சிறப்புக்கட்டுரைகள்

தப்பித்தேன்

Staff Writer

சென்ற இதழில் தங்கள் ராஜினாமா அனுபவங்களை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தோம். இதை அடுத்து வாசகர்கள் பகிர்ந்த ராஜினாமா அனுபவங்கள் இங்கே. பிரசுரமானவற்றுக்குத் தகுந்த சன்மானம் அனுப்பி வைக்கப்படும்.

தப்பித்தேன்

எஸ்.எஸ்.எல்.சி படிப்பு முடித்த நிலையில் 1971&இல், அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் (அப்போது கழக உயர்நிலைப்பள்ளி) எழுத்தராகப் பணி கிடைத்தது.

பணிபுரிந்த இடத்தில் தோழர் ஒருவர் எல்.ஐ.சி.யில் நல்ல வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, என்னை மடைமாற்றி ராஜினாமா கடிதத்தையும் கொடுக்கச் சொன்னதன் பேரில் நானும் அதை நம்பி உயர் அலுவலருக்கு அனுப்பிவிட்டேன். இந்தா அந்தா என இழுத்தடித்து தஞ்சாவூர் எல்.ஐ.சி. தலைமையகத்தில் நேர்காணல். தெரிவு செய்யப்படவில்லை. படபடப்போடு முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு சென்று ராஜினாமாவை விலக்கிக்கொள்ளச் சொன்னபோது அவர்கள் அடிக்கவே வந்துவிட்டார்கள். நிரந்தரமான அரசு வேலையை இழக்க எவனாவது விரும்புவானா? என்னய்யா மனிதன் நீ! உன் தகுதிக்கு படிப்படியாக உயர்ந்து கண்காணிப்பாளர் பதவிவரை வரவாய்ப்பிருக்கிறதே, நல்லவேளை, உனது விண்ணப்பத்தை பரிசீலிக்க தாமதப்படுத்தியதால் நீ பொழச்சே! என்று சொன்னபோதுதான் போன உயிர் திரும்ப வந்தது. இன்று படிப்படியாக உயர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டேன். இரவல் ஆடையை நம்பி, இடையில் இருந்ததையும், இழந்த கதையாகப் போகாமல் தப்பிவிட்டேன்!

நவீன்குமார், நடுவிக்கோட்டை

நான் செய்த இராஜினாமாக்கள்

சென்னை கால் நடை மருத்துவக் கல்லூரியில் பி.வி.எஸ்.சி. 1983 இல் முடித்துவிட்டு நேராக ஊருக்குச் சென்று மூன்று மாதங்கள் வீட்டில் ஓய்வு எடுத்தேன். பிறகு அம்மாவிடம் காசு வாங்கியதோடு ஒரு சூட்கேசில் துணிகளை நிரப்பிக்கொண்டு ஈரோடு பால் பண்ணைக்குப் போனேன். அன்றே வேலை கிடைத்துவிட்டது. சில மாதங்கள் அங்கே பணிபுரிந்த பின்னர் ஈரோடு பால்பண்ணையில் வேலையை இராஜினாமா செய்துவிட்டு ‘தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் கால் நடை உதவி மருத்துவராக சேர்ந்துவிட்டேன். ஆனால் ஈரோடு பால்பண்ணையில் செய்த இராஜினாமாவைத் தொடர்ந்து பல இராஜினாமாக்கள் செய்ய வேண்டியது ஆகிவிட்டது.

நான் தமிழ் நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் ஏழு ஆண்டுகள்  வேலை செய்தபின் அதை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவில் மான்டானா மாநிலப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ். மாலிக்குலர் பயாலஜி படிக்க 1991இல் போஸ்மென் என்ற பனிப் பிரதேசத்திற்கு வந்தேன். நான் வந்து ஒரு வருடம் கழித்து என் மனைவி ஜெகதாவும் நான்கு வயது மகள் நிலாவும் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டார்கள். அங்கே இரண்டரை ஆண்டுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றேன்.  அதே யுனிவர்சிட்டியில் மைக்ரோ பயாலஜி டிபார்ட்மென்டில் வேலையும் கொடுத்து விட்டார்கள்.

