தினமணியில் எழுத்தாளர் புதுமைப்பித்தன் தழுவல், மொழிபெயர்ப்புகள் குறித்து நடந்த விவாதத்தில் கல்கியை மிகக்கடுமையாக விமர்சித்தார். தினமணியில் ரசமட்டம் என்ற புனைபெயரில் கல்கிமீதான அவர் விமர்சனம் எல்லைகளைக் கடந்ததாக இருந்தது. “சுமார் அறுபது சிறுகதைகளும் நாலு பெரிய நாவல்களும் எழுதி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீரே அது அவ்வளவும் ஒரு குடம் வென்னீர் போடுவதற்கு லாயக்கான காகிதக் குப்பை; அவற்றில் ஏழெட்டு உம்முடைய சொந்த சரக்காக இருக்கக்கூடும்.
நீர் கண்ணை மூடிக்கொண்டால் உலகத்துக் கே இருட்டடிப்பு ஏற்பட்டுவிடுமா?”என்று 11.8.1943-ல் எழுதிய கட்டுரையில் கேட்கிறார்.
( புதுமைப்பித்தன் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடுவெளியீடு). “ இந்த விவாதம் நடந்து பல ஆண்டுகள் கடந்தபின்னர் நானும் கல்கியின் பேத்தி அகிலாவும் எழுத்தாளர் சிட்டியைச் சந்தித்தோம். கல்கி காப்பியடித்து எழுதினார் என்றும் சரித்திர நாவல்கள் வெறும் புனைவுகள் என்றும் ஒருகாலத்தில் நீங்களும் உங்களைச் சார்ந்த குழுவினரும் தாக்கி எழுதினீர்கள். உங்களைப் போன்றவர்கள் அவரைத் தாக்கியதற்கு என்ன நிஜமான காரணம்? என்று அகிலா சிட்டியிடம் கேட்டார். இந்தக் கேள்வியை எதிர்கொண்ட சிட்டி, ‘இந்த வயதான காலத்தில் எதையும் ஒளித்துவைக்க வேண்டிய தேவை எனக்கில்லை’ என்று கூறிவிட்டு பிறகு ஒரு வரியில் ‘பொறாமைதான் காரணம்’ என்றார்” என்று அந்திமழையிடம் கூறுகிறார் அமுதசுரபி ஆசிரியரான திருப்பூர் கிருஷ்ணன். ‘இந்த விவாதம் நடந்போது, கல்கி பெரிதாக எதிர்வினையாற்றவில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்போது நடந்த விவாதங்கள் கோட்பாட்டுரீதியானவை. இப்போது எழுப்பப்படும் விமர்சனங்களில் தன்னகங்காரம் மிகுதியாக இருக்கிறது” என்றும் சொல்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்.
டிசம்பர், 2013