சிறப்புக்கட்டுரைகள்

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு அநியாயம்! - வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சஞ்சனா மீனாட்சி

மனித உரிமை எங்கேயாவது பறிபோகிறதென்றால் தொண்ணூற்றெட்டு வயதான நிலையிலும் அதற்காகப் பதறும் முதல் நபராக இருக்கிறார் வி.ஆர். கிருஷ்ணய்யர். சிறந்த வழக்கறிஞர், அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, மனித உரிமைக் காவலர் என பன்முக ஆளுமைக் கொண்டவர். அப்சல் குரு தூக்குக்கு அடுத்தபடியாக வீரப்பன் குழுவினருக்கு தூக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்திமழைக்காக அவரிடம் பேசினோம்.

வீரப்பன் குழுவைச் சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டாரே?

இது அநியாயம்... சில தினங்களுக்கு முன்பாக கூட ஒரு அறிக்கை மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிவித்தேன். ஏன் இப்போதும் உங்கள் வாயிலாகவும் கேட்டுக்கொள்கிறேன்.. ‘முதல்வர் அவர்களே நீங்கள் மனிதாபிமானமிக்கவர். மரண தண்டனையை ஒழியுங்கள். மரண தண்டனைக்கு மரணதண்டனை விதித்து வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய மனிதாபிமானியாகத் திகழுங்கள். தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியுள்ள நான்கு உயிர்கள் உங்களால் வாழ்வு பெறும்.’

மரண தண்டனைக்கு எப்போதுமே நீங்கள் எதிராகவே செயல்பட்டு வந்துள்ளீர்கள்...

இன்று அல்ல. என்றுமே நான் மரணதண்டனைக்கு எதிரானவன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதும் சரி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதும் சரி அமைச்சராக இருந்தபோதும் சரி; மரணதண்டனைக்கு எதிரானக் கருத்தைத் தான் கொண்டிருந்தேன். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து காப்பாற்றுவதும் எனது பணிகளில் ஒன்றாக இருந்தது. மரண தண்டனைக்கு எதிரான என் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பிரிவி கவுன்சிலில் நீதிபதி ஸ்கார்மேன் தீர்ப்பு ஒன்று வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதுபோல சிறந்த நீதிபதியான லார்டு டென்னிங் என் மனிதஉரிமைக்கான புத்தகத்தை வாசித்து விட்டு எனக்கு நீண்ட கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இன்னும் சொல்வதானால் ‘மரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. எல்லா குற்றங்களும் நோய்களே; அதற்கு தகுந்த சிகிச்சைதான் தேவை. அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனைத் திருத்த சிகிச்சை தரவேண்டும்’ என காந்தி சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன். இன்றைக்கு உலகில் தொண்ணூறு சதவீத நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. அகிம்சை பேசிய காந்தி மண்ணில் மரணதண்டனை என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. நாம் சிருஷ்டிக்-காத உயிரைப் பறிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது? அரசால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மரணதண்டனையும் ஒரு கொலைச் செயலே.

மாநில அரசால் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தமுடியுமா ?

ஏன் முடியாது? 1957-ம் ஆண்டு ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் நான் உள்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது சி.ஏ. பாலன் என்பவரின் தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது. ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்திருந்தார். அப்போது மாநில உள்துறை அமைச்சரான என் கவனத்துக்கு இந்த தகவல் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘பாலனின் மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஆளுநருக்கு எழுதினேன். ‘கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டதால் ஆளுநர் இதனை மறுபரிசீலனை செய்ய முடியாது’ என டில்லியி-லிருந்து பதில் வந்தது. ‘தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று மாநில உள்துறை அமைச்சர் பரிந்துரைத்தால் அதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று வாதிட்டேன். இது தொடர்பாக எங்கள் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.வி.சூர்ய நாராயணய்யாவின் கருத்தைப் பெற்று அனுப்பி வைத்தேன். மத்திய உள்துறை அமைச்சர் சி.பி.பந்த் ‘மரண தண்டனையைக் குறைக்கும்படி நீங்கள் எனக்கு எழுதுங்கள். நான் அதனை என் பரிந்துரையோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றார்.  எழுதினேன். மரண தண்டனை ரத்தானது. எனவே மாநில அரசால் தூக்குத்தண்டனையை ரத்து செய்வது சாத்தியமே.

நீங்கள் அமைச்சராக இருந்தவர். அதிலும் உள்துறையைக் கவனித்தவர். காவல் நிலையச் சித்திரவதைகள் உங்கள் காலத்திலும் நடந்திருக்குமே?

