சிறப்புக்கட்டுரைகள்

வெண்மைக்கு அப்பால்

அசோகன்

இந்த சல்லிக்கட்டுப் போராட்டப் பின்னணியில் உள்நாட்டு மாட்டினங்களைக்  காக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இருக்கிறது. ஆனால்  இதுதொடர்பான ஏராளமான தவறான தகவல்களும் சமூக ஊடகங்களில் உலவுகின்றன. இவற்றைக் களைவதற்காக கால்நடை மருத்துவ அறிவியல் அறிஞர்கள் பலருடன் உரையாடினோம். முக்கியமான ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தோம். அவற்றின் அடிப்படையில் சில விஷயங்களை இங்கே முன்வைக்கிறோம்.

பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக திட்டங்கள் தீட்டப்பட்டபோது எழுபதுகளில் தொடங்கப்பட்ட வெண்மைப் புரட்சியைத் தொடர்ந்து உள்நாட்டு மாட்டினங்களுடன் வெளிநாட்டில் நிறைய பால் கறக்கும் ஜெர்சி, ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் ஆகிய மாட்டுக்காளைகளின் விந்தணுக்களை கருவூட்டல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. 1970-ல் சுமார் 22 மில்லியன் டன்களாக இருந்த இந்திய பால் உற்பத்தி இன்று 140  மில்லியன் டன்களைத் தாண்டி கிட்டத்தட்ட ஏழுமடங்கு அதிகமாக உற்பத்தி ஆகிறது. 1998-ல் இருந்து நாம் உலகில் பாலுற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறோம். இதற்குக் காரணம் கலப்பினப் பசுக்களால் பால் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட்டதே என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் இந்த மேம்பாட்டில் குறைகளும் இல்லாமல் இல்லை. உள்நாட்டு இனங்கள் நம் நாட்டின் வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு  சக்தி மிக்கவை. ஆனால் கலப்பின பசுக்களுக்கு  இந்த குணங்கள் குறைவாகவே இருக்கின்றன. இதனால் கலப்பினப் பசுக்களின் மேலாண்மை விவசாயிகளுக்கு சிரமங்கள் கொடுப்பதாக இருக்கிறது. ஆனால் இதையும் மீறித்தான் பால் உற்பத்தியில் சாதனை செய்திருக்கிறோம்.

இதில் முக்கிய குறைபாடாகச் சொல்லப்படுவது நமது உள்நாட்டில் அதிக அளவில் பால்கறக்கும் மாட்டினங்களைத் தேர்வு செய்து மரபியல் முறைப்படி அவற்றின் பால் உற்பத்தித்திறனை மேம்படுத்தத் தவறிவிட்டோம் என்பதாகும். குஜராத்தில் பாவ் நகர் மகாராஜா நாடு சுதந்தரம் அடைவதற்கு முன்பாக பிரேசில் காரர்களுக்கு கிர் மாடுகளை பரிசாக அளித்தார். அந்த மாடுகளைப் பயன்படுத்தி தொடர்ந்து அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளை தேர்வு செய்து (Selective Breeding ) தலைமுறைகள் தோறும் அவற்றின் பால் உற்பத்தியை அதிகப்படுத்தி இப்போது கிர் பசுக்கள் பிரேசிலில் மிகச்சிறந்த பால்மாடுகள் ஆகி உள்ளன. சமீபத்தில் குஜராத் அரசு, பிரேசிலில் இருந்து 10,000 விந்து உறைகளை வாங்க இருப்பதாக அறிவித்தது. ஏனெனில் குஜராத்தில் 3000 கிர் பசுக்களே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே இந்த நடவடிக்கை.

