லண்டனை சேர்ந்த இசை ஆசிரியர் ஸ்டீபனுக்கு இதயத்தில் வால்வுக் கோளாறு. அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். சாதாரணமாக இதில் 1 - 2 சதவீதம் மட்டுமே ஆபத்து. மற்றபடி மிக எளிதான சிகிச்சை. 90 நிமிடங்களில் முடிந்துவிடும்.
ஸ்டீபன் உற்சாகமாக அறுவை சிகிச்சை அறைக்குப் போனார். அவருக்கு சிகிச்சை தொடங்கியது. 90 நிமிடத்தில் முடிய வேண்டிய சிகிச்சை ஆறரை மணி நேரம் நீண்டது. நினைவு திரும்பாமலே அவர் மரணம் அடைந்தார்.
என்ன ஆச்சு?
ஸ்டீபனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது டாவின்சி. யார்? அது ஒரு ரோபோ. நான்கு கரங்களுடன் கூடிய இந்த ரோபோவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவர் செய்வார். பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் மருத்துவ மனைகளில் இந்த ரோபோக்கள் பணியில் உள்ளன. அன்று ரோபோ தவறாகச் செயல்பட்டு அவரது இதயத்தை மாற்றித் தைத்தது. அதன் காமிரா ரத்தத் தெறிப்பால் குருடாக ஆகிவிட்டது. இதனால் அந்த அறுவை சிகிச்சை பிழையாகிவிட்டது.
2015-ல் நடந்த அந்த சிகிச்சைக்குப் பொறுப்பேற்றவர் சுகுமாரன் நாயர் என்ற கேரள அறுவை சிகிச்சை நிபுணர்தான். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அவரது உரிமம் ரத்து செய்யப்படவில்லை. வழக்கு நடக்கிறது. ரோபோக்களைப் பயன்படுத்தி சிகிச்சை செய்யும்போது அவற்றின் ஆபத்துகளை விளக்கவேண்டும் என்று விதிமுறை கொண்டுவர வேண்டும் என இப்போது கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் லண்டனில் உள்ள எல்லா பெரிய மருத்துவனைகளும் ரோபோ அறுவை சிகிச்சை செய்கின்றன.
ஆனால் மனிதர்கள் செய்தால் ஒரு சதவீதமே ஆபத்து உள்ள சிகிச்சையை ரோபோ சொதப்பி விட்டதால் டாவின்சி ரோபோ இப்போது சீந்துவார் இன்றி உள்ளது. இதன் விலை 20 கோடி ரூபாய்கள். பெரும்பாலான மருத்துவர்கள் பழையபடி கைகளால் அறுவைச் சிகிச்சை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
சிட்டி, 2.0வில் திரும்ப ஷங்கரால் கொண்டுவரப்பட்டதுபோல் டாவின்சிக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் . ஆனால் அதற்கு நாள் பிடிக்கும். இப்போது டாவின்சிகளுக்கு தண்டனைக் காலம்!
டாவின்சி ரோபோ அமெரிக்க நிறுவனத் தயாரிப்பு. இதன் மூலம் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். 2015 வரை சுமார் 150 பேர் இதனால் செய்யப்பட்ட சிகிச்சைகளில் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டனர் என்று கணக்கீடு கூறுகிறது. ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை
சிகிச்சையா? நல்லா யோசித்துக்கொள்ளுங்கள் என்பதே மேலை நாடுகளில் உள்ள நிலவரம்.
மனிதனா எந்திரமா - எது சிறந்தது? இந்த கேள்விக்கான பதில் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது.
டிசம்பர், 2018.