சிறப்புக்கட்டுரைகள்

ரகளையான நாடக அனுபவம்

மதிமலர்

நாகர்கோயில் எக்ஸ்பிரஸும் நாடக கம்பெனியும் என்ற பெயரில் நாடகக்கலைஞர் வினோதினி வைத்யநாதன் இயக்கிய நாடகம் சென்னை அலையன்ஸ் பிராங்காய்ஸ் அரங்கில் நடைபெற்றது. உண்மையில் இவை இரண்டு நாடகங்கள். நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் சமகால நடப்புகளைச் சொல்வது. நாடகசபா பம்மல் சம்பந்த முதலியார் காலத்துக்கதை. சமகால நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னால் புதிய சினிமா பாட்டுகளைப் போட்டதாகட்டும்; இரண்டாவது நாடகம் ஆரம்பிக்கும் இடைவேளையில் பாகவதர் காலத்து சினிமா பாடல்களை ஒலிபரப்பியதாகட்டும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்கள். நாடகங்களும் அதுபோல் சோடைபோகவில்லை.

நொடிக்கு நொடிக்கு வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் வசனங்கள்.

நாகர்கோயில் எக்ஸ்பிரசில் கிடக்கும் ஒரு பிணத்தை சாத்தூர் சந்திப்பில் கொண்டுபோய் இறக்கினால் பணம் கிடைக்கும். அதை இரண்டு பயணிகள் செய்ய முயற்சிக் கிறார்கள். இதுதான் முதல் நாடகக் கதைச் சுருக்கம். மது அருந்தும் பயணிகள் இருவராக வந்தவர்களும் டிக்கெட் பரிசோதகரும், இஸ்லாமிய மனைவியாக வந்த வினோதினியும் அவரது சப் - இன்ஸ்பெக்டர் கணவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்றால் பிணமாக நடித்த அந்த நடிகர் பின்னி எடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். சின்னச் சின்னதாக ஊசிகுத்துவதுபோல் உருவாக்கப்பட்ட (தாடி வெச்சவன்லாம் மோடியா, கேடியா என்கிற வசனம் ஒரு உதாரணம்) வசனங்களை இயல்பாக பேசி கைத்தட்டல்கள் வாங்கிக்கொண்டே போனார்கள்.

இரண்டாவதாக நடந்த நாடகம் ஒரு நாடக சபா பற்றியது. ஒரு விமர்சகர் ஒத்திகை பார்க்கவருகிறார். நடிகர்கள் யாரும் இல்லை என்பதால் வாத்தியார் படுதா தொங்கவிடுகிறவர், டீக்கடைக்காரர், லைட் போடுகிறவர், இன்ன பிற ஆட்களை திடீரென தயார் செய்து நடிக்கவைக்கிறார். இயக்குநர் நவீன நாடக வடிவில்  தெருக்கூத்தின் கூறுகளைக் கொண்டுவந்ததன் மூலம் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறார். மோகனாங்கி என்கிற நாடகத்தை இவர்கள் நடிக்க முயல்கிறார்கள்.

காயாத கானகத்தே... என்ற பாடலைப் பாடுகிற அந்த நடிகர்  அலெக்சாண்டர் பாபு அசத்திவிட்டார் அவரது குரலும் மிக இனிமை. கட்டியங்காரரின்(சாந்தகுமார்) பாடலும் ஆட்டமும் அட்டகாசம். இப்படி ரசித்துக்கொண்டிருந்தபோது இந்திரனாக வந்த டீக்கடைக்காரர் மன்னரின் தவத்தைக் கலைக்க அபஸ்வர ஸ்திரீகளைக்(அப்சரஸ்கள் தான்!) கூப்பிடுகிறார்.  முந்தைய காட்சியில் தோன்றிய இரண்டு ஆண் பாத்திரங்களும்(விகாஸ், வத்சன்)  கவர்ச்சிகரமான ( கொஞ்சம் தூக்கல்தான்!) பெண் வேடங்களில் தோன்றி அடித்த லூட்டியில் பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். இசையும் பாடல்களுமாக ஒரு நொடி கூட வீணாகாத ஒத்திசைவு. பார்வையாளர்கள் மத்தியில் இருந்து நாடகப் பாத்திரங்கள் மேடைக்குச் செல்வது, பார்வையாளர்களையும் நாடகப்பாத்திரங்களாக்கும் உத்திகள் போன்றவற்றால் இது நகைச்சுவைகள் அடங்கிய உதிரித் தோரணமாக இல்லாமல் வேறு தளத்தில் அமைந்திருந்ததைக் குறிப்பிடவேண்டும். நாடகம் முடியும்போது சீனிவாச ரங்கன், பரத்வாஜ கோத்திரம் என்று விமர்சகர் தன்னைப் பற்றி அப்பாவியாக அறிமுகப்படுத்த, பார்வையாளர்கள் கொல்லென்று சிரிக்கிறார்கள். விவரமான பார்வையாளர்கள்தான்! ஆக்கூர் ஏழுமலையின் கூத்துப்பாடல்களும் நடன வடிவமைப்பும், ராமகிருஷ்ணன் வடிவமைத்த இசையும் பாராட்டுக்குரியவை.

ஜூன், 2016.