சிறப்புக்கட்டுரைகள்

லபோ திபோ! லமோ

முத்துமாறன்

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நான்கு கல்லூரி மாணவர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்கு வேண்டியது அரைக்கிலோ கொக்கைய்ன். அதைத் தருவதாகச் சொன்ன ஆள் வந்தான். துப்பாக்கியை எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு பறந்துபோய்விட்டான். மாணவர்கள் தங்கள் பல்கலைக்குத் திரும்பினார்கள். இதற்குக் காரணமாக இருந்தவன் என்று ஒருவனைப் பிடித்து உதைத்தார்கள். பிரச்னை பெரிதாகி வழக்குப் பதிவானது. அந்த நான்குபேரில் ஒருவர் பெயர் லலித்மோடி. ஐந்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நிலையைக் காரணம் காட்டி, ஓராண்டிலேயே இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் லலித். இந்தியாவில் 200 மணி நேரம் சமூகசேவை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதித்து அவர்அனுப்பப்பட்டார்.

2009. “போன்ல யார் தெரியுமா? ப.சிதம்பரம். ஐபிஎல்லை தென் ஆப்ரிக்காவுக்கு மாத்தாதேன்னு கெஞ்சுறாரு... முடியவே முடியாதுன்னுட்டேன். காங்கிரஸ் இதனாலேயே 75 இடங்களில் தோக்கப்போறாங்க..” ஐபிஎல் போட்டிகளின் பொறுப்பாளரான லலித்மோடி தன் அறையிலிருந்து வெளியே வந்தவாறே சொன்னார். கூட இருந்தவர்கள் வாயைப் பிளந்தார்கள்.  பொதுத்தேர்தலை ஒட்டி ஐபிஎல் போட்டிகள் வந்ததால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு சொன்னது.

பிசிசிஐ இங்கிலாந்தில் அல்லது தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என்று யோசித்தது. அதன் துணைத்தலைவரும் ஐபிஎல் பொறுப்பாளருமான லலித் மோடி தென் ஆப்ரிக்காவுக்குப் பறந்தார். நாலே நாள்.. தூங்கவே இல்லை. அங்கே ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார். கல்லூரி படிக்கும்போது கொக்கைய்ன் வாங்கி மாட்டியவர், இடைப்பட்ட ஆண்டுகளில் எதையும் செய்துமுடிக்கும் ஜித்தனாக உருமாறிவிட்டார். ஐபிஎல் என்ற பணம்கொழிக்கும் அமுதசுரபியை பிசிசிஐக்கு வெறும் காற்றில் இருந்து உருவாக்கித்தந்தவர் லலித் மோடி. சுருக்கமாக லமோ. ஓராண்டாக பிரச்னையேஇல்லாமல் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி அரசுக்கு வந்த தலைவலியின் நாயகர். காங்கிரசுக்கு அவரைப் பிடிக்காதுதான். ஆனாலும் இப்போதைக்கு அவர்களுக்கு வராது வந்த மாமணி லமோ. வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜகவின் மென்னியை நெரிக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள்.

லமோவின் அப்பா கே.கே. மோடி ஒரு பெரிய தொழிலதிபர்.  இளைஞர் லமோ அமெரிக்காவிலிருந்து வந்தபின் தனக்கென்று தொழில் நிறுவனங்கள் தொடங்கினார். எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தன்னைவிட பத்துவயது மூத்தவரான மினால் என்ற விவாகரத்தான பெண்ணை மணந்துகொண்டார். இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவரான லமோ ராஜஸ்தான் கிரிக்கெட் கிளப்பை கைப்பற்ற திட்டம் போட்டார். தன்னுடைய இருப்பை மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றினார். அங்கு ஏற்கெனவே அந்த கிளப்பை கையில் வைத்திருந்த ருங்க்தா குடும்பத்தினரிடம் இருந்து கைப்பற்ற யாராலும் முடியவில்லை. அப்போது பார்த்து ராஜஸ்தானில் பாஜக வென்று வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வர் ஆனார். அவர் லமோவின் அம்மாவுக்கும் மனைவி மினலுக்குக்கும் தோழி. கூடிய விரைவில் வசுந்தராவின் ஆட்சியில் பெரும் செல்வாக்கு பெற்ற நபர் ஆனார்.

