஊக்கப்படுத்துகிறேன். பத்துநாள் வண்டி ஓட்ட முடியாமல் போனால்கூட அந்த தினங்களுக்கான மாதக்கட்டணத்தைக் கழித்துக் கொள்கிறோம். விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் அந்த ஓட்டுநரை விபத்துக்கால பிரிவு என்ற ஒரு பிரிவில் சேர்த்து நிறைய வருமானம் வரும் அளவுக்கு வண்டி ஓட்ட வாய்ப்பினை வலுக்கட்டாயமாக நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். ஏனெனில் அவர்கள் விபத்தால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய உதவ வேண்டுமல்லவா? இது போன்ற சில அம்சங்களால்தான் ஓட்டுநர்கள் எங்களுடன் தொடர் ஒப்பந்த்தில் நீடிக்கிறார்கள். அத்துடன் எங்கள் கால்டாக்சி சுத்தமாகவும் டிரைவர் சீருடையிலும் இருக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறேன். காரில் ஏறியபிறகு ஏசியைப் போட்டு வண்டி ஓட்டவேண்டும். கண்ணாடியைத் திறந்து வைத்து ஓட்டகூடாது. நன்றாக சேவை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இது போன்ற தொடர்கண்காணிப்புகள் வெற்றிக்கு உதவிகரமாக உள்ளன.”

அம்பிகாபதி ஓட்டுநர் ஓசை என்ற பத்திரிகையையும் ஓட்டுநர்களுக்காக நடத்துகிறார். அவரை நான் சந்திக்கச் சென்றிருந்த நேரத்தில் இன்னொரு போட்டி கால் டாக்சி நிறுவனத்தில் சேர்ந்திருந்த ஓட்டுநர்கள் அதை விட்டு விலகி பாஸ்ட் ட்ராக்கில் இணைய வந்திருந்ததைக் கண்டேன். வரிசையாக ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைச் சீட்டுகளுடன் வந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். சவாரி அதிகம் இல்லை; டல்லாக இருக்கிறது என்று குறை சொல்லும் ஓட்டுநர்களுக்கு சொந்தமாக சவாரி பிடிக்க முயற்சி செய்யுமாறு அறிவுரை கூறி அனுப்புகிறார்.

“உங்கள் நிறுவனத்தில் குறைந்த பட்ச தொலைவுக்குப் போகும் கட்டணமாக 100 ரூபாய் வைத்திருக்கிறீர்கள். பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் குறைந்த பட்ச கட்டணம் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்குள்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன். அம்பிகாபதி சளைக்கவில்லை.

‘’நீங்கள் சொல்லும் அவ்வளவு ஊரிலும் பத்து பத்து அழைப்புகளை குறைந்தபட்ச கட்டணத்தொலைவுக்காக அழையுங்கள். எந்த ஊரில் உங்களுக்கு அந்த குறைந்த கட்டணச் சேவைக்கு எத்தனைபேர் வருகிறார்கள் என்று பார்ப்போம். அதே அழைப்பை சென்னையில் எங்கள் எண்ணுக்கு அழைத்துச் செயல்படுத்திப் பாருங்கள். மறுப்புச் சொல்லாமல் வருவார்கள். பிற இடங்களில் குறைந்த பட்ச தொகை குறைவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போவதாக இருந்தால்தான் வருவார்கள்..” என்று பதில் சொல்கிறார் அம்பிகாபதி.

அவரது அலுவலகத்தில் சுமார் 400 பேர் பணிபுரிகிறார்கள். ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் புரளும் தொழில். இப்போது சுமார் 2000 கார்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட்டிருக்கிறது. மீதி கார்களிலும் விரைவில் பொருத்தி விடுவோம் என்கிறார் இவர்.  

மார்ச், 2013.