சிறப்புக்கட்டுரைகள்

வாங்க தூங்கலாம்

அந்திமழை இளங்கோவன்

சீனர்கள் தம் எதிரிகளுக்கு செய்த சித்திரவதையை இப்போது நமக்கு நாமே செய்து கொள்கிறோம்.

2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகமாக சம்பாதித்த நடிகர் ஷாருக்கான் (202.83 கோடி-கள்), சினிமாவில் நடிப்பதைத் தவிர பல்வேறு தொழில்கள் செய்கிறார்.  ஷாருக்கான் சம்பாதிக்கிற விதத்தை விட அவரது இரவு வாழ்க்கை சுவாரசியமானது.

‘நான் இரவில் மட்டும் தான் வேலை பார்ப்பேன். பிஸினஸ் தொடர்பாக பலரை நான் காலை மூன்று மணி, நாலு மணி அல்லது ஐந்து மணிக்கு சந்திப்பதுண்டு. என்னை சந்திக்க விரும்புவர்களை உலகம் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் வரச் சொல்லுவேன். என்னைப் பொருத்தவரையில் பகல் பிஸினஸ்மேன்களின் நேரம். இரவு காதலர்களுக்கானது. அதனால் இரவில் சந்திக்கிறேன். வர்த்தக உலகத்திற்கு இது அதிர்ச்சியானது, அவர்கள் இதைப்பற்றி புலம்பலாம். என்னால் இதை மாற்ற முடியாது. ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் ஜம்பாவானுடன் நாங்கள் பேச்சு வார்த்தையிலிருந்தோம். நான்காவது மீட்டிங்கின் போது அவர் தனக்கு ஒரு பெரிய பிரச்னை என்றார். என்னவென்று கேட்ட போது காலை மூன்று மணிக்கு ஷாருக்கானுடன் மீட்டிங் என்றால், எனது மனைவி நம்ப மறுக்கிறாள், அதனால் அவளுக்கு போன் போட்டு தருகிறேன் தயவு செய்து பேச முடியுமா? என்றார். அதிகாலை வரச் சொன்னதற்கு சாரி சொன்னேன். ஆனால் ‘என்னால் பகலில் வேலை செய்ய முடியாது ’. இது ஷாருக்கானின் வார்த்தைகள்.

இந்த சம்பவத்தை பற்றி என் மனைவியிடம் கூறிய போது உங்களைப் போல் என்றார். அந்த பதிலில் மெலிதான எரிச்சல் இருந்தது.

பல நேரங்களில் என் குடும்பம் காலையில் விழிக்கும் போது நான் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். தொடர்ந்து தூங்காமல் வேலை பார்ப்பதை பெருமையாக கருதிக் கொண்டிருந்த என்னைப் பற்றி ஒரு மருத்துவ நண்பரிடம் பகிர்ந்து கொண்டேன். என்னுடைய சிறப்பு என்று எண்ணிய விஷயத்தை அவர் நோய் என்றார். ஒரு கணம் அதிர்ந்த நான் பின்னர் தூக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

டைம்ஸ் பத்திரிகை தகவல்படி 2012 ஆம் ஆண்டு அமெரிக்கர்கள் மட்டும் நல்ல தூக்கம் வேண்டி 32 பில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறார்கள். அதாவது 176000 கோடி ரூபாய்.

அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையான 31 கோடியும் இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்று தான். இந்தியாவில் தூக்கம் சார்ந்த பொருட்களின் சந்தை மதிப்பு 16000 கோடி என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

தூக்கமின்மையை ‘சைலண்ட் கில்லர்’ என்கிறார்கள் . தூக்கமின்மை ஹார்ட் அட்டாக் , மன அழுத்தம் , நீரிழிவு நோய் , ரத்தக் கொதிப்பு, மறதி போன்ற பல நோய்களின் காரணியாகி விடுகிறது .

