நம் மாநிலத்தின் மிகச்சிறந்த வசதியான பெண்உடை, லெக்கின்ஸ்! ஆண்களுக்கும் இதுவே வசதியான உடை!
முத்தான பத்து காரணங்கள்:
1. அதிக வெப்ப நாட்கள் கொண்ட, நம் வாழ்வில், புடவைகள் ஆரோக்கியமானவை இல்லை. எத்தனை முறை துணியால் உடலைச் சுற்றிக்கொள்வது. இடுப்பு தெரிகிறதா, மார் தெரிகிறதா, புடவை நழுவுகிறதா என்று புடவையை ஒதுக்கி விடவே நமக்கு நேரம் போதாது. எப்பொழுதாவது நேரமும், வாய்ப்பும் இருக்கும் போது புடவையை அணிந்து மகிழலாம். நளினமாய் உடல்மொழி ஏற்கலாம்.
2. சமையலையும், குழந்தைகளையும், பொதுவேலைகளையும் கவனிக்க, வாகனங்களை இயக்க லெக்கின்ஸே, ஜீன்சை விடச் சிறந்த உடை. தடிமனான ஜீன்ஸ், அதிகப்புழுக்கத்தையும் இறுக்கத்தையும் தொற்றுநோய்களையும் கொடுக்கும். லெக்கின்ஸ் இத்தகைய தொல்லைகளை அளிக்காத உடை.
3. இன்றைய பொருளாதார நிலையில், குறைந்த உடைச்செலவை நிர்வகிக்க லெக்கின்ஸ் உடையே வாய்ப்பாக இருக்கும். புடவை என்று வாங்கினால், அதனுடன் பாவாடை, ப்ளவுஸ், உள்ளாடைகள், ஃபால்ஸ், ப்ளவுஸ்க்கு லைனிங் இன்ன பிற அதிகமான செலவை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்று நீவிர் அறிவீர். அதுமட்டுமல்ல, புடவை அணிந்து சமையலறையில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று உங்கள் தாயிடமும் மனைவியிடமும் கேட்டுப்பாருங்கள். அதற்கு மாற்றாகத்தான், வீடுகளுக்குள் நைட்டி வந்தது.
4. மேலும், லெக்கின்ஸ், மாதவிலக்கு நாட்களுக்கு, கருவுற்ற காலத்திற்கு மிகவும் வசதியான உடை. உடலுடன் பிணைந்திருந்து எந்த அசௌக ரியத்தையும் கொடுக்காது. இந்த வகையில், சுடிதாரை விடவும் சிறந்த உடை என்பேன். காட்டன் லெக்கின்ஸ், மிகவும் நல்லது.
5. லெக்கின்ஸ்களின் நிறத்திற்கு ஏற்ற அல்லது மாறான விதவிதமான ’டாப்களை’ அணிந்து உற்சாகம் பெறலாம். அதிலும் கழுத்துப்பகுதியிலும் கைப்பகுதியிலும் விதவிதமான ‘கட்’வைத்து உயர்தர, நவீன உடையாக்கலாம். இதனால், பல வேலைகளை ஒரே சமயத்தில் கையாளும் பெண்கள், உடைகளுக்கு அதிகக்கவனமோ நேரமோ கொடுக்கவேண்டியதில்லை.
6. இந்த ‘லெக்கின்ஸ்’ ட்ரெண்டும் விரைவில் மாறும் என்று நம்புகிறேன். இன்று லெக்கின்ஸை ரகசியமாக விரும்பி ஃபோட்டோ எடுத்து, வெளிப்படையாக வெறுப்பது போல் காட்டிக்கொள்ளும் ஆண்களின் மகள்களும் மருமகள்களும் எதிர்காலத்தில், காற்றோட்டமான, குட்டைப்பாவாடைகள் அணிந்து ஹீல்ஸில் நடக்கும் காலம் வரும். அதை தந்தையர் ஏற்றே ஆகவேண்டும். ஏனெனில், மகள்களின் அசௌகரியங்களை மாற்றப் போராடும் ஒரே ஆண்வகையினம் ‘தந்தையர்’ மட்டுமே என்பதில் எனக்கு என்றும் மாறாத கருத்து உண்டு.
7. விரைவில், லெக்கின்ஸ் உடை பள்ளிச்சீருடையாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.
8. ஆண்களுக்கும் லெக்கின்சை உடையாகப் பரிந்துரைக்க விரும்புகிறேன். தொப்பைக்குக் கீழே வீணே மாட்டிக்கொண்டிருக்கும் டைட் ஜீன்ஸ், மற்றும் குடித்துவிட்டு தெருச்சாலைகளில் விழுந்து கிடக்கையில் நழுவும் வேட்டி இவையெல்லாம் ஆண்களுக்கு அழகே இல்லை. கைலியும் அந்த வகையில் ‘லெக்கின்ஸ்’ உடன் சேர்கிறது.
9. ‘நைட்டி’ பரவலான போது, அந்த உடை மீதும் ஆண்களுக்கு இதே வெறுப்பு இருந்தது. பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற உடைகளைக் கண்டறியும்போது ஆண்கள் பதட்டமடைவது வழக்கமே.
10. எந்த உடை அணிந்தாலும், பெண் மீதான பாலியல் வன்புணர்வு என்பதை நியாயப்படுத்த ஆண்கள் பக்கம் மூட்டை மூட்டையாகக் காரணங்கள் இருக்கின்றன என்பதை எந்தச் சிறிய பெண்ணும் இன்று அறிந்து வைத்திருக்கிறாள்.
இன்னும் நிறைய பலன்கள், ‘லெக்கின்ஸால்’ உண்டு என்றாலும், அடுத்த முறை உங்கள் ‘லெக்கின்ஸ் வெறுப்பின்’ போது அவற்றையெல்லாம் பதிவிடுகிறேன். பெண்ணோ ஆணோ எல்லோரும் லெக்கின்ஸ் அணியுங்கள், கொண்டாடுங்கள்!
(முகநூல் பதிவிலிருந்து)
அக்டோபர், 2015.