தொடர்ந்து சில தில்லாலங்கடி வேலைகள் மூலம் ராஜஸ்தான் கிரிக்கெட் கிளப் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

சரத்பவாரின் நம்பிக்கையைப் பெற்று 2006-இல் அடுத்து அவர் பிசிசிஐ யின் துணைத் தலைவர் ஆனார். அதன் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்த அவர், பிசிசிஐ யின் வருமானத்தை 6000 கோடி ஆக்கிக்காட்டினார்.  இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான் ஐபிஎல் 20-20 போட்டிகள். ஏராளமாகப் பணம் புரளும் என்றதும் பிசிசிஐ ஒப்புக்கொண்டது. 2008-ல் முதல் ஆண்டிலிருந்தே ஐபிஎல் போட்டிகள் பயங்கரமான வெற்றி! பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது! கிரிக்கெட் ரசனையை வைத்து பணம் பறிக்கிறார்கள் என்று ரசிகர்கள் புலம்பினாலும் வாயைப் பிளந்துகொண்டு ஐபிஎல் 20-20 போட்டிகளைப் பார்ப்பதை நிறுத்தவில்லை!

ஐபிஎல் போட்டிகள் சுமார் 25000 கோடி புரளும் பெரும் தொழிலாக மாறியது. பணத்தோடு லமோவுக்கு கட்டுக்கடங்காத அதிகாரமும் வந்து சேர்ந்தது. அதிகாரம், பெரும் சக்திகளுடன் தொடர்புகள் என்று லமோ வாழ்ந்தார்!’

அவர் சொந்தமாக விமானம் வைத்திருந்தார். அது சகல வசதிகளும் கொண்டது. அதன் டாய்லட் கூட தங்கத்தால் ஆனது என சொல்லப்பட்டது. ஒவ்வொருநாளும் போட்டி நடக்கும் ஊருக்கு விமானத்தில் பறந்துவருவார். போட்டி நடக்கும்போது மைதானத்தில் எல்லாவற்றையும் நுண்ணிய அளவில் நிர்வாகம் செய்வார். அவரைப் போகஸ் பண்ணுவதற்கென்றே ஒரு காமிரா.

சினிமா கவர்ச்சி, பெருநிறுவனங்களின் பணம் இரண்டையும் கிரிக்கெட்டுக்குள் இழுத்துவிட்டவர் அவர். ஆட்டம் முடிந்ததும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் இன்னொரு ஆட்டம் ஆரம்பமாகும். விடிகாலை வரை கிரிக்கெட் வீரர்களும் பணக்காரர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளும் விருந்து.  லமோதான் அங்கே நாயகன். ரெண்டு ரவுண்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கும் விருந்தினர்களிடம் பேசுவார். விடிகாலையில் விமானம் ஏறி அடுத்த ஊருக்குப் பறந்துபோவார். “மனுசன் எப்பத்தான் தூங்குவார்? எப்பதான் எந்திரிப்பார்? என்னா எனர்ஜிப்பா?” என்று எல்லோரும் மாய்ந்துமாய்ந்து பேசினார்கள்.

மூன்று வருடம் ஐபிஎல் தலைவராக பட்டையைக் கிளப்பியவருக்கு எதிரிகளும் அதிகமானார்கள். 2010-ல் கொச்சி டஸ்கர்ஸ் என்ற அணி உள்ளே சேர்க்கப்பட்டது.