அதேபோல் அமெரிக்காவில் இறைச்சிக்காக உருவாக்கப்பட்ட பிராமன் என்ற மாட்டினம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மாட்டினங்களை வைத்தே உருவாக்கப்பட்டது. அதேபோல் ஓங்கோல் மாட்டினத்தை பிரேசில் காரர்கள் மாட்டிறைச்சிக்காகக் கொண்டு சென்று அவற்றை அதிக இறைச்சி தரக்கூடிய மாட்டினங்களாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

ஏன் உள்நாட்டு மாடுகள் மீது இந்த கரிசனம்? பாரம்பரிய விவசாயத்துக்குக் கால்நடைகள் முக்கியம். அவற்றின் சாணம் முக்கியம். ஆனால் சந்தையின் தேவைதான் இதை தீர்மானிக்கும். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் தேவைக்காக உள்ளூர் மாடுகள் வளர்ப்பது லாபகரமாக இருக்குமெனில் அவை வளர்க்கப்படும். இப்போதைக்கு உள்ளூர் மாட்டினங்களை வளர்ப்பது அவற்றின் மீதுள்ள ஆர்வத்தால் சில ஆர்வலர்களாலும் விவசாயி களாலும் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் நிலம் குறைவதாலும், ட்ராக்டர்கள் மாடுகளின் இடத்தைப் நிரப்பியதாலும் உள்நாட்டு மாட்டினம் எண்ணிக்கை வீழ்ந்துவிட்டது. இதில் ஒரு சமநிலை பேணுவது பலகாரணங்களுக்காக அவசியம். 2008-ல் மறுபரிசீலனை செய்யப்பட்டு வெளியான தமிழ்நாட்டு கால்நடை  இனப்பெருக்கக் கொள்கை உம்பளாச்சேரி, காங்கேயம் ஆகிய இனங்களைக் காக்கவேண்டும் என்கிறது. இம்மாட்டினங்களின் காளைகள் அவற்றுக்காக பண்ணைகளில் வளர்க்கப்பட்டு விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு செயற்கை முறை கருவூட்டலுக்காக வழங்கப்படுகின்றன. ஆனால் இக்காளைகள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில்தான் அரசு விந்து மையங்களில் இருப்பது கவலைக்குரியது. இனி நிலைமை மேம்படவேண்டும்.

உள்நாட்டினங்களின் மீதான கரிசனத்துக்கு இன்னொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. அது இந்திய மாட்டு வகைகள் ஏ2 பால் வழங்குகின்றன. வெளிநாட்டு மாடுகள் வழங்குவதோ ஏ1 பால் அது உடல்நலத்துக்குத் தீங்கானது என்பதாகும்.

இந்த கூற்றில் உண்மை இருக்கிறதா?

பாலில் இருக்கும் புரதமான கேசினில் உள்ளது பீட்டா கேசின். இந்த பீட்டா கேசினில் 67வது அமினோ அமிலமான ஹிஸ்டிடின் மரபணு மாற்றத்தால் ப்ரோலினாக மாறிவிடுகிறது.  ஹிஸ்டிடின் இருக்கும் பீட்டாகேசின் புரதம் கொண்ட பால் தரும் மாடுகள் ஏ2 மரபணு கொண்டவை. ப்ரோலின் இருக்கும் பீட்டா கேசின் புரதம் கொண்ட பால்தரும் மாடுகள் ஏ1 மரபணு கொண்டவை. இதைவைத்து ஏ1 பால், ஏ2 பால் என்கிறார்கள்.

ஏ1 மரபணு கொண்ட மாடுகள் தரும் பாலில் உள்ள பீட்டா கேசின் மனித சிறுகுடலில் செரிக்கும்போது பிசிஎம் 7 என்ற பொருளாக மாறி அது சர்க்கரை நோய் உள்ளிட்ட தீங்குகளைச் செய்வதாகச்

