சிறப்புக்கட்டுரைகள்

வெற்றிப் பிள்ளை!

சஞ்சனா மீனாட்சி

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக 14 பேரோடு தொடங்கியது ஓர் இயக்கம். இன்று அதில் எட்டு லட்சம் பேர் உறுப்பினர்கள். பன்னிரெண்டு மாநிலங்களில் விரிந்துகிடக்கும் அந்த அமைப்பின் தலைவிக்குக் கையெழுத்து மட்டுமே போடத்தெரியும். ஒரு குக்கிராமத்தில் தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட வீட்டில்தான் வசிக்கிறார். பிரதமரே காலில் விழுந்த பெருமைக்குச் சொந்தக்காரரான சின்னப்பிள்ளையின் வெற்றிக்கதை.

துல்லியமும் ஈடுபாடும்

மதுரை அருகே உள்ள பில்லுச்சேரியில் வசித்து வந்தாலும் சின்னப்பிள்ளை பிறந்த ஊர் மதுரை மாவட்டம்  அழகர்கோவில் அருகேயுள்ள  கள்ளந்திரி

கிராமம். அப்பா பெரியாம்பளை.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைவிவசாயி. அம்மா பெருமி. இவர்களுக்கு இரண்டு ஆண். இரண்டு பெண்

குழந்தைகள்.கடைசி குழந்தை பெண். அதுதான் சின்னப்பிள்ளை. ஏழு  வயசிலேயே சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை. எந்த  வேலையானாலும் செய்யும் வேலையில்  துல்லியம், ஈடுபாடு

காட்டியிருக்கிறார் சின்னப் பிள்ளை. அதனால் பெரியாம்பளைக்கு கடைசி மகளான சின்னப்பிள்ளை மீது அலாதி பிரியம்.

‘வீட்டுச்செலவு கணக்கு, நெல் அள்ளிப் பாடறதை கணக்கு வைக்கிறது எல்லாம் என் மனசுக்குள்ளேயே ஞாபகமா வைச்சிருப்பேன். அப்பா வந்தவுடன் சொல்வேன். பூரிச்சி போவாரு..’ சின்னப்பிள்ளை சின்னக்குழந்தையாகவே பேசுகிறார்.

போராட்டமும் முதல் வெற்றியும்: பனிரெண்டு வயதில் திருமணம். சின்னப்பிள்ளைக்கு இரண்டு ஆண். மூன்று பெண் குழந்தைகள். இப்போது இரண்டுஆண்கள் மட்டுமே உயிரோடு  இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகள் பிறந்தவுடனேயே கணவருக்கு தீராத வயிற்றுவலி. வேலைக்குச் செல்ல முடியவில்லை.

வீட்டில் முடங்கினார். சின்னப்பிள்ளையின் அப்பாவும் இந்த நேரத்தில் இறந்து போனார். போராடவேண்டிய நிலை. இந்த சூழ்நிலை தான் சின்னப் பிள்ளையின்வாழ்க்கை வரலாற்றுமுகடுகளைத் தொட பிள்ளையார் சுழி போட்டது. ‘நான் விவசாய வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். காடுகரையில் நாள் முச்சூடும் வேலை பார்த்தால் கிடைக்கிறசொற்ப பணமும் அவரது மருத்துவச் செலவுக்கே சரியா போச்சு.

என் பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியலை.’ விவசாய வேலைக்குப் போனபிறகு தான் இவர் அதிலுள்ள சிக்கல்களை உணர்ந்தார்.வேலை  செய்தவர்களுக்குச்  சரியாக கூலி கிடைப்பதில்லை. அதோடு நிறையபேர்

வேலையும் இல்லாமல் இருப்பது அவரை வருத்தியது. சின்னப்பிள்ளை ஒரு முடிவு செய்தார். எப்படி கட்டட வேலைக்கு காண்ட்ராக்ட் எடுப்பார்களோ அதுபோல விவசாய நாற்றுநடும் வேலைக்கு காண்ட்ராக்ட் எடுக்க முடிவு செய்தார். அதற்காக நில உரிமையாளர்களைச் சந்தித்தார்.

ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் என மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து அதில் வேலைஇல்லாத இருபது முப்பது பேருக்கு வேலை கொடுத்தார்.  மொத்தமாக பணம்  வாங்கி அதை வேலை செய்பவர் அனைவருக்கும் சரிசமமாகப் பிரித்துகொடுத்தார். இதுதான் அவரது முதல் வெற்றி.

ஏமாற்றம் தந்த பாடம்:  தன்னம்பிக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும்நேரத்தில் தான் மான்யத்துடன் கூடிய வீடு வாங்கித் தருகிறோம் எனச் சொல்லி சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாய கூலிகளிடம் சிலர் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்திருக்கிறார்கள். ‘ இலவச வீடுவாங்க ரெவின்யூ இன்ஸ்பெக்டரை போய் பார்க்கப்போவோம். அவரு ஆடு கொண்டா.. கோழிகொண்டா.. எனஅருள் வந்த சாமி மாதிரி லஞ்சம் கேப்பாரு. நானே ஒரு தடவை பத்து கிலோ மீன் வாங்கிக் கொடுத்தேன்.

ஒண்ணும் நடக்கலை’ என சிரித்துக்கொண்டே சொல்கிறார் சின்னப்பிள்ளை. இப்படி  ஏமாந்திருந்த நேரத்தில் தான் தானம்  அறக்கட்டளைத்  தலைவர் வாசி மலை தனது குழுக்களுடன் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார்.

