முதலில் முரசு எழுத்துருக்கள், தற்போது செல்லினம் குறுஞ்செயலி. கணினியில் தமிழ் பயன்பாட்டின் முன்னோடியாக இருக்கும் முத்து நெடுமாறனின் தமிழார்வமே அவரது வெற்றிக்கு காரணம்.
அந்த இருபத்தி நான்கு வயது மலேசிய இளைஞனுக்கு 1980களிலேயே ஆங்கில எழுத்துக்களைப் போலவே தமிழ் எழுத்துக்களை கணிப்பொறித் திரையில்காணவேண்டும் என்று ஆசை. ஆரம்பத்தில் வந்த எம். எஸ். டாஸ் கணினிகளில் எழுத்துக்கள் எல்லாம் சிப்களில் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் கழற்றி, அதில் எழுத்துக்கள் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்ப்பான். பின் புதிதாக சிப்கள் வாங்கி அதில் தமிழ் எழுத்துக் களைப் பொறிப்பான். ஒரு சிப் விலை அப்போது 35 வெள்ளி. அப்போது அவனுக்கு வீட்டில் தினமும் ஒரு வெள்ளிதான் கிடைக்கும். அதற்கு மேல் கிடையாது. ஆராய்ச்சிக்காக சிப் வாங்கவேண்டும் பணம் கொடுங்கள் என்று கேட்கமுடியாது. பணத்தைச் சேமித்துத்தான் வாங்க வேண்டும். இப்படி சிப்பில் தமிழைப் பொறித்து கணிப்பொறியில் மாட்டிப் பார்க்கும்போது அது சில சமயம் எரிந்தும் போய்விடும். அவன் போட்ட எழுத்துகள் சரியாக வருகிறதா என்று கூடப் பார்க்க முடியாது. மீண்டும் 35 வெள்ளி சேமித்து புது சிப் வாங்க வேண்டியிருக்கும். அவன் பொறியியல் படித்துவிட்டு நல்ல வேலை கிடைக்காமல் இருந்த காலகட்டம் அது. அப்படி சிரமப்பட்டு ஆய்வு செய்து முதன்முதலாக கணினித் திரையில் தமிழ் எழுத்துகள் வருவதைப் பார்த்தபோது அவன் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே... அதற்கு ஈடாக எதுவுமே இல்லை.
அந்த இளைஞர் மலேசியாவைச் சேர்ந்த கணினி வல்லுநர் முத்து நெடுமாறன். இன்றும் தமிழ் எழுத்துருக்களை வளரும் தொழில் நுட்பங்களுக்கு இணையாக புதிதாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். முரசு தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். செல்போன்களில் தமிழில் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காக செல்லினம் என்ற குறுஞ்செயலியை உருவாக்கியவர். ஆப்பிளின் ஐபோனில் கூட தமிழைக் கொண்டு வந்துள்ள வர். கணினியில் தமிழ் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வரும் முதல் பெயர் இவருடையதுதான்.
சென்னையில் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கையடக்கக் கருவிகளில் தமிழ் என்ற தலைப்பில் ஒரு மிகச்சுவாரசியமான உரையை நிகழ்த்தியபின் கிடைத்த இடைவெளியில் நெடுமாறனுடன் பேசினேன். அந்திமழை என்ற உடனேயே என் வெக்கையில் வியர்த்த முகத்தைப் பார்த்து, இந்த அந்தியில் ஒரு மழை பொழிந்தால் எப்படி இருக்கும் என்றார். மலேசியாவின் அழ.வள்ளியப்பா என்று அழைக்கப்படுகிற கவிஞரும் பள்ளி தமிழாசிரியருமான நெடுமாறன், இவரது தந்தை. முத்து நெடுமாறன் வெறும் கணினி வல்லுநர் மட்டுமல்ல மிகச் சுவாரசியமான மேடைப்பேச்சாளரும் கூட. தொழில்நுட்பட உரைகளில் கூட நகைச்சுவை ததும்பப் பேசக்கூடியவர்.
எந்த தொழில்நுட்ப விஷயத்தையும் அறிமுகம் செய்து பேசுவதில் இவரது குரு ஸ்டீப் ஜாப்ஸ். சிக்கலான விஷயங்களை எளிமையாகப் பேசுவதில் ஜாப்ஸ் மன்னர். “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக மென்பொருள் மேம்பாட்டு மாநாட்டுக்குப் போய்விடுவேன். அங்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பேசுவதை ஆர்வத்துடன் கவனிப்பேன். நான் பணி புரிந்த சன் மைக்ரோ சிஸ்டத்தின் தலைவர் ஸ்காட் மக்நீலி, ஆரக்கிளின் லாரி எலிசன் ஆகியோரின் ப்ரெசெண்டேஷன்களும் எனக்குப் பிடித்தமானவை.”