முதன் முதலில் அமெரிக்காவில் கிடைத்த வேலை. சொற்ப சம்பளம். இருப்பினும் தொடர்வதாகவே முடிவு செய்திருந்தேன். என் கிரீன் கார்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் வேறு வேலை தேடினேன்.  உலகிலேயே பெரிய பயோடெக் கம்பெனியான ஆம்ஜென் இல் வேலை கிடைத்தது, ஆக நான் மூன்றாம் இராஜினாமாக் கடிதத்தை எழுதினேன்.

முன்பைவிட இரட்டிப்புச் சம்பளம்; பலவிதமான இன்சூரன்ஸ்கள்; ஸ்டாக் ஆப்ஷன் வேறு; அங்கு இருந்த மூன்றரை ஆண்டுகளில் கிரீன் கார்டு வாங்கியதோடு அமெரிக்காவில் கால்நடை மருத்துவராக வேண்டுமென்றால் தேவையான போர்ட் எக்ஸாமும் பாஸ் செய்துவிட்டேன். தொடர்ந்து நான்காவது இராஜினாமா.

ஒரு சில மருத்துவனைகளில் மருத்துவராக குறுகிய காலம் வேலை செய்தாலும் தொடர்ந்து ஒருவருடம் ஃப்ர்ட்&லாட்ரடேல் என்ற ஊரில் எமெர்ஜென்ஸி ஹாஸ்பிட்டலில் வேலை செய்ததுதான் சொல்லிக் கொள்ளக்கூடியது. கடைசியாக ஒரு இராஜினாமா. அதன் பின் ஃபுளோரிடா மாகாணத்தில் டாம்பா என்ற ஊரில் பிப்ரவரி 2001ல் சொந்தமாக கால் நடை மருத்துவமனை ஒன்றை வாங்கி இங்கேயே தங்கி விட்டோம். இனிமேல் ஒருபோதும் இராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை.

மருத்துவர் உதயகுமார், ஃப்ளோரிடா, அமெரிக்கா

விஞ்ஞானியின் ராஜினாமா!

இருபத்தெட்டு வருடங்கள் பெங்களூருவில் பாதுகாப்புத்துறையில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி மூன்று வார விடுப்பில் அனுமதியுடன் அமெரிக்கா சென்றார். போனவர் விடுப்புக் காலம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்தும் வேலைக்குத் திரும்பவில்லை. எனவே உடனடியாக வேலைக்குத் திரும்பும்படி கடிதம் எழுதினோம். பதில் இல்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற கடித்தையும் அனுப்பியதும் மீண்டும் சில மாதங்கள் விடுப்பு வேண்டும் என்று கடிதம் அனுப்பினார்.ஆனால் உடனடியாக வேலைக்குத் திரும்பும்படி கடிதம் எழுதினோம்.

அவர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். அதற்கும் நாங்கள் அதைப் பரிசீலனை செய்யும் முன் நீங்கள் வேலையில் சேரவேண்டும் என்று கடிதம் எழுதினோம். சிறிது காலம் கழித்து , எனது ராஜினாமாக் கடிதத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டு என்னை விடுவிக்கவும் என்று கேட்டார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவரை வேலையிலிருந்து விடுவித்தோம். கதை இத்துடன் முடியவில்லை.

மீண்டும் சில மாதங்கள் கழித்து, நான் 28 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனவே எனது ராஜினாமாவை விருப்ப ஓய்வாக மாற்றவேண்டும் என்று மீண்டும் ஒரு கடிதம் கொடுத்தார். இது நடக்காது என்று பதில் எழுதியதும் உடனடியாக வழக்கறிஞர் மூலம் 28 வருடம் பணியாற்றியுளேன் எனக்கு ஓய்வு ஊதியம் எதுவும் கொடுக்காமல் என்னை நீக்கி விட்டார்கள் என்று வழக்கு போட்டு விட்டார். அரசு தரப்பு வக்கீல் மூலம்  வழக்கை நடத்த நான்தான் தேவையான ஆவணங்களை அவருக்குக் கொடுத்ததுடன் நீதிமன்றத்திலும் அரசு சார்பாக ஆஜர் ஆனேன்.