அவர்களும் இந்த கடன், சுய உதவிக்குழுக்கள் எனப்பேச.. சின்னப்பிள்ளைக்கு சந்தேகம் எட்டிப்பார்த்திருக்கிறது.. ஆனால் அவர்கள் விடாமல் தொடர்ந்து வந்து பேசிய பிற்பாடு தான்சின்னப்பிள்ளைக்கு லேசான நம்பிக்கை துளிர்த்திருக்கிறது என்றாலும் அவருடன் சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

முதல் சுய உதவிக் குழுவும் சவாலும்:  சின்னப்பிள்ளை சுயஉதவிக்குழு தொடங்கியபோது சேர்ந்தவர்கள் பதினான்கு பேர் மட்டும் தான். இவர்கள் போட்ட பணம் இவர்களுக்குள்ளேயே சுழன்றிருக்கிறது. இவர்களுக்குதானம் அறக்கட்டளையினர் ஆலோசனையும் நிதியுதவியும் அளித்திருக்கிறார்கள். தனது கிராமத்து மக்களிடம் மட்டு மில்லாமல் சுற்று வட்டார கிராமங்களுக்கும் சென்று மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கு சின்னப் பிள்ளை பிரசாரம் செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழுக்களின்எண்ணிக்கை மளமளவென அதிகரித்திருக் கிறது..  சின்னப் பிள்ளை பாப்புலர் ஆனார். இவர் எதிர்கொண்ட சவால் களில் முக்கியமானதொன்றாக இவர் சொல்வது கிராமத்து கண்மாயை ஏலம் எடுத்தது. மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் சேர்ந்து கிராமத்து கண்மாயில்மீன் பிடிக்கும் உரிமையை  குத்தகைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதை கிராமத்தில் சொன்னபோது பொம்பிளைக கண்மாயை ஏலம் எடுக்கிறதா என பலர் கேலிசெய்தார்கள். ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை நிரப்பி அதிகாரியிடம் கொண்டுபோனபோது ஏலம் எடுக்க வந்திருந்தவர்கள் விசிலடித்தும் கை தட்டியும் இவர்களைக் கேலி செய்தார்கள். ஆனாலும் அதையும் மீறி தமிழ்நாட்டிலேயே முதல்முதலில் மகளிர் சுயஉதவிக்குழு கண்மாய் குத்தகைக்கு எடுத்து சாதனையை நிகழ்த்தியது சின்னப்பிள்ளைதான்.

வளர்ச்சி

சுய உதவிக்குழு துவங்கி பதினான்கு பேருக்கு தலைவியாக இருந்த சின்னப்பிள்ளைஅடுத்த மூன்றாண்டுகளில் முன்னூறு பேருக்கு தலைவியானார். அடுத்த மூன்றாண்டுகளில் அந்தஎண்ணிக்கை ஐந்தாயிரம் ஆனது.

தொடர்ந்து ஏழு மாநில களஞ்சிய சுயஉதவிக்குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினரானார். இந்தப் பொறுப்பில் ஏழாண்டுகள் இருந்தார். இப்போது அந்த இயக்கத்தின் தலைவி இவர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச் சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட பன்னிரெண்டு மாநிலங்களைச் சேர்ந்த இருநூற்று நாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இந்த கூட்டமைப்புகளிலுள்ள உறுப்பினர்களின்எண்ணிக்கை எட்டு லட்சம். ‘இன்னும் லட்சக்கணக்கான ஏழை எளிய பெண்கள் இயக்கத்தின் கீழ் வராமல்இருக்கிறாங்க. அவர்களை எங்கள் இயக்கத்தில் சேர்ப்பது தான்  இலக்கு...’ என்கிறார் சின்னப்பிள்ளை.

எப்படி?

லட்சக்கணக்கான உறுப்பினர்கள்.. கோடிக்கணக்கில் பணம். ஆனாலும்சின்னப்பிள்ளைக்கு இன்னும் சரியாக எழுதப்படிக்கத் தெரியாது. ‘ஏதானாலும் வாசிக்கச் சொல்லிஉன்னிப்பா கவனிச்சுக்கிடறேன். கணக்கு

வழக்குப் பார்க்கஉன்னை மாதிரி படிச்ச புள்ளைகளை  வேலைக்கு வச்சிருக் கேன். அதுக  பார்த்துக்கிடும். செக்கில நான் கையெழுத்துப்  போடுவேன்.’ என்கிறார்.  தனக்குக்  கிடைத்தஸ்திரீ புரஸ்கார் பரிசுப்பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தை களஞ்சிய இயக்கத் தலைவி களின்மருத்துவ செலவிற்காக அறக்கட்டளை உருவாக்கியிருக்கிறார். அவரது மருத்துவச் செலவை இயக்கம் பார்த்துக்கொள்கிறது.

இன்னமும் பஸ் பயணம் தான். ‘பஸ்சில் போறதுக்குப்பதிலாக ஒரு ஆட்டோ வச்சுக்கிடக்கூடாதா?’  கேட்டேன்.  ‘இந்த விருது, பணம் எல்லாம் கிடைக்கும்னு நினைச்சு நான் இதையெல்லாம் செய்யலை. ஆரம்பத்தில எப்படிஇருந்தேனோ அந்த வழக்கத்தையும் மாத்திக்க தயாரா இல்லை..’ நெத்தியடி  அடிக்கிறார் சின்னப் பிள்ளை.

செப்டெம்பர், 2012.