சிறப்புக்கட்டுரைகள்

ரயிலடியில் பூத்த காதல்!

அலைபாயுதே

ரஞ்சன்

அலைபாயுதே. 2000த்தில் அபிராமியில் பார்த்தது, 2018ல் அமேசான் ப்ரைமில் பார்க்கும்போதும் அதே இளமை, அதே துடிப்பு, அதே  காதல். 

காலம் கடந்தும் கவனிக்க வைக்கும் காதல் படங்களில் என்ன இருக்க வேண்டும்?  காதல். அள்ள அள்ள குறையாத காதல்.  கல்யாண வீட்டில் கண்டதும் காதலில் துவங்கி ஆஸ்பத்திரி ஐசியுவில் பொண்டாட்டி போய்ட்டா வசனம் பேசி சுபம் அட்டை போடும் வரை காதல் அலை பாய்ந்திருக்கிறது இந்தப் படத்தில்.

ஊரில் நண்பனின் திருமண விழாவில் ஒரு பெண்ணை பார்க்கிறான். மனதில் மின்னல்.

சென்னை மின்சார ரயிலிலும் அதே பெண். அதே மின்னல்.  துரத்தி சென்று காதலைச்

சொல்கிறான். டூயட். பெற்றோர் எதிர்ப்பு...எத்தனை தமிழ்ப் படங்களில் இந்த வகை  காதலைப்  பார்த்திருக்கிறோம். 

ஆனால் மணிரத்னம் இங்கே ஒரு முடிச்சைப் போடுகிறார். காதல் ஜோடி  வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டு மீண்டும் அவரவர் வீடுகளுக்கே சென்று விடுகிறது. பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதன் பிறகான அவர்கள் வாழ்க்கைதான்  மிச்ச சொச்ச கதை. மோதல், ஊடல், தேடல், கூடல் என முடிகிறது.

தெய்வீக காதல் என்று அழுது புரண்டு  நெஞ்சை நக்கும் காதலர்கள் அல்ல மணிரத்தினத்தின் காதலர்கள்.  இவர்கள் வேறு மாதிரி. குறும்புக்காரர்கள். குசும்புக்காரார்கள். டிராபிக்கை நிறுத்தி காதல் சொல்பவர்கள். ஓடும் ரயிலில் காதலைச் சொல்லுவார்கள்.  பகல் நிலவு முரளியிலிருந்து ஒகே கண்மணி துல்கர் வரை ரேவதியிலிருந்து நித்யா மேனன் வரை மணிரத்னத்தின் காதல் படங்களின் நாயக நாயகிகள் குஷியானவர்கள். விளையாட்டுக்காரர்கள். விபரீதம் அறியாதவர்கள். அலைபாயுதேயும் அஃதே.

திரைப்படங்களின் பேபியாக இருந்து இளைஞர்களின் பேபியாக மாறியிருந்த ஷாலினி கதாநாயகி.

காதல் சடுகுடு என்று பந்தை உடலில் உருட்டும்

 ஷாலினி திரைக்கு புதிது.  மீசை வழித்த புன்னகை செழித்த மாதவன் புத்தம் புது நாயகன். அவர்களை இன்னும் அழகாய் காட்ட பி.சி.ஸ்ரீராம். இருவரும் உற்சாகமாய் காதல் செய்ய துள்ளல் இசையுடன் ரஹ்மான்.

'உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் &நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்&உப்பு மூட்டை சுமப்பேன்&உன்னை அள்ளி Gkzx &உள்ளங்கையில் மடித்து&கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்' என்று காதல் வழியும் பாடல் வரிகளின் மூலம் படத்தின் வெற்றிக்கு மீ டூ (Mஞு tணிணி) காரணம் என்று சொல்லும் வைரமுத்து. இப்படி பல திறமைகள் தங்கள் கலை உச்சத்தை இந்தப் படத்தில் தொட இன்றும் அலைபாயுதே பேசப்படுகிறது. 

அலைபாயுதே மணிரத்னத்தின் சிறந்தப் படமா என்று கேட்டால் லேசாய் தயங்க வேண்டியிருக்கிறது. லாஜிக் ஓட்டைகள், தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் காட்சிகள் என்று குறைகளை சுட்டிக் காட்ட முடியும்  ஆனாலும் தமிழின் சிறந்த காதல் படங்கள் பட்டியல்களில் இடம் பிடிக்கிறது. பதினெட்டு வருடங்களுக்குப் பிறகும் இன்றைய இளைஞர்களின் காதல் வசனமாக அலைபாயுதே மாதவனின் ரயிலடி வசனம் இருக்கிறது.

‘சக்தி, நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கன்னு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு‘

யோசிக்கவே வேண்டாம், வருடங்கள் தாண்டினாலும் இந்த வசனத்தை இளைஞர்கள் மறக்காத வரை  அலைபாய்ந்துக் கொண்டுதான் இருக்கும்.

நவம்பர், 2018.