கணிப்பொறியில் உள்ளிடுவதற்கு எளிமையான மொழி எது என்பது பற்றி கேட்டேன். “ தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால் அதை உள்ளிடுவது சிரமம் என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள். நான் இந்திய மொழிகள் அனைத்துக்கும், தெற்காசிய மொழிகள் பலவற்றிற்கும் கணினியில் உள்ளிடும் பணி செய்துள்ளேன். என் அனுபவத்தில் தமிழ்தான் கனிணியில் பயன்படுத்த மிக எளிமையான மொழி. ஏனெனில் நமது எழுத்துமுறையில் கூட்டெழுத்துக்கள் இல்லை. இப்போதிருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம் எழுத்துக்கள் இருந்தாலும் சிரமம் இல்லை”
மலேசியாவில் முதன்முதலில் தமிழுக்கென முதல் கணினி எழுத்துருவாக முரசு எழுத்துருவை உருவாக்கிய நினைவுகளை சுவாரசியமாக அசைபோடுகிறார் முத்து நெடுமாறன். ” இது அறிமுகமாகி சில காலம் கழித்து 1987-ல் அங்குள்ள தமிழோசை என்ற நாளிதழில் என்னை அழைத்து ‘அடுத்த வாரத்தில் பத்து கணினி வாங்கப்போகிறோம். அதில் முரசு எழுத்துரு போட்டுக் கொடுத்துவிடுங்கள். இனி எங்கள் செய்தித்தாளை முரசுவில் தான் அச்சிடப்போகிறோம்.’ என்றார்கள். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தொடை நடுங்கிப் போனது. செய்தித்தாளை முரசு எழுத்துருவில் அச்சிடுவது என்பது மிகப்பெரிய விஷயம். ஏற்கெனவே மயில் என்ற ஒரு வார இதழ் முரசு எழுத்துருக்களுடன் வந்துகொண்டிருந்தாலும் நாளிதழ் என்பது சவால்தான். நான் அப்போது வேறு ஒரு இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒருவழியாக சில நாட்கள் லீவு போட்டுவிட்டு செய்துகொடுத்தேன். அப்புறம் சில நாட்கள் கழித்து ஒரு கருத்தரங்குக்காக வெளியே சென்றிருந்தோம். ஓரிடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அருகே ஒரு தமிழரின் ஒட்டுக்கடை. அதில் தமிழ் செய்தித்தாள்களை வைத்திருந்தார்கள். தமிழோசையும் இருந்தது. முரசு எழுத்துருக்களால் ஆன தமிழோசை. என் எதிரே ஒருவர் அதைப் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு கிளர்ச்சியூட்டும் அனுபவம் ஏற்பட்டது. எதிரே வாசித்துக் கொண்டிருப்பவரிடம் இதில் உள்ள எழுத்துகள் அனைத்தும் என்னால் உருவாக்கப்பட்டவை என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அந்த நிமிடம் எனக்கு ஏற்பட்ட பெருமித உணர்வு இன்றும் நினைவில் உள்ளது. இப்போது அதிலிருந்து எவ்வளவோ கடந்து வந்துவிட்டாலும் கூட விமானநிலையத்தில் ஐபோனில் தமிழில் யாராவது எஸ்.எம்.எஸ் அனுப்புவதைப் பார்க்கும்போது எனக்கு அதே உணர்வு தோன்றும்.”
இப்போது முத்து நெடுமாறன் செய்து கொண்டிருப்பது தமிழை உள்ளிடுவதில் மொழியியல் ரீதியிலான மேம்பாடு. ‘’ நான் மொழியியல் அறிஞன் இல்லை. இதைத் தமிழ்ப்பேராசிரியர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்குப் போய்விட்டது. அவர்கள் செய்தால் எண்பது விழுக்காடு பலன் கிடைக்கும் என்றால் நான் செய்தால் 40 விழுக்காடுதான் சரியாகச் செய்யமுடியும். இருப்பினும் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதால் நானே செய்கிறேன். நான் செய்யும் பணி, நீங்கள் எழுத ஆரம்பித்தவுடனேயே என்ன சொல் எழுதப்போகிறீர்கள் என்பதைக் கணினியே காட்டச் செய்வது. அதில் தவறு இருப்பின் திருத்திக் காண்பிப்பது. அடுத்தது ஒரு சொல் எழுதியவுடன் அடுத்த சொல் என்னவாக இருக்கும் என்று கணினியே ஊகிப்பது. நீங்கள் மழை என்று எழுதினால் பெய்தது என்று அடுத்த சொல்லை அதுவே ஊகிப்பது. மூன்றாவது உங்கள் எழுத்து பாணியை நினைவில் வைத்துக் கொள்வது. இந்த பணியில்தான் இருக்கிறேன்”
மொபைல் கருவிகளில் தமிழ் எழுதுவதற்காக செல்லினம் என்கிற குறுஞ்செயலியை 2003-ல் உருவாக்கி 2005-ல் பொதுப்பயனீட்டிற்காக சிங்கப்பூரில் இவர் வெளியிட்டார். கவிஞர் வைரமுத்து வந்திருந்தார். மண்டபமே நிறைந்திருந்தது. அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டியது. தனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்கிற அவர் அதையொட்டி ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
“தமிழில் முதன்முதலாக குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்வு அது. மறுநாள் பலரால் அந்த செயலியைப் பயன்படுத்தமுடியவில்லை. எனவே அந்த நிகழ்ச்சியை இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிலையத்துக்கு அவர்கள் போன் செய்து சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தனர். வானொலியினர் என்னைத் தொடர்பு கொள்ளவே, நான் நேரிடையாக சில மையங்களில் இந்தந்த நேரங்களில் இருப்பேன் எனவும் அங்கே என்னை நேரில் சந்தித்து சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கச் சொன் னேன். அதன் படி குறித்த நேரங்களில் நான் அங்கு சென்று அவர்களின் ஐயங்களைப் போக்கினேன். அப்படி ஒரு மையத்துக்குப் போனபோது அங்கே ஓர் இந்தியத் தமிழர் பல மணிநேரம் முன்பே வந்து பரபரப்பாகக் காத்திருந்தார். அவர் தன் சாம்சங் அலைபேசியை என்னிடம் கொடுத்து எப்படியாவது இதில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியைப் போட்டுக் கொடுங்கள். என் மனைவிக்குக் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் என்றார்.