நவீன உபகரணங்களும் புதிய வேலை வாய்ப்புகளும் நமது தூக்கத்தைக் களவாடி விடுகின்றன. பிலிப்ஸ் நிறுவனத்திற்காக நீல்சன் நிறுவனம் இந்தியர்களின் தூக்கத்தைப் பற்றிய சர்வே நடத்தியது. அதன்படி 93 சதவீத இந்தியர்கள் போதுமான அளவு தூங்குவதில்லை, 38 சதவீத மக்கள் தங்களுடன் வேலை பார்ப்பவர்கள் வேலை செய்யும் போதே தூங்கி விழுவதைப் பார்க்கிறார்கள்.

மருத்துவத் துறை, காவல்துறை , கார்ப்பரேட் நிறுவனங்கள், விற்பனை துறை, விமானிகள், ஓட்டுனர்கள், செய்தி ஊடகங்கள் என்று தூக்கத்தைத் திருடுகிற துறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தொலைக்காட்சியும் , இணையமும் தூங்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது.

இது போக தூங்குவது  நேர விரயம் என்பது போன்ற சிந்தனையையும் நம் மனதிற்குள் விதைத்து விட்டனர். வெற்றியாளர்கள் குறைவாக தூங்குகிறார்கள் என்கிற செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன.

நெப்போலியன், ஆபிரகாம் லிங்கன், சேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ், வின்சென்ட் வான்கோ , அறிஞர் அண்ணாதுரை, மர்லின் மன்றோ என்று நீண்ட பிரபலங்களில் பட்டியல் தூக்கத்தை துறந்து இரவில் இயங்கியவர்கள் என்று கூறப்படுகிறது.

மர்லின் மன்றோ மற்றும் ஓவியர் வின்சென்ட் வான்கோ போன்றவர்கள் தூக்கமின்மையால் ஏற்பட்ட மன அழுத் தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விழித்திருப்பதே உன்னதமானது என்று நம்மில் அனேகர் நம்புகிறோம்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் ஒரு செலவில்லாத சித்திரவதை வழிமுறையை கையாண்டனர். உண்மையைக் கூற வேண்டிய கைதியின் கைகளை உயரே கட்டி ஒரு குறுகிய இடத்தில் நிற்க விடுவார்கள். கைதியால் உட்காரவோ படுக்கவோ முடியாது. அவர் நின்று கொண்டே தூங்கிவிடக் கூடாதென்பதற்காக ஒரு இடைவெளியில் அவர் தலையில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். அனேகர் 24 மணி நேரத்தில் உண்மையைக் கூற ஆரம்பித்து விடுவார்களாம். தில்லான கல்லுளிமங்கன்கள் கூட மூன்று நாட்கள் தாங்க மாட்டார்களாம்.

சீனர்கள் தம் எதிரிகளுக்கு செய்த சித்திரவதையை இப்போது நமக்கு நாமே செய்து கொள்கிறோம்.

பண நெருக்கடி , உறவு ரீதியான உளைச்சல்கள் , அலுவலக அரசியல் மற்றும் முதுமையில் தூக்கம் சிக்கலானதாக இருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு அப்பா அம்மா மட்டுமல்ல; வீட்டில் உடன் வாழ்பவர்களுக்கும் சரியான தூக்கமிருக்காது.

இந்தியாவில் பெண்கள் பலருக்கு போதிய அளவு தூங்கமுடிவதில்லை.

தமிழகத்தில் இந்த பிரச்சனை எப்படி உள்ளது என்று தூக்க ஆராய்ச்சி மையத்தின் தலைவர்  டாக்டர் விஜய கிருஷ்ணனிடம் கேட்ட போது,“பெரும்பாலானாவர்களுக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதே தெரியாது. மூக்கு,தொண்டை பிரச்சனையில் எங்களிடம் வருபவர்களை சோதித்து பார்க்கும்போதுதான் இது தெரியவரும்.அடுத்து சர்க்கரை வியாதி,ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோய் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்களிடம் வரும் நோயாளிகளின் சோதனையின்போது இதனை கண்டறிந்து எங்களிடம் அனுப்பிவைப்பார்கள். மக்களிடம் இந்த வியாதியின் தீவிரத்தை உணர்த்த பல்வேறு தனியார் நிறுவனங்களும்,அரசும் சேர்ந்து செயல்படவேண்டும்” என்றார்.(பார்க்க பேட்டி ).

