சிறப்புக்கட்டுரைகள்

வன்னி போருக்கு பிந்தைய நான்கு ஆண்டுகள்

வன்னி இளங்கீரன்

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த போரின் போது ஏற்பட்ட இழப்புக்கள் அழிவுகள் உலக அளவில் பெரும் விஷயமாக பேசப்பட்டுவருகின்றன. ஆனாலும் போருக்குப் பின்னான இன்றைய நிலை தொடர்பில் பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் வெளித்தெரிவதில்லை. யுத்தம் தமிழ் மக்களை இன்று மிக மோசமான நிலைக்குள்ளேயே தள்ளிவிட்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

வன்னியில் போர் நடைபெற்று தமிழர் தாயக நிலங்கள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட போது வன்னியில் இருந்த மக்கள் இராணுவத்தின் நலன்புரி முகாம்கள் என அழைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்திருந்தார்கள். ஒட்டுமொத்த மக்களும் பரம்பரை பரம்பரையாக, சந்ததி சந்ததியாக சேமித்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் வன்னியில் கைவிட்டுவிட்டே இராணுவ நலன்புரி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் மாளிகைகள் கட்டி வாழ்ந்த வீடுகளில் எதுவும் எஞ்சி இருக்கவில்லை. வீட்டு ஜன்னல்கள் முதல் சமையல் பாத்திரங்கள் வரையில் அனைத்தும் முற்றாக சூறையாடப்பட்டிருந்தன. இராணுவ நலன்புரி முகாம்களுக்குள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருந்த போது அவர்களின் சொந்தக் கிராமங்களில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம் இனத்தவர்கள் பொருட் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இரும்பு, மரத் தளவாடம் என அனைத்தும் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதற்கென பல நூற்றுக்கணக்கான கண்டெயினர்கள் எனப்படுகின்ற கனரக வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் புத்தளம் பகுதியில் வீதியோரங்களில் வைத்து ‘வன்னி சேல்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்களை மக்களிடம் மீண்டும் அளிப்பதாகத் தெரிவித்து அரச தரப்பு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்த போதிலும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கைவிடப்பட்ட வாகனங்களில் எதுவும் இன்றுவரை சொந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை.

 அதிலும் குறிப்பாக மிக மோசமான அவலம் ஒன்று நடந்திருந்ததை ஆதாரமாகச் சுட்டிக்காட்டலாம், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையில் நிறுத்தப் பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களின் இலக்கவிபரங்கள் பட்டியலிடப்பட்டு உரியவர்களை பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாகனங்களின் உரிமையாளர்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தமது வாகனங்களைப் பார்வையிட்டு உறுதிப்படுத்தியிருந்தனர். நான்கு நாட்கள் கடந்த நிலையில் தமது வாகனங்களைப் பெறுவதற்காக ஆதாரங்களுடன் சென்றபோது அவர்களுடைய வாகனங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருந்தன. அதிகார வர்க்கத்தில் இருக்கின்ற சில பொறுப்பு வாய்ந்தவர்களின் துணையுடன் வாகனங்கள் தீயிடப்பட்டதாகவும் அவற்றை இரும்புகளுக்காக தென்னிலங்கைக்கு ஏற்றுவதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களுடைய ஆளுகையின் கீழ் இருந்த வங்கிகளில் பெருமளவான தங்க நகைகள் மக்களால் வைப்பிடப்பட்டிருந்தன. அப்படி வைக்கப்பட்டதற்கான ஆதாரச் சான்றுச் சிட்டைகளை மக்கள் இன்றுவரையில் தம்வசம் வைத்திருக்கின்றனர். போரின் பின்னர் குறித்த நகைகளை அரச தரப்பு மீட்டது மட்டுமல்லாமல் மக்களிடம் அது தொடர்பிலான விபரங்களையும் சேகரித்திருந்தது. ஏனைய வங்கிகளின் நடைமுறைகளுக்கு அமைய குறித்த தங்க நகைகளின் உரிமையாளர்களின் பெயர் விபரங்களுடன் பாதுகாக்கப்பட்டிருந்த அவற்றை அதிகாரத் தரப்பு கையகப்படுத்தியதுடன் ஆதாரங்களை வைத்திருக்கும் மக்களிடம் அவற்றினை மனிதாபிமான அடிப்படையிலேனும் ஒப்படைக்கத் தயாராகவில்லை.

