சிறப்புக்கட்டுரைகள்

வெற்றிச்சிரிப்பு

உலகம் உன்னுடையது

அசோகன்

நாடு விடுதலை அடைவதற்கு முன்னால்  பர்மா,  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் குடும்பத்தொழிலை ஏற்று சிறப்பாக நடத்தி வந்த இளைஞர், பின்னாளில் தாதா சாகேப் பால்கே விருது பெரும் அளவுக்கு பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார். இது விஜயா-வாகினி ஸ்டூடியோ, இன்றைய விஜயா மருத்துவமனை ஆகியவற்றின் நிறுவனரான பி.நாகிரெட்டியின் வெற்றிக்கதை. இதன் பின்னால்  இருப்பது ஆந்திர கிராமம் ஒன்றில் பிறந்து  தொழிலுக்காக சென்னைக்கு வந்து தன் உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதரின் வெற்றிக்கதை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சென்னையில் இருந்து ஏராளமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பர்மா நோக்கி அந்த கப்பல் கிளம்பிற்று. ஏராளமான கடன்களை வாங்கி சரக்குகளைத் தயார் செய்து அனுப்பியிருந்தார் அந்த வணிகர். ஆனால் ஜப்பானியர் கையில் கப்பல் சிக்கிக்கொண்டது. பெரிய நஷ்டம்.. மனைவி சேஷம்மா  நகைகளைக் கழற்றிக்கொடுக்க, கடன்களை அடைத்தார் அந்த வணிகர். சென்னை ஜார்ஜ்டவுனில் இருந்த வீடும் அடமானத்துக்குப் போனது. சென்னையில் வியாபாரத்தைக் கைவிட்டு கடன்தொல்லையுடன் அந்த வணிகரின் குடும்பம்  நெல்லூருக்கு மாமனார் வீட்டுக்குப் போய்விட்டது.  பின்னர் ஓரம்பாடு என்ற கிராமத்துக்கு ஒரு குடிசை வீட்டில் குடியேறினார்கள்.

ஆனால் கடன் சுமை இருந்தது. அந்த கடனையும் அடைக்கவேண்டுமே என்று அவர் யோசித்தார். அந்த வணிகருக்கு பர்மாவில் பணம் தரவேண்டியவர்கள் நிறையபேர் இருந்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப்போரை ஒட்டி அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாது. அப்போது ஒரு கடிதம் வந்தது. பணம் தரவேண்டியவர்கள் கராச்சிக்குப் பக்கத்தில் ஹத்துராம் என்ற கிராமத்தில் இருக்கிறார்கள் எனத் தெரிந்தது. அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை நடக்கவில்லை. ஆபத்தான ஒரு ரயில் பயணத்துக்குப் பின்னால் ஹத்துராம் போய்ச்சேர்ந்தார். அங்கே ரயிலில் இறங்கி யாரையும்  தெரியாமல் நின்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரங்கூனில் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தபோது பெற்ற அன்னையாக அவரைக் கவனித்துக்கொண்ட இஸ்லாமியப் பெண்மணி  எதிரே வந்தார். தலைக்கு எண்ணெய் கொடுத்து, சாப்பாடு போட்டு,  அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு கிராமத்துக்குள் போனார். ரயில் பெட்டியிலேயே வணிகர் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். மூன்றாவது நாள் அந்த தாய் அவரை அழைத்துக்கொண்டு போனார். ஒரு மரத்தடியில் அவருக்குப் பணம் தரவேண்டியவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களோ பர்மாவிலேயே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவர்கள். அவர்களிடம் எப்படி கறாராக வசூல் செய்வது? அவர்கள் முன்னால் தோளில் போட்டிருந்த துண்டை விரித்தார். ‘’ உங்கள் சகோதரனாக இங்கே நிற்கிறேன். உங்களால் முடிந்ததைப் போடுங்கள்’ என்றார். ஒரு திரைப்படக் காட்சிபோல் அது இருந்தது. அவர்களிடம் இருந்ததையெல்லாம் அந்த துண்டில் போட்டார்கள். எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். அந்த தாயின் கால்களை கண்ணீரால் நனைத்துவிட்டு ரயிலில் ஊர் திரும்பினார். ”அந்த கடனில் ஒரு பகுதியை அப்பணத்தால் அடைத்தேன். ஆனால் அந்த தாய்க்குப் பட்ட அன்புக் கடனை அடைக்கமுடியவில்லை” என்று பின்னாளில் நினைவுகூர்ந்தார் அந்த வணிகர். அவர்தான் பி. நாகிரெட்டி.