அதில் அப்போதைய மத்திய அமைச்சர் சஷி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு பங்குகள் இருந்தன. இந்த விவகாரத்தை லமோ ட்விட்டரில் கிளப்பிவிட்டார். இதையடுத்து சஷி தரூர் பதவி விலகினார். இந்த விவகாரத்தில் பிசிசிஐ இவர் மீது குற்றம் சாட்டியது. அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். சுமார் 2000 கோடி அந்நியச்செலாவணி மோசடி, அமலாக்கத்துறை வழக்கு என்று எல்லாம் பாய்ந்தன. அவர் மீது சென்னை காவல்துறையில் வழக்குத்தொடரப்பட்டது. இதற்கிடையில் லமோ லண்டனுக்குச் சென்றுவிட்டார். இங்கிலாந்திலிருந்து அவரை விசாரணைக்கு இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அதனால் அவரை லண்டனை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று அப்போதைய மத்திய அரசு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில் பிசிசிஐ லமோ மீதான விசாரணையைத் தொடங்கியது. 2013-ல் அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. காங்கிரசைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவைச் சேர்ந்த அருண் ஜெட்லி ஆகியோ இந்த முடிவை எடுத்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்தனர்.

லண்டனில் லமோ ஐந்து மாடிக் கட்டடம் ஒன்றில் வாழ்கிறார். மாத வாடகை 12 லட்சம். ஃபெராரி காரில் பயணம் செய்கிறார். சொகுசு வாழ்க்கை தொடர்கிறது.

ரைட்டு. லமோவுக்கு எதிரிகள் அதிகம் இல்லையா? இந்தியாவில் 2014-ல் ஆட்சி மாறியது. பாஜக ஆட்சி வந்ததும் லமோவுக்கு லண்டனில் வசிப்பது சலித்திருக்கவேண்டும். லமோ தன் தொடர்புகளைச் சுண்டினார்.

அவரது மனைவிக்கு போர்ச்சுகலில் கான்சர் ஆபரேஷன். அதற்கு சில கோப்புகளில் கையெழுத்திட கணவர் என்ற பெயரில் லமோ அங்கு செல்ல நிபந்தனைகளைத் தளர்த்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போன ஆண்டு கடிதம் எழுதினார். வசுந்தரா ராஜே சிந்தியாவும் லமோவுக்கு உதவி செய்யும்படி கடிதங்கள் எழுதினார். இங்கிலாந்து அரசு ஒப்புக்கொண்டது. லமோ உலகம் சுற்றும் வாலிபன் ஆனார். பல ஊர்களுக்குப் போய் பல பிரபலங்களுடன் போட்டோ எடுத்து சமூக  ஊடகங்களில் போட்டுக்கொண்டார். நவோமி காம்பெல், பாரிஸ் ஹில்டன், தீபிகா படுகோன், ஷாருக்கான் என்று பல புகைப்படங்கள்.

சுஷ்மாவும் வசுந்தராவும் லமோவுக்கு ஆதரவாக எழுதிய கடிதங்கள் பிரிட்டன் மற்றும் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டதன் பின்னால் பாஜகவின் சக்திவாய்ந்த நபர் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் சுஷ்மாவுக்கும் எப்போதுமே பகைதான். இந்த விவகாரம் வெடித்ததும் பாஜக எம்பியும் அருண் ஜெட்லியின் எதிரியுமான கீர்த்தி ஆசாத், இதெல்லாம் ஒரு பாம்பு செய்ற வேலை என்று மறைமுகமாக ஜெட்லியைக் குறிப்பிட்டார்! ஆனால் பாஜக தலைவர்கள் சட்டென்று சுஷ்மாவுக்கு ஆதரவாகக் களமிறங்கினார்கள். ஜெட்லிகூட சுஷ்மாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதன்பின்னால் காவி கட்சியின் அரசியல் இருக்கிறது. அமித் ஷா, மோடிக்கு அவ்வளவாக விசுவாசமாக இல்லாத சுஷ்மாவின் முழுஆதரவை தனக்கும் மோடிக்கும்  பெற்றுவிட்டார் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.

குற்றவாளியென தேடப்படும் நபருக்கு உதவியதாக கையும் களவுமாக அமைச்சர் களும் தலைவர்களும் சிக்கியிருக்கிறார்கள். புதுடெல்லியே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு பலர் லமோவின் எண்களை தங்கள் போனில் இருந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள். சரிவிலும் சிக்கலிலும் லமோ ராயலாகத்தான் இருக்கிறார்!

ஜூலை, 2015.