அதனைவிடவும் வன்னியில் அரச வங்கிகளும் செயற்பட்டிருந்தன. குறிப்பாக இலங்கை வங்கி மக்கள் வங்கி தேசிய சேமிப்பு வங்கி உட்பட்ட மூன்று வங்கிகள் செயற்பட்டுவந்திருந்தன. அவற்றில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றில் தங்க நகைகளை அடகு வைத்த பெரும் தொகை பணங்களை வைப்பிலிட்ட மக்கள் இன்றுவரையில் அவற்றினைப் பெறமுடியாத துயரம். வன்னியில் இயங்கிய வங்கிகளுக்கும் வெளிமாவட்டங்களில் இயங்கி வங்கிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் இன்மையால் வன்னியில் மக்களால் வைப்பிடப்பட்டவற்றின் விபரங்கள் இல்லை என்றும் அதனால் குறித்த பணத்தினையோ அல்லது தங்க நகைகளுக்கான இழப்பீட்டினை வழங்கமுடியாது என்று அரச வங்கி நிர்வாகம் கைவிரித்துவிட்டிருக்கின்றது.

மீள்குடியேறிச் சென்ற மக்களுக்கு கொட்டில்களுக்கான தடிகளும் குறைந்தளவு தளவாடங்களும் சில மாதங்களுக்கு குறிப்பிடத்தக்களவு உணவுப் பொருட்களும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் இழந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக தொடக்கத்தில் இருந்தே முயற்சிக்க வேண்டிய இக்கட்டான சூழலே வன்னியில் நிலவுகின்றது. மக்களின் தொழில்துறை முயற்சிகளுக்காக எந்தவித குறிப்பிடத்தக்க மானியங்களும் வழங்கப்படவில்லை. அரச நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன்களை வழங்குவதற்கு முன்வந்தாலும் அவற்றுக்கான அதிகமான வட்டிவீதம், அவற்றினைப் பெறுவற்கான நிபந்தனைகள் எல்லாவற்றையும் கடந்து குறிப்பிடத்தக்களவு பணத்தினை கடனாகப் பெற்றாலும் அவற்றினை மீளச் செலுத்துவதற்கு அந்த மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி நிலை மிக மோசமாகவே இருக்கின்றது.

வீட்டுத்திட்டம் உட்பட்ட உதவித் திட்டங்களை இந்தியா மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் வழங்க முற்பட்ட போதிலும் முற்றுமுழுதான அரசியல் தலையீடுகள் குறித்த உதவிகளை மக்களிடம் சென்று சேர்ப்பிக்காத தன்மையே காணப்படுகின்றது. இந்திய அரசு வழங்குகின்ற வீட்டுத்திட்ட நிதி உதவி இறுதியில் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேர்வதாகத் தெரியவருகின்றது. அதேவேளை தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்படுகின்ற வீடுகளுக்கும் குறித்த நிதியினையே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

அனைத்தையும் கடந்து தொழில்துறைகளில் ஈடுபட முயற்சிக்கும் மக்களுக்கும் மீண்டும் மீண்டும் நெருக்கடிகளே ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. குறிப்பாக விவசாயத்தை முற்றுமுழுதாக நம்பியிருக்கின்ற மக்கள் அந்தத் தொழிலைத் தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத அளவிற்கு சந்தையிலும் தென்னிலங்கை சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்ற அதேவேளை உள்ளுரில் அவற்றினை விற்பனை செய்யவும் முயற்சி செய்யப்பட்டுவருகின்றது. விவசாயத்தின் ஊடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்வோர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த முடியாத அவல நிலை தொடர்கின்றது.

அதேபோல தமிழர் தாயகக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மக்களுக்கும் தொடர் நெருக்கடி நிலையே காணப்பட்டுவருகின்றது. தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதாக அடிக்கடி ஊடகங்களில் தகவல் வெளியிடும் அரச தரப்பு சிங்கள மீனவர்கள் தமிழ் மீனவர்களின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பிலோ அவர்களின் வளங்களைச் சுரண்டிக் கொண்டு செல்வது தொடர்பிலோ எந்தத் தகவலையும் வெளிவிடுவதில்லை என்பதை யார் அறிவார்கள்?

இறுதிப்போர் பல்லாயிரக்கணக்கான குடும்பத் தலைவர்களை பறித்தெடுத்திருக்கின்றது. போரில் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களில் பெண்களே குடும்பங்களை வழிநடத்தவேண்டியவர்களாக தொழில் புரிந்து குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. அவ்வாறான பெண்கள் தொழில் புரிவதற்கான எந்தவிதமான தொழிற்சாலைகளோ, தொழில்புரிவதற்கான சந்தர்ப்பங்களோ இல்லை. இவ்வாறான பல்லாயிரம் குடும்பங்கள் இன்றுவரையில் ஒரு வேளை உணவுக்காகவே மிகுந்த நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டு வருன்றன. இவ்வாறான குடும்பங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் குடும்பத்தலைவிகளான பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையை பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்கான எந்தவிதமான ஆரோக்கியமான சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.