கிராமத்தில் இருந்த  நாகிரெட்டியை அவரது அண்ணனும் திரைப்பட இயக்குநருமான பி.என்.ரெட்டி சென்னைக்கு அழைத்து அவர்கள் எடுத்த ’பக்த போதனா’  என்ற படம் பெங்களூருவில் ரிலீஸ் ஆகப்போவதாகவும் அதற்கு விளம்பரம் செய்ய பெங்களூர் செல்லவேண்டுமெனப் பணித்தார். பெங்களூரில் ஜெமினியின் பால நாகம்மா ரிலீஸ் எனவே, பெரிய பப்ளிசிட்டி.  இதற்கு இடையில் நம்மால் விளம்பரம் செய்ய புதிதாக யோசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மல்லேஸ்வரம் சர்க்கிள் மேட்டில்  பத்தடி உயர மேடையில் முப்பது அடி உயர ஆஞ்சநேயர் கட் அவுட்டை அமைத்தார். பீடத்தில் பக்தபோஜனா விளம்பரம் வைத்தார்கள். மக்கள் கூட்டமாக வந்து ஆஞ்சநேயரை தரிசித்தனர். படமும் தியேட்டர்களில் க்யூ  வைக்கும் அளவுக்கு மக்கள் திரளால் போட்டிபோட்டு பார்த்து ரசிக்கப்பட்டது.

திரும்பவும் கிராமத்துக்கே வந்த நாகிரெட்டி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். சென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அவரது அண்ணனும் நண்பர்களுமாக சேர்ந்து ஐவர் சென்னைக்கு வரச்சொல்லி  எழுதினர். அவரோ தயங்க, கே.ராம்நாத் (பின்னாளில் இயக்குநர்) நேரே வந்து வற்புறுத்தி அழைத்துப்போனார். அந்த ஐவரும் சேர்ந்து ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அவரது மாமனார் கொடுத்த இன்னொரு ஐயாயிரத்துடன் சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கினார் நாகிரெட்டி. அவர் தொடங்கிய தொழில் அச்சுத்தொழில். ஏற்கெனவே இருந்த பி.என்.கே. பிரஸ் அச்சகத்தை இன்னொரு அச்சு இயந்திரம் வாங்கிப்போட்டு நடத்த ஆரம்பித்தார். அப்போது சக்கரபாணி என்கிற எழுத்தாளரின் நட்பு நாகி ரெட்டியாருக்கு ஏற்பட்டது. இது ஆத்மார்த்தமான நட்பாகி இருவரும்  இணைபிரியாதவர்கள் ஆகிவிட்டனர். இதைத் தொடர்ந்துதான்  1945-ல் ஆந்திரஜோதி என்ற தெலுங்கு மாத இதழை தொடங்கினர்.  பின்னர் சந்தமாமா(தெலுங்கு), அம்புலிமாமா(தமிழ்) ஆகிய குழந்தைகள் பத்திரிகைகளை 1947 ஜூலையில் தொடங்கினர். முதல் ஒன்பது  மாதங்களுக்கு நஷ்டமே. ஆனால் அதன் பின்னர் வளர்ச்சி ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளில் ஆறு மொழிகளில் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்னர் பொம்மை(தமிழ்), விஜய சித்ரா(தெலுங்கு)  ஆகிய சினிமா பத்திரிகைகள் 1966-ல் வெளியாயின.

சினிமாத்துறை  தொடர்பு ஏற்கெனவே இருந்ததால் ‘ விஜயா புரடக்‌ஷன்ஸ்’ ஆரம்பித்து வாகினி ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்தார். சௌகார் குணசுந்தரி கதா, மிஸ்ஸியம்மா,  பாதாளபைரவி, மாயா பஜார், கல்யாணம் பண்ணிப்பார் போன்ற வெற்றிப்படங்கள்  எடுக்கப்பட்டன. இதற்கிடையில் வாகினி ஸ்டூடியோ பெரிதாக வளர ஆரம்பித்தது. 1952-ல் பேசும்படம் இதழில் வெளியான கட்டுரை  வாஹினியை மிஞ்சக் கூடிய ஸ்டூடியோ இந்தியாவிலேயே இல்லை என்று எழுதும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. இதன் பிறகு விஜயா புரொடக்‌ஷன்ஸ் ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிக்கொடி நாட்டியது.

இப்படி திரையுலகில் பேரும் புகழுடன் இருந்தபோதே 1972-ல் வடபழனியில் ஒரு நல்ல மருத்துவமனை வேண்டும் என்பதற்காக விஜயா மருத்துவமனையை ஏற்படுத்தினார். 46 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட அந்த மருத்துவமனை இன்று 700 படுக்கை வசதிகளுடன் தென்னிந்தியாவின் முதல் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. 2004-ல் நாகிரெட்டி மறைந்தாலும் அவரது நிறுவனங்கள் அவர் புகழை தொடர்ந்து பரப்பி வருகின்றன.

ஜூன், 2016.