அமெரிக்கா செல்லும்போது இவரது வங்கிக் கணக்கில் இருந்தது அதாவது அவர் காட்டியது 50 ஆயிரம் ரூபாய்தான் . மூன்று வார விடுப்பு முடிந்து, பல மாதங்கள் கழித்தும் அவர் வேலைக்குத் திரும்பவில்லை. இவர் தனது வயிற்றுப்பாட்டிற்காக அமெரிக்காவில் வேலை செய்கிறார் என்பது நிரூபணமாகிறது.

அரசு வேலையில் இருந்துகொண்டே ராஜினாமா செய்யாமல் இன்னொரு வேலை ஒப்புக் கொண்டது சட்டப்படி பெரிய குற்றம். நீதி மன்றம் விரும்பினால் தூதரகத்திற்கு கடிதம் எழுதி அவர் எங்கே, எப்போதுமுதல் வேலை செய்கிறார் என்கிற விவரத்தினைப் பெற்று நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்கிறோம் என்று எங்களது பதிலில் எழுதினேன்.

நீதிபதி, விண்ணப்பதாரின் வக்கீலிடம், ‘இந்த வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் நாங்கள் தள்ளுபடி செய்துவிடுவோம், கூடவே உங்கள் மீது வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தது நிரூபிக்கப் பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கவே, எதிர்தரப்பு வக்கீல் ‘‘உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்'' என்று வழக்கை உடனடியாக, வெற்றிகரமாக வாபஸ் வாங்கிவிட்டார்.

ஜெயா வெங்கட்ராமன், பெங்களூரு

வித்தியாசமான ராஜினாமா

இன்று 78 வயதாகின்ற நான் 38 ஆண்டுகள் தொலைபேசித்துறையில் பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற அலுவலர். 1964 முதல் 1970 காலகட்டங்களில் தொலைபேசி நிலையங்களில் அதிகமாக பெண்கள் குறிப்பாக ஆங்கிலோ இந்தியப் பெண்களும் அதிகமாகப் பணிபுரிந்த காலகட்டத்தில் நானும் பணிபுரிந்தபோது காதல் திருமணங்கள் அதிகமாக இருந்தன. அப்போது என்னுடன் பணிபுரிந்த நண்பன் ஒருவன் அருமையான ஆங்கிலம் பேசுவான்.

திடீரென்று ஒருநாள் காணாமல்போய்விட்டான். பணிக்கும் வரவில்லை. திடீரென்று ராஜினாமா கடிதம் அஞ்சலில் அனுப்பிவிட்டான். வீட்டில் ஒரே பிள்ளை. அவன் சம்பளத்தை நம்பிதான் அவனது குடும்பம் இருந்தது. வேறு எந்த விபரமும் தெரியவில்லை. நாங்கள் அலுவலரிடம்

சொல்லி அவன் ராஜினாமாவை ஏற்காமல் மருத்துவ விடுப்பாக மாற்றிவிட்டோம். 15 நாட்கள் கழித்துத் தான் அவன் ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டு மதம் மாறியதுடன் மதபோதகராகவும் ஆகிவிட்ட செய்தி கிடைத்தது.

நானும் என் நெருங்கிய நண்பனும் அவனை சந்தித்து பேசினோம். அந்தப் பெண்ணையும் சந்தித்து அவன் குடும்ப சூழ்நிலை பற்றி எடுத்துச்சொல்லி ராஜினாமா கடிதத்தை திரும்பபெற்று வெளியூருக்கு மாற்றுதல் செய்து கொடுத்தோம். இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடல் நாகராஜன், கடலூர்

அக்டோபர், 2020.