சிறப்புக்கட்டுரைகள்

வாசிப்பு இயக்கம்!

வாசுகி

வாசக சாலை முகநூல் மூலம் உருவான அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில முழுக்க இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

நவீன இலக்கியம் தொடர்பான வாசிப்பார்வம் கொண்ட புதிய முகங்களை இந்தக் கூட்டங்களில் காணலாம் என்பது தனிச்சிறப்பு. வாசகசாலைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் கார்த்திக்கிடம் தொடர்பு கொண்டோம்.

‘‘பேஸ்புக் நட்புதான் வாசக சாலை சாலை தொடங்குவதற்கு காரணம். அருண், கிருபாசங்கர், பாஸ்கர் ராஜா, பார்த்திபன் ஆகியோரின் நட்பு முகநூல் வழியாக கிடைத்தது. தீவிர இலக்கிய வாசிப்பு தான் எங்களை ஒன்றாக இணைத்தது. புத்தக வாசிப்பு பற்றிய விவாதம், புதிய புத்தக அறிமுகம் என்ற செயல்பாடுகளை முன்னெடுக்க  முகநூல் பக்கத்தில் வாசக சாலை என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி உருவாக்கினோம்.

இதைத்தொடர்ந்து எனக்கும் அருணுக்குமான நட்பு வலுவானது.  இருவரும் ஒன்றாக இணைந்து ஏராளமான இலக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டோம். நாமும் இதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் எழுந்தது.

2014 டிசம்பர் 14 ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் முதல் கூட்டம் நடந்தது. சுதாகர் கஸ்தூரி எழுதிய 7.83 ஹெர்ட்ஸ் புத்தகத்தை விவாதித்தோம்.

புத்தக அறிமுகம், விவாதம் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் புதிதாக முயற்சித்துப்பார்க்க வேண்டும் என்று நினைத்தோம்.

முழுநாள் இலக்கிய நிகழ்வை நடத்தலாம் என்று தீர்மானித்தோம். 2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி வாசகசாலை சார்பாக முழு நாள் இலக்கிய நிகழ்வை நடத்தி முடித்தோம்.

முழு நாள் நிகழ்வுக்கு ஆட்கள் வருவார்களா என்ற கேள்வி இருந்தது. ஆனால் 80 பேர் வந்திருந்தனர். எழுத்தாளர்கள் அபிலாஷ், இமயம், அரவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முழுநாள் நிகழ்வுக்கு மதிய உணவு வழங்காமல் இருந்தால் அறமாகாது என்ற எண்ணம் எங்களுக்கு எழுந்தது. அப்போதும் நண்பர்கள்தான் உதவினார்கள். இதைத்தொடர்ந்து முதல் ஆண்டு விழாவின் போது விருது வழங்கும் நிகழ்வை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வள்ளுவர் கோட்டம், வித்யோதயா பள்ளியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த நாவல், சிறந்த சிறுகதை, சிறந்த கவிதை தொகுப்பு  என்ற மூன்று  பிரிவுகளுக்கு விருது வழங்கினோம்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் முழு நாள் நிகழ்வை நடத்தினோம். கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் உள்ள இக்சா அரங்கில் நடந்த இந்நிகழ்வில் இயக்குநர் கருபழனியப்பன், ரஞ்சித் கலந்துகொண்டனர். இதழ்களில் வெளியான கதைகளை எடுத்து விவாதிக்கும் ‘ கதையாடல்' என்ற நிகழ்வை நடத்தி வருகிறோம்.

ஈழத்தின் படைப்பாளிகளைப் பற்றி பேசுவதற்கு 2016 ஆம் ஆண்டு 'ஈழத் தமிழர் எழுத்தாளர் வரிசை' என்ற கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த திட்டமிட்டோம்.

2017 ஆம் ஆண்டியில் அண்ணா நூலகத்தில் தமிழ் சிறுகதைகள் கொண்டாட்டம் என்ற நிகழ்வு நடத்தினோம். தமிழ்ச் சிறுகதைகளின் 100வது வருடம் கொண்டாட்டமாகவும் அது அமைந்தது. இதைத்தொடர்ந்து அசோக் நகரில் தமிழ்ச் சிறுகதைகள் கொண்டாட்டக் கூட்டம் நடத்தினோம்.

2016 ஆம் ஆண்டு பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதில் பல படைப்பாளிகளுக்கு இடம் கிடைத்தது. வெறும் இலக்கியக்கூட்டங்கள் மட்டும் நடத்துவதோடு நிறுத்திவிடாமல் சமூகம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும் என்று தோழர் செல்வா கூறிய கருத்து சரி என்று பட்டது.

இதைத்தொடர்ந்து அம்பேத்கார், பெரியார், காரல் மார்க்ஸ் பிறந்த நாளையொட்டி நிகழ்வுகள் நடத்தினோம். சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 15 ஊர்களில் வாசக சாலை இலக்கியக்கூட்டங்கள் நடத்தி வருகிறது,''

இவ்வாறு தங்கள் செயல்பாடுகளைப் பற்றி பகிர்ந்துகொண்டார் அவர்.

ஜனவரி, 2020.