சிறப்புக்கட்டுரைகள்

லட்சம் மரம் வைக்காதீங்க, பத்து மரம் போதும்! குட்டு வைக்கும் மூட்டு டாக்டர்!

தமிழ்க்கனல்

சென்னை போன்ற நகரத்தில், பிஸியாக இயங்கிக்கொண்டு இருக்கும் எவருக்கும், வீட்டுக்குப் போய் ஆசுவாசமாக உட்கார்ந்தால் போதும் என்றுதான் இருக்கும். ஆனால், பிரபல எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவரான பார்த்தசாரதிக்கு, முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு இடையிலும், தான் வளர்க்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்றால், மனம் நிலைகொள்ளாது.

600 மரங்களுக்கு மேல் வளர்த்துள்ள டாக்டர் எம். பார்த்த சாரதிக்கு, சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள சேலியமேடு. அங்கேயும் அதிக அளவில் மரங்களை வளர்த்திருக்கும் இவர், கிரீன் வெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பை நிறுவி, அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் மூலமாக, ’மரங்கள் நம் உண்மையான நண்பர்கள்’ என்பதை மந்திரம் போல எடுத்துச்சொல்லி புரியவைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இந்த ஃபவுண்டேஷன் மூலம், மரம் வளர்ப்புக்கு சமூக-வியல்- அறிவியல் அடிப்படையிலான திட்டத்தை முன்வைப்பதுதான்  நோக்கம் என்கிறார், இந்த எலும்பு டாக்டர்.

இவருடைய பசுமை ஈடுபாட்டைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில், 2010 ஆம் ஆண்டுக்கான ‘கர்மவீரர் காமராஜர் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மரங்களை நடுகிறேன், லட்சம் மரங்களை நடுகிறேன் என்பவர்களைப் பற்றிப் பேசினாலே, மருத்து-வருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

“சில பிரபலங்கள் பெருமைக்காக  ஆயிரக்கணக்கில் லட்சக்-கணக்கில் மரக்கன்றுகளை நடப்போவதாக அறிவித்து விடுகின்றனர். எங்களுடைய அனுபவத்தில் பத்து செடிகளை நட்டு பாதுகாத்து மரமாகும்வரை வளர்த்தால் அதுவே பெரிய விஷயம். செடிகளை நடுவதைப் பற்றி யோசிப்பதைவிட, அவற்றை எப்படி மரங்களாக்கி பாதுகாப்பது என சிந்திப்பதுதான் இப்போதைய தேவை. இது மட்டுமின்றி, சாலையோர நடைபகுதியில் செடிகளை நட்டுவைத்து, இன்னார்தான் இந்த செடியை நட்டுவைத்தார்கள் என்று விளம்பரப் பலகை வைக்க மட்டும் வைத்துவிட்டுப் போய்விடலாம் என பலரும் நினைக்கிறார்கள். எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுபோல சும்மா பேர் பண்ணுகிறவர்களால், இந்த செடிகள் நடப்படும் இடங்களில் மிகக் குறைந்த காலத்திலேயே பெரும்பாலும் பட்டுப்போய், வெறும் விளம்பரப் பலகையும் மரக்கூண்டும்தான் மிஞ்சி இருக்கும். இன்னொரு வருத்தமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பசுமை ஆர்வலர்களும், அரசு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அரசுசாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இன்னும் உணர்ந்துகொள்ளாத முக்கியமான ஒரு விஷயம், நகர்ப்புற சாலையோர நடைபகுதிகள் மரம் வளர்ப்பதற்கு உரிய இடமே அல்ல என்பதுதான்”.

“இன்றைய காலகட்டத்தில் சாலையோர நடைபகுதியானது மரம் வளர்க்க சரியான இடமாக இருப்பதில்லை. மரங்கள் வளரத் தடங்கலாக, குழி பறிப்பது, மண்ணைப் போட்டு மூடுவது என எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதையெல்லாம்தான் செய்கிறார்கள். மேலும், சாலையோரங்களில் மரம் வளர்வதற்கான தாங்குதிறனுள்ள மண்வளமும் இருப்பதில்லை. இதையும் மீறி வளர்ந்துவிடும் மரங்களால் நடப்பவர்களுக்கு தொல்லைதான். இந்த மரங்கள்,