நான் அமைச்சராக இருந்தபோது திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கிளப்பில் டென்னிஸ் விளையாடுவேன். அப்படி ஒருநாள் விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் அடித்தது. எடுத்துப் பேசினேன். அருகிலுள்ள குறிப்பிட்ட காவல்நிலையத்தில் விசாரணைக்காகக் கூப்பிட்டுச் சென்றவரை அடித்துத் துவைக்கிறார்கள் என்றது ஓர் அழைப்பு. உடனே அந்தக் காவல்நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஒருவரை சப் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ‘இதுதான் நீங்கள் விசாரிக்கும் முறையா? தினமும் இப்படித்தான் நடக்கிறீர்களா? சக மனிதனை விலங்குகளை விட கேவலமாக நடத்த வெட்கமாக இல்லை..?‘ எனக் கேட்டேன். அவர் பேசாமல் இருந்தார். அவரிடம், ‘இது மக்கள் நேசிக்கும் அரசு. மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு. உங்களின் காட்டுமிராண்டித்தனமான விசாரணை முறைகள் எங்கள் அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல. குற்றம் சாட்டப்பட்டிருந்தால் சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்துங் கள். நீங்களே நீதிபதியாக மாறவேண்டாம்..’ எனச்சொல்லிவிட்டு திரும்பினேன். எனவே சித்திரவதை என்பதில் என்றைக்கும் எனக்கு உடன்பாடு கிடையாது.

ஒருமுறை சிறையைப் பார்வையிட்டபோது ஒரு கைதி என்னிடம் அழுதார். பாகவதரான அவர் அதன் மூலம் மட்டுமே வருமானம் தேடி வந்தார். ஒருநாள் அவரது மனைவிக்கும் தாய்க்கும் சண்டை நடந்தபோது இருவரையும் அவர் பிரித்துவிட்டிருக்கிறார். இதில் அவரது தாய் கீழே விழுந்து இறந்துவிட்டார். அதனால் பாகவதரை சிறையில் அடைத்துவிட்டார்கள். மனைவி, இரண்டு குழந்தைகள் இவரது வருமானத்தை வைத்துத்தான் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இவர் சிறைக்கு வந்துவிட்டதால் வருமானம் இல்லாமல் குடும்பம் தவிப்பதாக அழுதார். இப்போது உண்மையான தண்டனையை அந்தக் குடும்பம் தான் அனுபவிப்பதை உணர்ந்தேன். உடனே ஆல் இந்தியா ரேடியோ அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாகவதரின் தகுதிக்கேற்ப அவருக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள் கொடுக்குமாறும் அதற்குரிய தொகையை அவரது குடும்பத்துக்கு அனுப்புமாறும் கூறினேன். கைதியாக இருந்துகொண்டு ரேடியோ ஸ்டேஷன் சென்று கச்சேரி செய்துவிட்டு வந்தது இவராகத்தான் இருக்கும்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலையானார்களே அவர்களை மீட்பதற்கான உங்கள் பங்களிப்பு ஏதாவது இருந்ததா..?

இலங்கை தமிழர்களுக்காக 1984-ம் ஆண்டு மனித உரிமை பற்றாளர்களுடன் இணைந்து ‘மனித உரிமை பாதுகாப்பு’க் கான அமைப்பைத் தொடங்கினோம். பிரதமர் இந்திராவுக்குக் கடிதம் எழுதினோம். அதுபோல செஞ்சிலுவை சங்கத்துக்கும் கடிதமும் தந்தியும் அனுப்பினோம்.  எனது தலைமையில் டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை செல்ல முடிவு செய்தோம். ஆனால் விசா தர இலங்கை அரசு மறுத்தது. அமைதித் தீர்வுக்கான வழிமுறைகளை வகுப்பதற்காக 1992-ம் ஆண்டு சூன் 21-ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் ஹாங்காங்கில் கூட்டம் ஏற்பாடு செய்தோம். இந்தக் கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட திட்ட வரைவுகளை இலங்கை நாடாளுமன்ற குழுவிடமும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு குழுவிடமும் கொடுத்தோம்.

இலங்கையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மூன்று முறை எனக்கு அழைப்பு வந்தும் விசா மறுக்கப்பட்டதால் செல்லமுடியவில்லை. பிரபாகரனும் எனக்கு பல முறை அழைப்பு விடுத்தார். அது தான் செயல்வடிவம் பெறாமலே போய்விட்டது.

மார்ச், 2013.