கூட்டுக் குடும்பத்தில் மணமாகி போன திவ்யாவிற்கு அழகான மகள். பன்னிரண்டாவது வகுப்பு படிக்கிறாள். அன்பான கணவன். திவ்யாவின் நாள் காலை ஐந்து மணிக்கு மகளை எழுப்பிவிடுவதில் ஆரம்பிக்கிறது. காலை டிபன் , எடுத்து போகும் மதியம் சாப்பாட்டையும் தயார் செய்து கிளம்பி எட்டு மணிக்கு வெளியேறி விடுபவள் . அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப ஏழு ஏழரை ஆகிவிடும். இரவு உணவை மாமியார் தயார் செய்து விடுகிறார். வீடு திரும்பும் கணவர் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் போது ஒன்பது மணி பின்னர் குட்டி அரட்டையுடனான டிவி பார்த்தல் என்று பத்தரை வரை நீளும் சபா கலைந்து படுக்கையறைக்கு நுழையும் போது அனேகமாக பதினொன்று ஆகிவிடும்.

அதன் பின் அவ்வப்போது அன்பு ததும்ப கணவன் அரவணைக்கத் தொடங்கும் போது திவ்யா தூங்க தொடங்கியிருப்பாள். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் திவ்யா அலுவலகத்தில் மயங்கி விழுந்து விட்டாள். குடும்பமே பதறியது. பல்வேறு சோதனைகள் முடிந்து கடைசியாக மருத்துவர் எழுதிய சீட்டில் தற்காலிகமாக சில மாத்திரைகளையும் எப்போதும் எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டுமென்றும் பரிந்துரைத்திருந்தார்.

அன்று தான் திவ்யாவின் குடும்பம் தூக்கத்தைப் பற்றி புரிந்து கொண்டது. முன்பெல்லாம் சாப்பிட்டாயாம்மா ? என்று விசாரிக்கும் திவ்யாவின் கணவர் இப்போது நல்லா தூங்கினாயா ? என்று விசாரிக்கிறாராம்.

சுற்றுச்சூழல், சுத்தமான தண்ணீர் , ஆரோக்கியம் என்று பலவற்றையும் இழந்த பின் தான் அது பற்றிய புரிதல் நமக்கு வந்திருக்கிறது. தூங்குதல் நேரத்தை வீணடிப்பதல்ல. நன்றாக தூங்கினால் மீதமுள்ள நேரம் சிறப்பானதாக இருக்கும் .

இன்று முதல் உங்களை  சுற்றி உள்ளவர்களிடம் நேற்று நன்றாக தூங்கினீர்களா என்று அன்போடு விசாரியுங்கள்.

நிம்மதியாக தூங்கும் உலகம் , நிம்மதியாக வாழும்.

மதிய நேர தூக்கம் சரியானதா?

டாக்டர் மன்வீர் பாட்டியா டெல்லியிலுள்ள நரம்பியல் மற்றும் தூக்க மையத்தின் இயக்குனர். இந்தியாவில் தூக்க மருத்துவம் மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை பற்றி விழிப்புணர்வை முதன்முதலில் உருவாக்கியவர்.இதற்கு முன்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின்  நியூராலஜி பேராசிரியராகவும் கங்கா ராம் மருத்துவமனையின் தூக்க மருத்துவத் துறை தலைவராகவும் இருந்துள்ளார்.

கணவன் மனைவி சண்டை, திடீரென வேலை பறிபோவது போன்றவை தற்காலிகமாக தூக்கத்தை பாதிக்கக் கூடியவை. இதனை எப்படி கையாள்வது?

இப்படி திடீர் சூழல் காரணமாக தூக்கம் வராமல் போவது நிரந்தரமானதல்ல.கொஞ்சம் நாட்களில் சரியாகிவிடும். அப்படி இல்லையெனில் 3-4 நாட்களுக்கு தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு பிறகு நிறுத்திக்கொள்ளலாம்.

