சிறப்புக்கட்டுரைகள்

விதி என்பது என்ன ?

ராம்பாபு

விதியை மாற்றமுடியுமா? அதிலிருந்து தப்பிக்கமுடியுமா? என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு. தப்பிக்க முடியாது என்று உணர்ந்திருப்போம். அப்படியானால் ஜோதிடம் என்றால் என்ன? எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் ஜோதிடம் ஒன்று இருந்து என்ன பிரயோசனம்?

இதில் என்னுடைய கருத்து விதி என்பது ஒரு கொள்கை விஷயம் மாதிரி. அது இந்துமத நம்பிக்கைப்படி போன ஜென்மங்களில் செய்தவற்றால் உருவாகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கு விபத்து ஏற்படவேண்டும் என்பது விதி. அது எப்போது நடக்கும் எப்படி நடக்கும் என்று சொல்வது ஜோதிடம். விதியை ஜோதிடம் தீர்மானிக்க முடியாது. அதை முன்கூட்டியே சொல்ல முயற்சி செய்வதுதான் ஜோதிடம். விதி என்பதை கடமை என்றும் ஒருவிதத்தில் சொல்லலாம். ஜோதிடம் உண்மையா என்றால் தெரியாது. விதிக்கு ஒரு டைம் லிமிட் இல்லை.

எல்லோரும் இப்போது திருமணமென்றால் ஜோதிடம் பார்த்துதான் முடிவு செய்கிறார்கள். அப்படியானால் ஏன் ஓராண்டிலேயே விவாகரத்து வருகிறது? ஏன் பிரச்னைகள் ஏற்படுகின்றன? இது தான் விதி.

இப்போது ஒருத்தருக்கு பிரச்னை வருகிறது என்றால் நீங்க ஏதோ பாவம் பண்ணியிருக்கீங்க அதனால் இப்படி நடக்குது என்று சொல்வார்கள். நாற்பது வயது ஆளுக்கு சொன்னால் சரி. அவர் இவ்வளவு காலத்தில் ஏதாவது பண்ணியிருப்பார். ஒரு வயசு குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால்?அது என்ன பாவம் பண்ணியிருக்கமுடியும்? ஏன் சாகணும்? துன்புறவேண்டும். இது போன ஜென்மத்து தொடர்ச்சி என்று மதங்கள் சொல்கின்றன. ஒரு முறை விஷ்ணுவும் சிவனும் ஒரு திருமணத்துக்குப் போனார்கள். அங்கே ஒரு எலி சுற்றிகொண்டு இருந்தது. அதைப் பார்த்த சிவன் ஓ நீ இங்கேயே இருக்கே என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். விஷ்ணு அதைக் கேட்டதும் சிவன் ஏதோ திட்டம் போடுகிறார் என்று நினைத்து இங்கே இருந்தால்தானே எலிக்குப் பிரச்னை என்று நினைத்து கருடனுக்கு சமிக்ஞை செய்தார். கருடன் எலியைத் தூக்கிக்கொண்டுபோய் கண்காணாத மலை உச்சியில் போட்டுவிட்டு வந்துவிட்டது. சிவனும் விஷ்ணுவும் திரும்பிவரும்போது சிவன் எதையோ நினைத்து சிரிக்க, விஷ்ணு என்ன என்று கேட்டார். கீழே பாருங்க என்றார் சிவன். அவர் காட்டிய இடத்தில் அந்த எலியை பூனை ஒன்று தின்று கொண்டிருந்தது. ‘அந்த எலி இந்த இடத்தில் இந்த பூனையால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி. அதனால்தான் எலியை திருமண வீட்டில் பார்த்ததும் இங்கேயா இருக்கே என்று கேட்டேன். நீங்கள்தான் எலியை இங்கே கொண்டுவந்து சேர்த்து விதியை நிறைவேற்றிவிட்டீர்கள்’ என்றாராம் சிவன். இது ஒரு கதை.

மென்பொருள்துறையில் பணிபுரியும் ஒரு இளைஞருக்குத் திருமணம் நடந்தது. ஒரு ஆண்டு கழித்து அந்த இளைஞருக்கு தலைவலி வந்தது. ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் வலி. எங்கள் மருத்துவமனையில் சோதித்துப் பார்த்தால் புற்றுநோய் என்று தெரியவந்தது. மரணம் நிச்சயம் என்று தெரிந்துவிட்டது. அவரது மனைவி  நிறை மாதமாக இருந்தார். இன்னும் பத்து நாளில் குழந்தை பிறக்கும் என்று தேதி குறித்தார்கள். மருத்துவமனையில் சாவை எதிர்கொண்டு இருந்த அந்த இளைஞர் மருத்துவர்களிடம், ‘’ என்னை இன்னும் பத்து நாட்களுக்கு உயிரோடு வையுங்கள். எப்படியாவது நான் என் குழந்தையைப் பார்த்துவிட்டு கண்ணை மூடுகிறேன்” என்று கேட்டுக்கொண்டார். மருத்துவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பாக அந்த இளைஞர் மரணம் அடைந்துவிட்டார். எங்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட எல்லோரும் கண்ணீர்விட்டோம்.

இவர்களும் திருமணத்தை ஜோதிடம் பார்த்துதான் திருமணம் செய்திருப்பார்கள்.  ஆனாலும் இப்படித்தான் ஆகியிருக்கிறது. எதிர்காலத்தை  சரியாக கணிக்கவே முடியாது. என்ன நடக்கும் என்று தெரியாது ஆகவே வாழும் இந்த கணத்தில் சக மனிதர்களுக்கு நன்மை செய்வோமே..

ஆகஸ்ட், 2016.