இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இரு பிரதான கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகஸ்ட் 17 -ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட உடனடியாகவே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்படிக்கை உருவானது. இந்த உடன்படிக்கையில் இலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது? அதன் இலக்கு என்ன? என்பவற்றை விளக்கும் வகையிலான 10 அம்சக் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் நீண்டகாலப் பிரச்சினையான தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததுதான் தமிழர் தரப்பை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதனையாவது தெரிவிக்கப்போனால், ராஜபக்ஷ அதனைப்பயன்படுத்தி சிங்கள இனவெறியர்களை உசுப்பிடுவாரோ என்ற அச்சம் விக்கிரமசிங்க தரப்பினருக்கு இருந்திருக்கலாம்.
பொருளாதார முன்னேற்றம், சுதந்திரத்தை உறுதிசெய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், மோசடியை ஒழித்தல், கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, வெளிநாட்டு உறவு, பெண்கள்மற்றும் சிறுவர் உரிமை, கலை, கலாசாரத்தை மேம்படுத்தல் அடங்கலான 10 அம்சங்களை உளளடக்கியதாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தவும் இரு கட்சிகளும் இந்த உடன்படிக்கையின் மூலம் இணங்கியுள்ளன.
இரண்டு வருட காலத்துக்கு அமுலாகும் வகையிலான இந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சி மாறுவதற்கு இடமளிக்காதிருக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் இரண்டு வருட கால ஒப்பந்தத்தை இரு தரப்பினரின் ஒப்புதலுடன் நீடிக்கவும் முடியும். இதுதான் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம்.
அபிவிருத்தி, ஊழல் மோசடிகளை ஒழிப்பது போன்ற வழமையான விடயங்கள் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களும் இதற்குக் காரணம். அதிபர் பதவியை இழந்தாலும் கூட, தொடர்ந்தும் பலமான நிலையில் இருக்கிறார் என்பதை தேர்தலின் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தன. குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 4 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. அத்துடன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி.க்களில் 40 க்கும் அதிகமானவர்கள் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். விக்கிரமசிங்கவும், சிறிசேனவும் அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தில் தாம் இணையப்போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படுவார்கள்.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அவர் இருந்தாலும், கட்சியைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராஜபக்ஷவுடன் கடுமையாகப் போராடவேண்டியவராக உள்ளார். விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றுக்கு அவர் சென்றமைக்கு அதுவும் ஒரு காரணம். ராஜபக்ஷவை ஓரங்கட்டுவதும், அவரிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்பதும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கங்களில் பிரதானமானது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் தேசிய அரசாங் கத்தினால் என்ன பலன் என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம்: இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வந்திருப்பது இலங்கையின் வரலாற்றில் முதல்தடவையாக இருப்பதால் முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும். குறிப்பாக இனநெருக்கடிக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் தேசிய அரசிடம் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அது குறித்து உடன்படிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படாதது அதிர்ச்சியான விடயம்தான்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் பிரச்சினைதான் இன்றுள்ள முதன்மைப் பிரச்சினை. முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையும் அதுதான். 30 வருட காலமாக இடம்பெற்ற கொடூரமான போரின் பின்னர் ஆறு வருடகாலம் தீர்வு எதுவும் இல்லாத நிலைதான் காணப்பட்டது. போரில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடமிருந்து அதனை எதிர்பார்க்க முடியாத நிலை இருந்தது. இருந்தபோதிலும் இப்போது பதவிக்கு வந்திருக்கும் இருவரும் சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அக்கறையுடையவர்களாகவே தம்மை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட புதிதாக அமையும் தேசிய அரசாங்கத்தின் மூலமாக இனநெருக்கடிக்குத் தீர்வைக்காணமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படாததிருப்பதன் மர்மத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு முன்னர் இனநெருக்கடிக்குத் தீர்வை முன்வைத்தால் இனவாதிகள் அதனைப் பயன்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுவது வழமை. இப்போது தேர்தல் முடிவடைந்துவிட்டது. இனவாதிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். இனநெருக்கடிக்கான தீர்வை ஒரு கட்சி முன்வைக்கும்போது மற்றைய கட்சி குழப்புவதுதான் இலங்கை அரசியலின் வழமையாக இருந்தது. இன்று அந்த இரண்டு கட்சிகளுமே இணைந்துசெயற்பட முன்வந்துள்ளன. இந்த நிலை இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக்கொண்டுவருவதற்கு மிகவும் பொருத்தமானது என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் வெளிவரப்போகும் ஐ.நா. அறிக்கையும் இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடியது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருப்பது இதனை எதிர்கொள்வதை இலகுவாக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய அரசாங்கம் செயற்படும் என்பதால், மேற்குலகும் இந்தியாவும் இதனை வரவேற்கும் என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறான நிலையில் போர்க்குற்றம் தொடர்பில் இந்தியாவும் மேற்கு நாடுகளும் மென்போக்கைக் கைக்கொள்ள வேண்டியவையாக இருக்கும். இது இலங்கை அரசுக்கு மிகவும் சாதகமானது.
(கட்டுரையாளர் இலங்கையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)
செப்டம்பர், 2015.