மதிய நேர தூக்கம் சரியானதா?

தவறில்லை. 15-20 நிமிட தூக்கம் புத்துணர்வு கொள்ளவைக்கும்; காலையில் புதிதாக வேலையை தொடங்குவதுபோல உற்சாகமாகத் தொடங்கலாம்.ஆனால் அதிக நேரம் தூங்கக்கூடாது.

தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் பொருளாதார பாதிப்புகளை உருவாக்கவல்லதா, எப்படி?

ஆமாம். வேலை நேரத்தில் தூக்க கலக்கத்துடனே இருந்தால் வேலையை ஒழுங்காக செய்யமுடியாது.எதையும் கவனமெடுத்து செய்ய முடியாது. மருத்துவ செலவு, மருத்துவமனையில் செலவிடும் நேரம் எல்லாமே மறைமுக பொருளாதார பாதிப்புகளை கொடுக்ககூடியவை.

நம்முடைய இந்திய கலாச்சாரம் பெண்களை சரியாக தூங்கவிடுவதில்லை,இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

பகல் நேரத்தில் தூக்க கலக்கம் மற்றும் அசதியாக இருப்பார்கள். இதனால் மன அழுத்தம், உடல் எடை கூடுவது, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை பெண்களுக்கு ஏற்படலாம்.

படுக்கை அறையில் என்ன செய்யலாம்?

தூக்கம் சம்பந்தமான பிரச்சனைகளில் 80 சதவீதம் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களினாலேயே வருகிறது. நிம்மதியான தூக்கத்திற்கு என்ன செய்யலாம்,செய்யக்கூடாது என்ற பட்டியல் இதோ.

செய்யக்கூடாதவை:

படுக்கை அறையை ஆபீஸ் போல உபயோகிக்க வேண்டாம். அது உங்கள்  நிம்மதியை குலைக்கும். படுக்கை அறை என்பது தூங்குவதற்கும் உடலுறவிற்கு மட்டுமே. டி.வி, ரேடியோ, சாப்பாடு மற்றும் படுக்கையில் புத்தகம் படிக்கும் பழக்கம் கூடவேகூடாது. தூங்குவதற்கு முன் புகைப்பது ரொம்ப ஆபத்தானது. புகையிலுள்ள நிகோடின் மூளை மற்றும் ரத்த ஓட்டத்தை தூண்டும். புகைப்பவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. தூங்குவதற்கு முன்பு வயிறுமுட்ட சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடும்போது சீரண உறுப்புகள் அதிகமாக வேலை செய்ய வேண்டி இருப்பதால் அது தூக்கத்தை கெடுக்கும். இரவு 8 மணிக்கு மேல் எதுவும் குடிக்காமல் இருப்பது நல்லது. தூக்கத்திற்கு நடுவில் சிறுநீர் கழிக்க எழுவது மற்றொரு தடை. புகையை போலவே குடிப்பழக்கம் தூக்கத்தின் எதிரி. குடித்துவிட்டு தூங்கும்போது நன்றாக தூங்கமுடியாது.

தூங்குவதற்கு முன்பு பரபரப்பாக இயங்காதீர்கள்;தூக்க மாத்திரையின் துணையோடுதான் தூக்கம் வரும் என்ற பழக்கம் ஆபத்தானது. டீ,காபி,கோலா,சாக்லேட் போன்றவற்றிலுள்ள காபின் நரம்பு மண்டலத்தை தூண்டி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்க செய்யும். மாலை நேரத்தில் குடிக்கும் காபின் பானங்கள் நடு இரவு வரை தூக்கத்தை பாதிக்கக்கூடியது. தூங்குவதற்கு 4-6 மணி நேரத்திற்கு முன்பு இதுபோன்ற பொருட்களை தவிருங்கள்.

