ஓவியம் மீரா
சிறப்புக்கட்டுரைகள்

யாருண்ணே கஜினி முகமது?

காந்தி கண்ணதாசன்

எஸ்.விக்கும் என் தந்தையார் கண்ணதாசனுக்கும் இருந்த நட்பு மிக ஆழமானது. இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பும், புரிதலும் அசாத்தியமானது. இதற்குக் காரணம் இவர்கள் இருவருக்கும் இருந்த பல ஒற்றுமைகள்:

இருவருமே பள்ளிப்படிப்பை முழுவதும் முடிக்கமுடியாதவர்கள். வறுமையையும் பசியையும் அறிந்தவர்கள். இருவரும் தாயை மிகவும் நேசித்தவர்கள். எங்கள் தந்தைக்கு அப்பத்தா இருக்கும்வரை அவர்தான் எல்லாமே. அவர் மரணத்துக்குப் பின்னர் புகைப்படத்தில் அவரிடம் ஆத்மார்த்தமாகப் பேசிக் கொண்டிருப்பார். எம்.எஸ்.வியின் தாயார் 1990-ல் இறந்தார். அதற்கு முன்பு வரை தினமும் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டுதான் காலையில் எம்எஸ்வி வெளியே புறப்படுவார். இருவருக்கும் தொழிலில் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆழ்ந்த ஆர்வம் இருந்தது. என் தந்தை படித்துக்கொண்டே இருந்தார். எம்.எஸ்.வி. இசையை கேட்டு கேட்டு கற்றுக்கொண்டார். ஒன்று வாசிப்பு ஞானம்! இன்னொன்று கேள்விஞானம்!

சினிமாவில் இருப்பதால் வரும் வீக்னஸ் இருவருக்கும் உண்டு! ஆனால் பாட்டு           ரீ ரிக்கார்டிங் போன்றவற்றின் போது இருவரும் மது அருந்தவே மாட்டார்கள்! தொழிலை அவ்வளவு மதித்தார்கள்! இவர்கள் இருவருமே தமிழ்நாட்டில் பிறந்துவிட்டார்கள். வட இந்தியாவில் பிறந்திருந்தால் இருவருக்கும் டாக்டர் பட்டங்களும் பத்மஸ்ரீ பட்டங்களும் கிடைத்திருக்கும். சர்வதேச விருதுகள் கூட இருவர் மேதைமைக்கு கிடைத்திருக்கலாம்!

திரை இசையில் எம்.ஜி.ஆர், கண்ணதாசன், எம்.எஸ்.வி ஒரு முக்கோணம் என்றால் சிவாஜி, கண்ணதாசன், எம்.எஸ்.வி இன்னொரு முக்கோணம்! வாழ்க்கையில் சோர்ந்திருக்கும்போது உங்களுக்கு ஆறுதல் கூறும் பாடல்கள் சிவாஜி முக்கோணம்! அந்த சோகத்திலிருந்து எப்படி ஜெயிக்கலாம் என்று வழிகாட்டும் பாடல்கள் எம்ஜிஆர் முக்கோணம்!

எம்ஜிஆர்,கண்ணதாசன், எம்.எஸ்.வி இடையே மிகப்பெரிய புரிதல். இருந்தது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! ஆனால் இவர்கள் கல்லாதவர்கள்!

எம்.எஸ்.வி இசையில்தான் எம்ஜிஆருக்கு

பாடுவது கவியா?

பாரிவள்ளல் மகனா?

சேரனுக்கு உறவா?

செந்தமிழர் நிலவா?

தேக்குமரம் உடலைத் தந்தது,

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது.. என்றெல்லாம் கண்ணதாசன் எழுதினார்.

எம்எஸ்வி. அப்பாவி. அவருக்கு எல்லாம் கேள்விஞானம் தான். ஒருமுறை எம்எஸ்வியும் என் தந்தையும் ரஷ்யாவுக்குச் செல்லும் வழியில் காபூலில் தங்கினார்கள். ‘டேய், இது வழியாகத்தான் கஜினிமுகமது இந்தியாவுக்குள் படை எடுத்து வந்திருக்கிறான்’ என்று அப்பா சொல்லியிருக்கிறார். எம்.எஸ்.வி. மெல்ல, ‘அண்ணே யாருன்னே கஜினி முகமது?’ என்று கேட்டிருக்கிறார். ரஷ்யாவுக்குப் பக்கத்தில் என்ன நாடு இருக்கிறது என்று எம்.எஸ்.வி கேட்க, அமெரிக்கா இருக்கிறது, நடந்தே போய்விடலாம் என்று என் தந்தையார் சொல்ல, அதை நம்பிய அவர், ‘அப்படியானால் அங்கேயும் போயிட்டு வந்துடலாமே?’ என்று அப்பாவியாகச் சொல்லியிருக்கிறார்.

‘போனால் போகட்டும்போடா!’ ட்யூனுக்கு எழுதிய பாட்டு.  போடா என்று சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்கிறதே என்று எம்.எஸ்.வி சொல்ல,‘உணர்ச்சியின் உச்சத்தில் டா தான் வரும். நீ விஜயவாடாவைக் கூட விஜயவாங்க என்று தானே சொல்வாய்’ என்று என் தந்தையார் சொன்னது இன்று தமிழ் சினிமாவின் சொல்லாடல்களில் முக்கியமான சம்பவமாக நிற்கிறது.

எம்.எஸ்.வி அவர்களை ஒன்றரை மாதம் முன்பு சந்தித்தேன். நெற்றி நிறைய விபூதி, பட்டுவேஷ்டியில் மங்கலகரமான தோற்றம். எப்போதும்போல காலில் விழுந்து வணங்கினேன்.  நான் மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்க்கவில்லை. காரணம் எனக்குள் இருக்கும் எம்.எஸ்.வியின் பிம்பத்தை நான் இழக்கவிரும்பவில்லை! அந்த பிம்பம் என்றென்றைக்கும் இருக்கவேண்டியது!

(நமது நிருபரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2015.