சொல்கிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த வலிமையான ஆதாரமும் இல்லை.  நியூசிலாந்தில் ஏ2 என்ற பெயரில் இருக்கும் ஒரு பால் வணிக நிறுவனம் இந்த முடிவுகளை தன் சந்தைப்படுத்துதலுக்காக பயன்படுத்திக்கொண்டது. அத்துடன் இதுதொடர்பான ஆய்வுகளை அதுவே நிதிநல்கையும் செய்திருக்கிறது. அத்துடன் இந்த ஆய்வுகளுக்கான அவர்கள் செய்த உணவுப்பழக்க ஆய்வுகளில் இந்தியா சேர்க்கப்படவில்லை. இந்த பிசிஎம் 7- ஐ  மனிதர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் ஏற்படும் என்கிற ஆய்வுகளும் இல்லை. இதன்மூலம் அவர்கள் என்ன  சொல்கிறார்கள்  என்றால் அரிசி போன்ற தானியங்களைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு  சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதுபோல் ஏ1 பால் அருந்துகிறவர்களுக்கும் இந்த வாய்ப்பு உள்ளது என்பதுதான்.

சரி விடுங்கள்... இந்திய நிலை என்ன? கர்னாலில் உள்ள விலங்கின மரபியல் வளங்களுக்கான தேசிய ஆணையம் 2009ல் இருந்து இதுபற்றி ஆராய்கிறது. இந்தியாவில் உள்ள மாடுகள் அதாவது திமில் உடைய மாடுகள் பெரும்பாலும் ஏ2 பால் தருகிறவை என்று இதன் ஆய்வறிக்கை கூறுகிறது. எருமைகளும் இப்படியே. நாட்டில் உள்ள கலப்பின மாடுகளில் பெரும்பாலான சதவீதம் ஏ2 மரபணு உடையவை என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2012 நிலவரம். எனவே இந்த அமைப்பு தற்போதைய இனப்பெருக்கக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. கூர்மையாக நிலைமையைக் கவனித்தால் போதுமானது என்று அறிவித்துவிட்டது. டெல்லியில் உள்ள ஐசிஏஆர் அமைப்பு இந்த கலப்பின பசுக்களின் பால் பற்றி விரிவான ஆய்வு ஒன்றையும் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் தூய ஜெர்சியோ, ப்ரீசியனோ பால் உற்பத்தியாளர்களிடம் கிடையாது. இருப்பதெல்லாம் கலப்பின பசுக்கள்தான். தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பண்ணையில் விசாரித்தோம். அந்த பண்ணையில் இருக்கும் ஜெர்சி கலப்பின மாடுகளில் இந்த ஏ1, ஏ2 மரபணு தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ளனர். அங்கு இருக்கும் 35 ஜெர்சி கலப்பின மாடுகளில் 17 மாடுகள் ஏ2 மரபணுவும் 15 மாடுகள் ஏ1ஏ2 மரபணு கலப்பு கொண்டவையாக இருந்தன. 3 மாடுகள் மட்டும் ஏ1 மரபணு கொண்டவை. ஆகவே ஜெர்சி கலப்பின மாடுகள் பெரும்பாலும் ஏ2 பால் தருகிறவையே. அத்துடன் இந்த பிசிஎம்7 என்ற பொருள் ஒரு டெகாபெப்டைட். அது சிறுகுடலால் உறிஞ்சப்பட இயலாத அமைப்பைக் கொண்டது. அப்படி இருக்கையில்  இது எப்படி மனித உடலில் மாற்றங்களை உருவாக்க முடியும்? ஓர் ஆய்வில் இன்னும் சிறுகுடல் முதிர்ச்சி அடையாத குழந்தைகளுக்கு இது உறிஞ்சப்பட்டுவிடும் என்கிறது. ஆனாலும் இதனால்தான் தீயவிளைவுகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியவில்லை.

1990களில் எலியட் என்ற நியூசிலாந்து ஆய்வாளர்தான் ஏ1 பாலால் அபாயங்கள் உள்ளன என்றவர். ஆனால் இந்த மாதிரி ஏ1 பாலால் எந்த பிரச்னையுமே கிடையாது என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ட்ரஸ்வால் என்ற ஆய்வாளர் 2005லும், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு 2009லும்,  அடித்துக் கூறி இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆய்வுத் தகவல்களை விட ஆபத்து என்கிற தகவலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது துரதிருஷ்டமே.

