சிறப்புக்கட்டுரைகள்

வி ஆர் தி சாம்பியன்

உலகம் உன்னுடையது

Staff Writer

1980 களில் அன்றைய இளசுகளை தன்னுடைய துள்ளலான பாப் இசையால் கட்டிப்போட்டிருந்த பிரெடி மெர்குரி பற்றிய பயோபிக் திரைப்படமான ‘போகிமியான் ராப்சோடி'( என்ன அர்த்தம் என்று கூகுளில் தேட வேண்டாம், அவரின் பாடல் தலைப்பு) சென்ற மாதம் வெளியானது.

1991 ல் தன்னுடைய 45 வயதில் இறந்துபோன ஒருவரைப்பற்றிய படம் இன்றைக்கும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த முடியுமென்றால் உச்சத் திலிருந்த காலம் எப்படி இருந்திருக்கும்!

பரூக் பல்சாரா என்பது ப்ரெடியின் நிஜ பெயர். மும்பையில் பிறந்த பரூக் தன்னுடைய இளமைக்காலம் வரை இங்கேதான் படித்துள்ளார். இவருடைய அப்பா கென்யாவில் ஆங்கில அரசாங்க அதிகாரி. கென்யா சுதந்திரம் அடைந்தவுடன் குடும்பம் 1964 ல் இங்கிலாந்திற்குக் குடியேறும்போது பரூக்கின் வயது 17. மும்பையில் படிக்கும்போதே இசை ஆர்வம் கொண்டிருந்த பரூக்கிற்கு அவருடைய ஆசிரியர்கள் வைத்த பெயர் தான் ப்ரெடி. பல் வரிசை சரியாக இல்லாமல் முன் பற்கள் மேலேறி இருக்கும். அதைப்பற்றி ப்ரெடிக்கு மன வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால் எங்கேயும் சொன்னதில்லை.

சிறு சிறு குழுக்களில் பணியாற்றிய பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ‘குயின்' என்ற இசைக் குழுவை 1971ல் தொடங்குகிறார். அந்த சமயத்தில்தான் அவருடைய காதலி மேரி ஆஸ்டினை சந்திக்கிறார். இருவரும் சேர்ந்து வாழத் துவங்குகிறார்கள். பெரும்பாலான குயின் பாடல்களை எழுதுவதுடன் பாடவும் செய்கிறார். ப்ரெடி மெர்குரியின் பாடல்களை தெரியாது என்பவர்கள் கூடwe are the champions, we are, we are rocking you போன்ற பாடல்களை எங்காவது ஒருமுறையாவது கேட்டிருப்போம். உச்சஸ்தானியில் ஆனால் அலறாத குரல் அவருடையது. அதேபோல மேடையில் அவருடைய ஸ்டைலும் தனித்துவமானது. ஸ்டேண்டிலிருந்து பாதி உடைந்த மைக்குடன் ஒரு கையை உயர்த்திய பிரெட்டி மெர்க்குரியின் புகைப்படம் உலகப் பிரசித்தம். இது அவருடைய அடையாளமாக ஆனதே சுவாரஸ்யமான விஷயம் தான். ஆரம்ப காலத்தில் மேடையில் பாடும் போது மைக்கை உருவி ஆவேசமாக பாடுகையில் பாதி மைக் ஸ்டேண்ட் கையோடு வந்துவிட்டது. அதை வைத்தே மேடை நிகழ்சியை முடித்து விட்டார். பிறகு அதனையே தன்னுடைய தனித்துவமான ஸ்டைலாகவும் மாற்றிக் கொண்டார்.

ப்ரெடி இரு பாலின ஈர்ப்பு கொண்டவர். ஆனால் ப்ரெடிக்கு எப்போதுமே மேரி தான் அவருடைய வாழ்க்கைத் துணை, நண்பி எல்லாமே. ப்ரெடியின் வாழ்க்கையில் ஆண் துணைகள் வெவ்வேறாக வந்தாலும் மேரியின் மீது காதல் குறையாமல் தான் இருந்தது ப்ரெடிக்கு.

1991 ல் இறப்பதற்கு முந்தைய நாள் தான் தனக்கு எய்ட்ஸ் உள்ளதை உலகிற்கு அறிவிக்கிறார் ப்ரெடி. தன்னுடைய காதலி மேரி பெயரில் பெரும்பாலான சொத்துகளை எழுதி வைத்தவர், தன்னுடைய சமாதி எங்கு அமைகிறது என்று யாருக்கும் தெரியக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். இறந்த பிறகு யாருடைய தொந்தரவும் இல்லாமல் அமைதியாக இருக்க விரும்புகிறேன் என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.

இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு சென்று பாப் இசையில் தனி முத்திரை பதித்த ப்ரெடியின் வாழ்க்கைப் படத்தில் மும்பை நடிகரான ராமி மாலிக் நடித்துள்ளது மிகப் பொருத்தமான விஷயம்.

டிசம்பர், 2018.