சிறப்புக்கட்டுரைகள்

வார்த்தைகளுக்கு அன்பை ஊட்டியவன்!

பழநிபாரதி

‘உலகத்துடன் நடனமாடி

ஒரு நிமிடத்தில் நின்றுவிட்டது

பம்பரம்”

இது நா.முத்துக்குமாரின் கவிதை; அந்த பம்பரம் பால்யத்தின் படிமம்; தன்னைச் சுழற்றும் சாட்டைகளைத் தெரிந்துகொள்ளாமல் சுற்றி வந்திருக்கிறது; நிறைய குத்துப்பட்டிருக்கிறது; வலியைக் காட்டிக்கொள்ளாமல் அள்ளிக்கொள்ள நினைக்கும் பிரியங்களின் உள்ளங்கைகளில் எல்லாம் அது ஆனந்தமாக சுழன்றிருக்கிறது.

பம்பரம் அசையாதது போல நின்று வேகமாகச் சுழல்வதை ‘பம்பரம் உறங்குகிறது’ என்பார்கள் விளையாட்டுத் தோழர்கள். அந்த பம்பரம் முத்துக்குமார்தான்.

ஆகஸ்ட் 14, காலை 11மணிக்கு அண்ணன் அறிவுமதியும் நானும் முத்துக்குமார் வீட்டுக்குள் நுழைந்தபோது அவன் ‘உறங்கு’வது போலத்தான் படுக்கவைக்கப்பட்டிருந்தான். நிறைய வாசிக்கிறவன்; நிறைய யோசிக்கிறவன்; மௌனத்தில் உறைந்து போயிருந்தான். அந்த மௌனத்தின் அர்த்தம் தெரியாத அவனது ஒன்பது வயது மகன் ஆதவன் விளையாடிக்கொண்டிருந்தான். மின்சாரம் இல்லாத புழுக்கத்தில் அவனது எட்டு மாத மகள் யோகலட்சுமி அழுதுகொண்டே இருந்தாள். அவர்களின் விளையாட்டுக்கும் அழுகைக்கும் இடையில் அவன் விட்டுச் சென்றிருக்கிற மௌனமும் துயரமும் வலிமிக்கது.

குழந்தைகளை அவன் அப்படி நேசித்தான். அவனது கவிதைகளும் பாடல்களும் அன்பால் நிறைந்தவை. தனக்குக் கிடைக்காத அம்மாவின் அன்பை அவன் எல்லா வார்த்தைகளுக்கும் ஊட்டிவிட்டான். அதுதான் அவனது படைப்பின் பலம்.

“அம்மாவை எரித்த பின்னும்

அவள் புடவை ஆவியாகிக்கொண்டிருக்கிறது

இட்லித் தட்டுகளில்”

அந்த ஆவி அவன் மனதுக்குள் மூடுபனியாக இருந்தது; மேகமாகவும் இருந்தது. முழுமையாக அனுபவிக்க முடியாத அவனது பால்யகால ஏக்கமும் கனவுகளும் தேடல்களும் அவனுக்குள் கூடுகட்டியிருந்தன. அங்கிருந்துதான் அவன் ஒரு அழகான பாட்டுப் பறவையாகத் தன் சிறகுகளை விரித்தான்.

“உனக்குப் பிடித்த பாடல் அது எனக்கும் பிடிக்குமே...உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே” என்று இசைஞானி இளையராஜாவுக்கு எழுதி அவருக்குப்  பிடித்த பாட்டுப்பிள்ளைகளில் அவனும் ஒருவனாக இருந்தான்.

யுவன்சங்கர் ராஜாவோடு கை கோத்து, “ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது...அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது” என்றான்.

ஜி.வி.பிரகாஷோடு “வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்” போட்டான்.

நவீன கவிதைகளின் படிமங்களை, தெறிப்புகளை, உணர்வுகளை திரையிசைப் பாட்டுக்குள் கொண்டு வந்தது அவனுக்கு ஒரு தனித்துவத்தைக் கூட்டியது. இன்றைய கல்லூரி மாணவர்களின்- மாணவிகளின் காதலுக்கும் கொண்டாட்டத்திற்கும் ஏக்கத்திற்கும் பிரிவுக்கும் அவனது மொழி மிக நெருக்கமாக இருந்தது.

