சிறப்புக்கட்டுரைகள்

விடுதிகளாக மாறிய வீடுகள்

ராம்பாபு

உறவுகள் இன்று எப்படி மாறிவிட்டிருக்கின்றன?  முன்பெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் இருந்தன.சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா என்று உறவுகள் பெரியவை. ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உறவையும் நன்கு தெரியும். இப்போது அந்த உறவுகள் உள்ளனவா? பெரியப்பா மகனும் சித்தப்பா மகனும் சந்தித்துக்கொள்வதே இல்லை. மிக அரிதாகவே பார்க்கிறார்கள். ஒருவருக்கொருவர் எந்த பாசப்பிணைப்பும் இருப்பதில்லை. சின்னவயதில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இடையில் எந்த தொடர்பும் இல்லை.

சித்தப்பா, அத்தை என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்போய், ஆண்களாக இருந்தால் அங்கிள் என்றும் பெண்களாக இருந்தா ஆண்ட்டி என்றும் அறிமுகம் செய்கிறோம். போனால் போகட்டும். டாக்டர் அங்கிள், ஆட்டோ அங்கிள், சமையல் ஆண்ட்டி என்று இருக்கட்டும். ஆனால் உறவுகளையே இப்படிக்கூப்பிட்டால் எப்படி? சித்தப்பா என்று கூப்பிடுவதில் இருக்கும் அன்பு அங்கிள் என்று அழைப்பதில் இருக்குமா?

நான் என் சித்தப்பாவிடம் மிகவும் நெருக்கமாகவும் பாசமாகவும் இருப்பேன். ஆனால் இப்போது என் தம்பி மகன் இருக்கிறான். என்னிடம் அந்த நெருக்கம் இல்லை. அங்கிள் என்றே அழைக்கிறான்.

இப்போ இருக்கிற குடும்பங்களை எடுத்துக்கொள்ளுங்கள். லேப்டாப்கள், செல்போன்கள் என்று வந்திருக்கும் நவீன கருவிகளால் எவ்வளவு இடைவெளி தெரியுமா? ஒரு வீட்டில் மூன்று படுக்கையறைகள் உள்ளன என்றால் பிள்ளைகள் ஆளுக்கொரு அறையில் இருப்பார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை.

சாப்பாட்டுக்கு வாடா என்று அழைப்பதையும் வாட்ஸப்பில் அழைத்தால்தான் கவனிப்பார்கள். இப்போதைய வீடுகள் விடுதிகள் போல ஆகிவிட்டன. ஒவ்வொரு அறையிலும் டாய்லெட்கள் உள்ளன. யாரும் எதற்காகவும் வெளியே வருவது இல்லை. சாப்பிட மட்டும் வருவர். சில வீடுகளில் அதுவும் இல்லை. பீட்சா வாங்கிக்கொண்டுபோய் அறையிலேயே சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

 பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். அந்தமானில் இருந்து அரசு வேலையாக சென்னைக்கு வந்த ஒருவர் எங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதயநோய். சில நாட்களில் இறந்துவிட்டார். அவர் உறவுகள், தெரிந்தவர்கள் என்று யாரும் வந்து பார்க்கவில்லை. அந்தமானிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள்: “உடலை இங்கே அனுப்பவேண்டாம். மிகவும் செலவாகும். சென்னையிலே அடக்கம் செய்துவிடுங்கள்.”

இங்கிருக்கும் அவரது அலுவலக சகாக்கள் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கைவிரித்தார்கள். எங்கள் மருத்துவமனை அதிபர் பரந்த மனம் படைத்தவர். அவரே பணம் ஒதுக்கி, உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும்  முடிக்கச் செய்தார். இதற்கு மட்டும் 9500 ரூபாய் செலவானது, இறப்புச்சான்றிதழை அந்தமானுக்கு அனுப்பிவைத்தோம். அவரது உறவுகள் கைவிட்டாலும் எங்கள் மருத்துவமனை அதிபர், அந்த உறவுகளுக்கான கடமைகளைச் செய்தார். பரந்த மனம் படைத்தவர்களுக்கு எல்லாரும் உறவுகள்தான்.

இன்னொரு சம்பவமும் நடந்தது. ஒரு நோயாளி சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பலநாட்கள் ஆகியும் உறவினர்கள் கூட்டம் குறையவே இல்லை. படுக்கையைச் சுற்றி ஆட்கள் எப்போதும் இருந்தார்கள். அடேங்கப்பா.. எவ்வளவு நல்லவர்கள் என்று நாங்கள் கூட ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டோம். ஆனால் விசாரித்தபோதுதான் தெரிந்தது,

சொத்துப்பத்திரங்களில் அவரிடம் கையெழுத்து வாங்க இரு எதிரெதிர் கோஷ்டிகள் போட்டிபோட்டு விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது. ஒருநாள் இந்த போட்டி முற்றி, பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவமனைக்குள் வந்துவிட்டார்கள். காவல்துறையை நாங்கள் நாடவேண்டியதாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இப்போது இருக்கும் சூழலில் உணவருந்தும்போதாவது வீட்டில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் சாப்பாட்டு மேஜையில் ஒன்றாக அமர்ந்தால்போதும். குறைந்த பட்சமாக இந்த உறவையாவது காப்பாற்றி வைத்துக்கொள்ள முடியும். இதுகூட பல குடும்பங்களில் நிகழ்வதில்லை. மகனைப்பற்றி அப்பாவுக்குத் தெரிவதில்லை அப்பாவின் உழைப்பைப்பற்றி பிள்ளைகளுக்கும் தெரிவதில்லை. நவீன கருவிகளால் உறவுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து நம்மை செம்மைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

(கட்டுரையாளர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பொதுமேலாளர்)

மே, 2016.