விடுதலைப்புலிகள் ஆளுகையில் இருந்த காலப்பகுதியில் நடைபெற்ற திருமணங்களில் பெருமளவானவை சாதி, சமயங்களைக் கடந்தவையாக இருந்தன. அந்தக் காலத்தில் அவை குறித்த கேள்விகளோ, எதிர்ப்பு நிலையோ சமூகத்தில் இருக்கவில்லை. போருக்குப்பின்னர் சாதி, சமயம் குறித்த மீள் நெருக்கடி நிலையினை தமிழர் தாயகச் சமூகம் எதிர்கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றது. இவ்வாறான திருமண பந்தத்தில் கலந்தவர்களில் பலரது குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களும் மனைவியை இழந்த ஆண்களும் பிள்ளைகளுடன் மிகுந்த சிரமத்துக்கு உரியவிடயமாக மாறியிருக்கின்றது. ஆறுதலளிக்கவேண்டிய உறவினர்களே அவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிடுகின்ற நிலை காணப்படுவதால் மிக மோசமான அவல நிலையினை எதிர்கொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலையாகியிருக்கின்ற பல்லாயிரம் போராளிகளும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டே வாழவேண்டிய நிலையும் காணப்படுகின்றது. அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதில் நிறுவனங்களும் நிறுவன நிர்வாகிகளும் தயக்கம் காட்டுகின்றனர். இதனைவிடவும் முன்னாள் போராளிகள் சமூக வாழ்க்-கையை முன்னெடுக்க தொழில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அரச தரப்பு வேலை வழங்குவதற்கு தயாராகவிருக்கின்றது. வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை அடுத்து முன்னாள் போராளிகள் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களாக செயற்படவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகவிருக்கின்றது.

அதேபோல சாதாரண வாழ்க்கையுடன் இணைய முற்படும் முன்னாள் போராளிகள் திருமண பந்தத்தில் இணைய முற்பட்டாலும் இவ்வாறான நெருக்கடிகளாலும் அச்சம் காரணமாகவும் அவர்களுக்காக மணமக்களை வழங்குவதற்கும் சமூகம் பின்நிற்கின்றது.

இவ்வாறான ஏராளமான நெருக்கடி நிலையுடனேயே போரின் பின்னான வன்னியின் நிலைமை காணப் படுகின்றது. வீதி ஓரங்களில் அழகிய கட்டடங்களை அமைப்பது, வீதிகளைச் செப்பனிடுவது, அரசமரம் காணப்படும் இடங்களில் புத்தவிகாரைகளை அமைப்பது என்பவற்றுடன் நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்பட்டுவிட்டதாக எண்ணிவிடமுடியாது என்பதை ஆளுந்தரப்பு புரிந்து கொள்ளவில்லை.

இறந்தவர்களை நினைவுகூர்வது பயங்கரவாதமா? - முன்னாள் எம்.பி. செல்வராசா கஜேந்திரன்

- முன்னாள் எம்.பி. செல்வராசா கஜேந்திரன் இனப்படுகொலையில் இறந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியதற்காக, அந்த நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) உள்பட்டோரை, இலங்கை பயங்கரவாதத் தடுப்பு போலீசார் கடும் விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளனர். இது குறித்து கஜேந்திரனிடம் கேட்டபோது, அவர்  நம்மிடம் கூறியது: 

“ஏனைய கட்சிகள் நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் இறந்தவர்களை நினைவுகூரும் செயல்பாடுகள் நடந்துகொண்டு இருக்கும்போது, எங்களின் கட்சியை மட்டும் இலக்குவைத்து, அந்த நிகழ்வு தொடர்பாக விசாரிப்பதும் தொடர்ந்தும் கட்சியின் செயல்பாடு குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அரசியல் செயற்பாடுகளில் இருந்து நாங்களாக விரும்பி ஒதுங்கிச்செல்ல வேண்டும் என்பதற்காக, சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளும் செயற்பாடுதான் இது. ஒன்று நாங்களாக விலகிச்செல்ல வேண்டும் அல்லது எங்களது ஆதரவாளர்கள் எங்களிடம் இருந்து விலகிச்செல்லச் செய்யவேண்டும் என்பதில், அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இது, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, தொடர்ந்துகொண்டு இருப்பதையும் தமிழ்த்தேசத்தின் குரல்வளையை முற்றாக நசுக்கி, தமிழ்த்தேசத்தை முழுமையாக இல்லாமல் அழிப்பதற்கான சூழலை அவர்கள் உருவாக்குவதைத்தான் நாங்கள் பார்க்கமுடிகிறது”

ஜூன், 2013.