திரைப்பாடல் எழுதுகிறவர்களைத் தீண்டத்தகாதவர்களாக எண்ணிய நவீன இலக்கியவாதிகள்கூட அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவனது பாடல்களை ரகசியமாக காதலித்தார்கள். எப்படியாவது ஒரு சினிமாப்பாட்டு எழுதிவிட வேண்டும் என்று அவர்களுக்குள்ளும் ஓர் ஏக்கத்தை ஏற்றிவைத்தவன் முத்துக்குமார். அப்படி அவன் இயங்குவதற்கு அவனுக்குக் கிடைத்த ராம், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், விஜய்,  லிங்குசாமி  போன்ற இயக்குநர்கள் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டதும் அனுமதித்ததும்  நட்போடு கூடிய அவனது படைப்பின் பெருமிதமாக இருந்தது.

அண்ணன் அறிவுமதியின் 73,அபிபுல்லா சாலை அலுவலகம், முத்துக்குமாரின் அப்பாவித்தனமான முகம், அவனைச் சுமந்த  சைக்கிள், ஈரம் உலராமல் அவன் எழுதி வந்து படித்துக்காட்டிய கவிதைகள், எப்போதும் கைகளில் வைத்திருக்கும் ஏதாவது ஒரு கனத்த புத்தகம், இசையமைப்பாளர் சாந்தகுமாரோடு மெட்டுக்குப் பாட்டெழுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது எழுதிய குறும்பான வரிகள்... ஒவ்வொன்றும் என் ஞாபக நதியில் குழந்தைகளாகக் குதித்து நீந்தி விளையாடுகின்றன. எனக்குள் சட்டென்று காணாமல் போன ஒரு குழந்தையைத் தேடுகிற பதற்றத்தை உண்டு பண்ணிவிட்டு அவன் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறான்.

“நண்பர் பழநிபாரதி நா.முத்துக்குமாரை அனுப்பி, இவனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னதும், என் ‘காலம்’ என்ற சீரியலில் நான் பாட்டெழுத வாய்ப்பு கொடுத்ததும், காரில் போகும்போது நிறுத்தி, ’எப்போ கார் வாங்க போறீங்க?’ என்று என்னைக் கேட்டதும், கல்யாணத்துக்கு அழைத்ததும், இன்று அவன் காலமானதாக யாரோ சொல்வதும்... நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி” என்று நண்பர் நடராஜன் ஜெகநாதன் தனது முகநூலில் அவனுக்கான இரங்கலை பதிவிட்டிருந்தார். இவர்தான் ‘சன்’ தொலைக்காட்சியின் முதல் மெகா சீரியலான ‘சக்தி’ தொடருக்குக் கதை வசனம் எழுதியவர். ஜெகநாதன் சொல்வதுபோலவே, முத்துக்குமாரைப் பக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்குபோதே அவன் மிகத்தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறான்.

அவனுக்குப் பயணங்கள் நிறைய பிடிக்கும். பயணித்துக்கொண்டே படிப்பதும் எழுதுவதுமாக அவனது வாழ்வின் பாதைகள் எல்லா திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தன. இன்று ஒரு புதிரான திருப்பத்தில் அவன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் போல.

சில மாதங்களுக்கு முன்னால் கோவையில் ஒரு இலக்கிய மேடையில் அவன் பேசிய காணொளியைப் பார்த்தேன்.

“பேரழிவுகளைப் பார்க்கிறபோது, மனிதன் இப்படி அழிந்து போவதற்காகத்தானா வாழ்ந்து கொண்டிருக்கிறான்?” என்று கேட்டான்.

“இத்தரை கொய்யாப்பிஞ்சு; நாமதில் சிற்றெறும்பு என்று சொன்ன பாரதிதாசன் ஞாபகம் வந்தார். இருப்பதற்காகத்தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்  என்கிற நகுலனின் கவிதை ஞாபத்திற்கு வந்தது” என்று தொடர்ந்து கொண்டிருந்தான்.

எனக்கு முத்துக்குமாரின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.

“இறந்து போனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்”

மரணம் மிகக்கொடியது. முத்துக்குமார் மரணத்தை அறிந்துவிட்டானா என்று கேட்பதற்குக் கூட இடைவெளி தராமல் அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டது. அவன் தனது அரிதான சிரித்த முகம் ஒன்றை மரணத்துக்குக் காட்டியிருப்பான் என்றே தோன்றுகிறது. அது அவனது கவிதைகளையும் பாடல்களையும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற படைப்பின் முகம்.

செப்டெம்பர், 2016.