சிறப்புக்கட்டுரைகள்

யோசித்து செய்யுங்க: பணம் பையை நிரப்பும்!

விவசாயத்தில் வெற்றி : வெங்கடபதி ரெட்டியார்

பி. என். எஸ். பாண்டியன்

நடிகர் நடிகைகள், அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, விவசாயிக்கும் பத்மஸ்ரீ விருது கிடைக்கும் என்று சாதித்தவர்,புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி ரெட்டியார். 73 வயதாகும் இவர், 4ஆம் வகுப்பு கூட தாண்டாதவர்.

2012 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. இவர் உருவாக்கிய புதிய வகை கனகாம்பரம், சவுக்கு போன்றவற்றிற்காக அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை அளித்துள்ளன. தற்போது இவர், புதிய வகை கொய்யாவை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

‘விவசாயத்தை விஞ்ஞான கோணத்தில் செய்தால் எப்பவுமே லாபம் தான். போர்ச்சுகலில் இருந்து கொய்யா நம்ம ஊருக்கு வந்தது. அந்த கொய்யாவை பசிக்குதான் சாப்பிடலாம். 200 கிலோ மீட்டர் தூரம் அந்த கொய்யாவை எடுத்து செல்ல முடியாது. ஆனால், நாட்டு கொய்யா எனப்படும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கொய்யாவில் 'லைகோபின்' எனும் உயிர்காக்கும் மருந்து உள்ளது. இந்த கொய்யா ரக திசுக்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட ரகங்களை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதன்மூலம் புதிய தொழில் நுணுக்கத்துடன் உருவாகியுள்ள இந்த கொய்யா ரகங்களை ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டால் முதல் ஆண்டில் 10 டன் மகசூலும், இரண்டாம் ஆண்டு 15 டன்னும், மூன்றாம் ஆண்டில் 25 முதல் 30 டன் மகசூலும் கிடைக்கும். இந்த வகை கொய்யாக்கள் மனிதனுக்குப் பயனளிக்கக் கூடியவை. பல்வேறு நோய்களை குணமாக்கக்கூடியவை. இந்த கொய்யா வகைகள்  சந்தையில் கிலோ ஒன்றிற்கு ரூ.120 என விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயத்தை விஞ்ஞான ரீதியாகச் செய்தால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் தானே!'' என்கிற இவர் ஆண்டு வருமானம் நிஜமாகவே கோடிகளில் இருக்கிறது. அவர் உருவாக்கி இருக்கும் புதிய ரகப் பயிரினங்களின் நாற்று விற்பனையே இவரது பெரும் வருமானம்.

‘மண்ணைக் காப்பதற்காக இயற்கை விவசாயத்தைச் செய்வது நல்லது'' என்கிற ரெட்டியார், ‘கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து செடிக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளரும் என்பதை அனைவருக்கும் சொல்லி வருகிறேன். எந்த எண்ணெய் இருக்கிறதோ அந்த எண்ணெயை தண்ணீருடன் கலந்து செடிகள் நன்கு நனையும்படி தெளித்தாலும் அதிக மகசூல் பெறலாம். சாமந்தி, ரோஜா, பட்டன் ரோஸ், கத்தரி, மிளகாய், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை வேதி உரங்கள் இல்லாமல்  இயற்கை முறையில் விளைவிக்கலாம். இதன்மூலம் உரச்செலவு மிச்சம். மண் வீணாகாது. பொதுமக்களுக்கு இயற்கையான பொருட்களைத் தரலாம். நல்ல மகசூல் கிடைக்கும். லாபத்தைத் தந்து கொண்டே இருக்கும்,'' என்று பெருமிதம் பொங்க சொல்கிறார்.

‘இன்றைக்கு நீர்வளம் குறைந்துவிட்டது. எனவே தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான் ஒரே வழி. அதற்கு குறைவான தண்ணீரில் விளையும் பணப்பயிர்களைப் பயிரிட வேண்டும். நம் நாட்டில் விவசாய நிலம் குறைந்து விட்டது. யோசித்து விவசாயம் செய்தால் மகசூல் பெருகும். பணம் விவசாயிகளின் பையை நிரப்பும்'' என்கிறார், இவர்.

மார்ச், 2019.