செய்யவேண்டியது:

ஒழுங்கான தூக்க நேரத்தை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் தூங்குவது தூக்கத்தை கெடுக்கும். வார கடைசி நாட்களில் தாமதமாக தூங்கி தாமதமாக எழுவது, திரும்பவும் வேலை நாட்களில் வழக்கத்திற்கு திரும்பும்போது உடல் ஒத்துழைக்காது. தினமும் குறைந்தது 20 நிமிட உடற்பயிற்சி தூங்குவதற்கு முன்பு தசைகளை தளர்வடைய உதவும். ஆனால் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யக்கூடாது,மாலை நேரம் ஏதுவானது.

தூங்குவதற்கு முன்பாக பரபரப்பான வேலைகளிலிருந்து தளர்த்திக் கொள்வது நல்லது. படிப்பு,மெல்லிய இசை, மிதமான சூட்டில் குளியல் போன்றவை நல்ல தூக்கத்திற்கு உதவுபவை. படுக்கை அறை இருட்டாக, அமைதியாக மற்றும் மிதமான வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பிடித்தமான விஷயத்தை பற்றியோ அல்லது தூக்கம் வரும்வரை எண்களை எண்ணிக்கொண்டிருப்பதோ மூளையின் இரண்டு பகுதிகளையும் தூக்கத்திற்கு ஏதுவாக கொண்டு செல்லும்.

 நன்றி:புளோரிடா இண்டர் நேஷனல் யுனிவர்சிட்டி.

கனவே வருவதில்லை என்பது பிரச்னையா?

டாக்டர் பிரீத்தி தேவ்னானி, நரம்பியல், மனவியல் மற்றும் தூக்க மருத்துவத்தில் அமெரிக்க பட்டம் பெற்றவர்.மும்பையிலுள்ள தூக்க மருத்துவ துறையின் இயக்குனர். தூக்க வியாதி மற்றும் அதற்கான பல்வேறு மருத்துவம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் இந்தியாமட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் தூக்கம் தொடர்பான பல்வேறு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர்.

விழிப்பு நிலையில் இருப்பதற்கு நாம் அடிமையாகிவிட்டோமா?

தூக்கம் வராமலிருப்பது தூக்க வியாதி இல்லை. ஆனால் பல தூக்கம் தொடர்பான வியாதிக்கும், உடல் பாதிப்புக்கும் இது காரணகர்த்தா. நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றம்,வேலை பளு இன்றைய தூக்க வியாதிக்கும், குறைவான தூக்கத்திற்கும் வழிவகுக்குகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்த பயன்படும் பெரும்பாலான மருந்துகள் ஒரு முறை உட்கொண்டால்கூட அதற்கு அடிமையாக்கக் கூடியது. சாதாரண தூக்க வியாதியை குணப்படுத்துவதைவிட இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்தி பிரச்னையில் வருபவர்களைக் குணப்படுத்துவது கடினமானது.

எனக்கு கனவே வருவதில்லை என்று சிலர் சொல்கிறார்களே இது தூக்க குறைபாட்டினாலா?

ஆழ் நிலை தூக்கத்தை ரெம்(REM) என்றும்,லேசான தூக்கத்தை நான் ரெம் தூக்கம்(NREM) என்றும் அழைப்போம். தொடர்ந்து தேவைக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு ரெம் பகுதி தூக்க நினைவுகளை நினைவுபடுத்த முடியாது. ஆழ் நிலை தூக்கத்தை கட்டுபடுத்தும் மருந்துகளும் இதே விளைவுகளை உண்டாக்கும்.

சராசரியாக ஒரு நாளில் ஒருவர் எவ்வளவு  நேரம் தூங்கவேண்டும்?

வயதைப்பொறுத்து இது வேறுபடும்.பொதுவாக ஏழரை மணி நேர தூக்கம் அவசியம்.  அடுத்த நாள் காலை விழித்தவுடன் புத்துணர்வாக தோன்ற எவ்வளவு நேரம் தூங்கவேண்டுமோ அவ்வளவு நேர தூக்கம் அவசியம். வயதானவர்களுக்கு குறைவான தூக்கமே வரும்.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்.

மார்ச், 2013 அந்திமழை இதழ்