சிறப்புக்கட்டுரைகள்

வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டானா?

திருமால்ராஜ்

ஜெர்மனியில் பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். அமெரிக்காவை போலவே ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலையை உருவாக்க ஹிட்லரின் முயற்சியில் 1937ம் ஆண்டு போக்ஸ்வாகன் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  இன்று உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமாக அது உள்ளது. ஆனால் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களையும் அரசையும் ஏமாற்றியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வாகன புகையளவை அளவிடும் மென்பொருள் கருவியில் தகிடுதத்தம்  செய்ததாக இதன்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் கார்டெர் என்ற பொறியாளரும் அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலரும் சேர்ந்து  நடத்திய ஆய்வில் இந்த மோசடி தெரியவந்துள்ளது.

2012ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, மற்றும் கலிபோர்னியா காற்று வள வாரியம்(California Air Resourse Board) ஆகியவற்றுடன் இணைந்து ஆதாரத்துடன் நிரூபித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இந்த செய்தி வெளியான நாள்முதல் நிறுவன பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்துகொண்டிருந்த நிலையிலும் போக்ஸ்வாகன் மவுனம் சாதித்தது. பின்னர் அமெரிக்கா, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்படும் என்று அறிவித்த நிலையில் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது. தங்கள் நிறுவன தயாரிப்புகளான பசாட், ஜெட்டா உள்ளிட்ட டீசல் கார்களில் இந்த மோசடி நடந்திருப்பதாகவும், சுமார் 1.10 கோடி கார்கள் தயாரிக்கப்பட்டு, அதில் 50 சதவிகிதம் அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளதாகவும்,அரசு நடத்தும் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எந்த அமெரிக்க சூழலை முன்மாதிரியாக கொண்டு போக்ஸ்வாகன் ஆரம்பிக்கப்பட்டதோ, அதே அமெரிக்க  நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றுகொண்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு காருக்கு 37,500 டாலர் (சுமார் ரூ.24.75 லட்சம்) வீதம் போக்ஸ்வாகன் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக போக்ஸ்வாகன் 1,800 கோடி டாலர் (சுமார் ரூ.1.19 லட்சம் கோடி) வரை அபராதம் செலுத்த நேரிடலாம்.

இது குறித்து தென்கொரியாவிலும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தென்கொரிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை இயக்குநர் பார்க் பான் கியு தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜெர்மனி, கொரியா இடையே நடைபெற்ற தாராள வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து அந்நாட்டுக்கு கார்கள் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. மேலும் தென்கொரியா இறக்குமதி செய்யும் கார்களில் மூன்றில் இரண்டு பங்கு டீசல் கார்கள். கடந்த எட்டு மாதங்களாக தென்கொரியாவில் ஏராளமான போக்ஸ்வாகன் கார்கள் விற்பனை ஆகி உள்ளன.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின், தன்னைப் பொறுத்தவரை எந்தத் தவறும் நடந்தது தனக்குத் தெரியாது என்று சொன்னார். ஆனால் நிறுவனத்தின் நலன்களை மனதில் வைத்து பதவி விலகுகிறேன் என்று விலகிவிட்டார்.

உலக நாடுகளில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே தவிர இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஜெட்டா, போலோ, நியூ வெண்டோ போன்ற போக்ஸ்வாகன் நிறுவன தயாரிப்புகள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். பொதுவாக  சிவப்பாக இருப்பவன் ஏமாற்ற மாட்டான் என நம்பி விடுவது நம்மவர் பழக்கம். அந்த நம்பிக்கைக்கு ஆப்பு அடித்திருக்கிறது போக்ஸ்வாகன். எத்தனையோ அந்நிய நிறுவனங்கள் இங்கே வரிஏய்ப்பு செய்து, மோசடி செய்து தப்பிச் செல்கின்றன. போக்ஸ்வாகன் என்ன ஆகும்? இது நிச்சயம் அமெரிக்கா அல்ல.

அக்டோபர், 2014.