சின்னச்சின்ன விளம்பரப் பலகைகளை மாட்டுவதற்கு பயன்படுமே தவிர, பொது மக்களுக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை. சொல்லப்போனால், ஏதோ ஒரு வகையில் இவை அழிக்கப்பட்டு விடுகின்றன, பருவமழை காலங்களில் வேரோடு சாய்ந்து, சாலைகளில் செல்பவர்களின் உயிரைப் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, நமது நல்ல சுற்றுச்சூழலை உண்டாக்கவும் வெப்பமயமாதலைக் குறைக்கவும் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், நீண்டகாலம் உயிர்வாழும் மரங்களை நட்டு வளர்க்கவேண்டும். பாதுகாப்பான இடம், வளமான மண், சூரிய ஒளி, முறையான நீர் ஊற்றல், கூண்டுகளைக் கொண்டு பாதுகாப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்தால்தான், மரங்களை வளர்ப்பதில் அர்த்தம் இருக்கும். இதற்காக, தேவைப்பட்டால் ஆட்களை வேலைக்கு அமர்த்தவும் வேண்டும். குழந்தையை வளர்ப்பதைப் போலத்தான் மரங்களை வளர்ப்பதும்” என பேசிக்கொண்டு இருந்தவருக்கு, அலைபேசி அழைப்பு.

“நாங்கள் ஒரு இடத்தில் வைத்த மரங்களுக்கு மாநக-ராட்சியே தண்ணீர் விடுவதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டோம். புது அதிகாரி வந்த பிறகு, அங்கு தண்ணீரே விடவில்லை. அந்த அதிகாரியிடம் பேசிப் புரியவைத்தோம். யாரிடமும் முரண்படுவது எங்கள் நோக்கம் இல்லை. எல்லாருக்கும் புரியவைத்து, செயல்பட வைப்பதுதான் எங்கள் வழிமுறை”- புன்னகையோடு சொன்ன டாக்டர் பார்த்தசாரதி, விடாமல் தொடர்ந்தார்.

“இன்னும் நிறைய பேர் அவரவர் இடத்தில் அழகான புல்தரைகளை உருவாக்கி, பசுமையாக வைத்திருப்பதே பயனளிப்பது என நினைத்து செய்கிறார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்குமே தவிர, இதனால் இயற்கைச் சூழலுக்கு எந்தவித குறுகியகால, நீண்டகாலப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் பொதுப் பூங்காக்களிலும் சாலையோரப் பூங்காங்களிலும் சாலையிடைத் தீவுப் பகுதிகளிலும் இது போல பல செயற்கைப் புல்தரைகளை வளர்க்கிறார்கள். இவற்றுக்காக கட்டுமான இடிபாடுகளைக் கொட்டி மட்டத்தை உயர்த்திக்கொண்டே இருப்பதை பல இடங்களில் அடிக்கடி பார்க்கமுடியும். இந்த புல்வெளிகளால் மழைநீர் பூமிக்குள் போகக்கூட வழி இருக்காது. இதைப் போலவே, இன்னொரு வருத்தமான விஷயம், சாலை நடுப்பகுதிகளில் புதர்ச்செடிகளை வளர்ப்பது. ஆண்டு முழுவதும் வாகனப் புகை படிந்தபடி கிடக்கும் இந்தச்செடிகள், எந்தப் பயனையும் தரமுடியாமல் கோடை காலத்தில் வாடி வதங்குவதைத்தான்  பார்க்கமுடிகிறது. இந்த பாணியிலான ‘பசுமை’யால் பூமி வெப்பமயமாதலைத் தடுக்க சிறு வாய்ப்பும் இல்லை. மாறாக, இவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் மின்சாரம், மனித ஆற்றலால் பூமி சற்று அளவு அதிகமாகவே சூடேறத்தான் செய்யும். எனவேதான், ஒரு மரம் வளர்த்தாலும் மூன்று நான்கு வருடங்களாவது முறைப்படி தண்ணீர் ஊற்றி, பராமரித்து மரமாக்குவதே இயற்கைக்கும் பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும் செய்யக்கூடிய உருப்படியான காரியமாக இருக்கும்” என்று தன் பொழிவை முடிக்கும் தறுவாய்க்கு வந்தவர், “சிவதானியா, தடுசு, மலைவேம்பு, பாதாம், இலுப்பை, கடம்ப மரங்களையும் இன்னும் பொது இடங்களில் வளர்க்கக்கூடிய நாகலிங்கம், மகிழ மரங்களையும் தேர்ந்தெடுக்கலாம்” என ஆலோசனையும் சொல்கிறார்.

சொல்லி முடித்தவர், இரண்டு கைகளில் செடி, கொடி பைகளையும் ஒரு தண்ணீர் கேனையும் எடுத்துக்கொண்டு, கார் டிக்கியில் வைத்தார்.

“பிர்லா கோளரங்கம் பக்கத்தில் மரங்களுக்குத் தண்ணீ ஊத்திட்டு, ஆஸ்பிடலுக்குப் போகணும்,  இன்னைக்கு ரெண்டு மைனர் ஆபரேசன், ஒரு மேஜர் ஆபரேசன் பண்ணனும்..” என அன்றைய  பணிகளைப் பட்டியலிட்டபடி, காலைப் பணிகளுக்காக தயார் ஆனார் பார்த்தசாரதி.

மார்ச், 2013.