இன்னொரு முக்கிமான விஷயம் வெளிநாட்டில் இந்த ஹோல்ஸ்டீன் ப்ரீசியன் மாடுகளிலும் சரி; ஜெர்சியிலும் சரி; அதிக பால் உற்பத்திக்காக மரபணுத்தேர்வு முறையில் காளைகளுடன் பசுக்கள் சேர்க்கப்பட்டு கன்றுகள் உருவாக்கப்பட்டபோது இந்த ஏ1 மரபணு அதிகரித்தது என்று மரபியல் கூறுகிறது. ஆனால் இப்படி இருந்தாலும் இதே மாட்டினங்களில் இந்த ஏ1 மரபணு காணப்படுவது இடத்தைப் பொறுத்து மாறுபடுவதும் உண்டாம். மலைப்பகுதிகளில் ஏ1 மரபணுவும் சமவெளிப்பகுதிகளில் ஏ2 மரபணுவும் காணப்படுகிறது.

இவ்வளவு டெக்னிக்கலாக இந்த ஏ1 ஏ2 பிரச்னையை ஆராய்வதற்கான காரணம் உள்நாட்டு மாட்டினங்களை உயர்த்திப் பிடிப்பதற்காக கலப்பின மாட்டினங்களை தாழ்த்திப் பேசவேண்டியதில்லை என்பதற்காகவே.

பிரேசில் நாடு நம் நாட்டு மாட்டினங்களைக் கொண்டுபோய் தரம் உயர்த்தியதுபோல் இந்தியாவிலும் செய்திருக்கலாமே என்று கேட்டபோது ஓர்  கால்நடை அறிவியல்துறை உயரதிகாரி,“செய்திருக்கலாம்தான்.  நமக்கு இருந்த நோக்கமெல்லாம் பால் உற்பத்தியை உடனே அதிகரிக்கவேண்டும் என்பதுதான். அதற்கு வெளிநாட்டில் அதிகப் பால் கொடுக்கும் மாட்டினங்களுடன் உள்நாட்டு இனங்களைச் சேர்ப்பதுதான் உடனடியாக உதவக்கூடியது. அதற்கு வெற்றியும் கிடைத்தது. உள்நாட்டு இனங்களை தரம் உயர்த்துவது நீண்ட காலம் பிடிக்கக்கூடிய வேலை. இப்போதுதான் நம் நாடு விழித்துக்கொண்டிருக்கிறது; மாறுதல்கள் வந்துசேரும். தமிழ்நாட்டில் இருக்கும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திலேயே பர்கூர், காங்கேயம், புளிகுளம் போன்ற இனங்களை பாதுகாப்பதற்காக சிறப்பு ஆய்வுத்திட்டங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

“பால் உற்பத்தி என்பது நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து முக்கியமான வருவாய் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. விவசாயம் பொய்க்கும்போது  ஒரு சிறு விவசாயிக்கு அவன் வளர்க்கும் கால்நடைதான் கைகொடுக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் பலகோடி ரூபாய்களை விவசாயிகளுக்கு அளித்துக்கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம். இந்த அளவுக்கு நாம் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையாமல் போயிருந்தால் இப்போதும் பால்பொருட்களை இறக்குமதிதான் செய்துகொண்டிருப்போம்” என்று சுட்டிக்காட்டுகிறார் என்.டி.டிபியின் சிறப்பு அலுவலர் டாக்டர் குஞ்சு முத்துராமன்.

இந்தியாவில் வெளிநாட்டு பால் நிறுவனங்கள் இன்றுவரை கால் ஊன்றமுடியவிலை. காரணம் நமது வலிமையான பால் கூட்டுறவு அமைப்புகள். நாம் செய்யவேண்டியது  இந்த அமைப்புகள் சிதையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். அதுவே முக்கியம். ஏ1, ஏ2 பால் பற்றி பீதி அடையவேண்டியது இல்லை! சூடாக ஒரு தேநீர் அருந்தி கடந்துசெல்லுங்கள்!              

பிப்ரவரி, 2017.