“மனைவிக்குத் தானே.. அவரிடம் நீங்கள் தொலைபேசியிலேயே பேசிவிடலாமே... குறுஞ்செய்தி அனுப்ப ஏன் இவ்வளவு ஆர்வம்?” என்றேன்.
“அவளுக்கு பேச வராது..அய்யா...” என்றார். எனக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. நெகிழ்ந்துபோனேன். அந்தசெயலியை செல்போனில் ஏற்றிக் கொண்ட அவர், ஊருக்கு சென்று ஏதேதோ கோவில்களில் என்பெயருக்கு அர்ச்சனை செய்து, பெரிய பத்திரிகையெல்லாம் அடித்து எனக்கு நன்றி தெரிவித்தார்.”
தமிழ் மொழிக்காக செய்த முரசு அஞ்சல், செல்லினம், இவற்றில் அவர் பணத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை வைத்து தன்னிடம் வரும் பிற பணிகளுக்கு பணம் வசூலிப்பதாகச் சொல்கிறார். இப்போது நான்கு நிறுவனங்களை நடத்துகிறார். மலேசியாவில் முரசு சிஸ்டம்ஸ், சிங்கப்பூரில் குரோ மொமெண்டம் என்னும் அரசு சார்பான திட்டங்களைச் செய்யும் நிறுவனம், செல்லியல் செய்தி நிறுவனம், மொபைல் கருவிகளுக்கு குறுஞ்செய்திச் சேவைகளை அனுப்பும் நிறுவனம் ஆகியவை அவை.
“செய்வன திருந்தச் செய் என்பதுதான் என் வாழ்க்கைத் தத்துவம். இதற்கு வழிகாட்டுவது எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்கிற குறள். தமிழர்களின் பெரும்பாலான செயல்கள் ஏனோதானோ என்று இருப்பதாக நான் நினைக்கிறேன். முன்பெல்லாம் ஏனோதானோ வேலை எனக்குப் பிடிக்காது. இப்போது சகித்துக்கொள்கிறேன்.” என்று புன்னகையுடன் சொல்கிறார்.
“முப்பது ஆண்டாக இந்த பணியினை சலிப்பின்றி செய்கிறேன். காரணம் என்னுடைய விடாப்பிடியாகச் செய்யும் குணம்தான். உண்மையான உலகத்தரத்துடன் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. இதை உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்தவர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒருசம்பவத்தைச் சொல்கிறேன். சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஜூன்மாதம் அனைத்துலக மென்பொருள் மேம்பாட்டு மாநாட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே மூன்று மிகப்பெரிய கணினி எழுத்துரு நிபுணர்களுடன் மதிய உணவு சாப்பிடச் சென்றிருந்தேன். ட்ரூ டைப் ஃபாண்ட் டெக்னாலஜியை உருவாக்கிய மிகப்பெரிய நபர்கள் அவர்கள். மூவருமே வெள்ளைக்காரர்கள். அப்போதுதான் ஆப்பிள் நிறுவனத்துக்கான எழுத்துருக்கள் பணியை நான் முடித்திருந்தேன். அதைக் கொண்டாடத்தான் அந்த லஞ்ச். உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் மெல்லிய புன்னகையுடன் சொன்னார். நான் மிகவும் மதிக்கிறவர் அவர்: “முத்து, உலகிலேயே இந்த எழுத்துரு பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடிய நான்கே பேரில் நீங்களும் ஒருவர்.”. அத்துடன் அருகில் இருந்த இன்னொரு நிபுணரிடம் ‘’என்ன நான் சொல்வது சரியா” என்று கேட்டார். அவர் “ஆம். நீங்கள் சொல்வது சரிதான்” என்றவாறே தங்கள் மூவரின் பெயரையும் வரிசையாகச் சொல்லிவிட்டு நான்காவது என்பெயரையும் சொன்னார்.” முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.
மே, 2013.