சிறப்புக்கட்டுரைகள்

மோடியின் பிடிக்குள் இலங்கை ?

ஆர். பாரதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13, 14 ஆம் திகதிகளில் மேற்கொண்ட இலங்கை விஜயம் ஈழத் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கைப் பாராளுமன்றத்திலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கொடுத்த வரவேற்பின் போதும் அவர் நிகழ்த்திய உரைகள் பெரிதும் கவனத்தைப் பெற்றிருந்தன. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுலாக்குவதும், அதற்கு அப்பால் செல்லும் செயற்பாடும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் என பிரதமர்  மோடி தெரிவித்திருந்தார். அதனைவிட அதிகளவு அதிகாரப்பரவலாக்கல் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமராக வருவதற்கு முன்னர் குஜராத்தின் முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்துள்ள அனுபவத்தைக்கொண்டு இந்தக்கருத்தை அவர் முன்வைத்திருந்தமை கவனிக்கத்தக்கது.

13 ஆது திருத்தத்தில் ஒன்றும் இல்லை. அதற்கு அப்பால் சென்று சிந்திக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடியும் அதே கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, இந்தியாவை நம்புங்கள். நாங்கள் உங்களுடன் இருப்போம் என மோடி தெரிவித்திருக்கின்றார். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்திருக்கலாம். மறுபுறத்தில் கூட்டமைப்பினரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும். இவ்வாறு இணைக்கப்படும் பிரதேசத்துக்கு முழு அளவிலான சுயாட்சி என்பதுதான் தமது நிலைப்பாடு என்பதை கூட்டமைப்பினர் மீண்டும் மோடியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

’13 பிளஸ்’ அவதாவது 13 ஆவது திருத்தத்தில் உள்ளவற்றுக்கு மேலாக அதிகாரங்களை வழங்குவது  என்பது கடந்த சுமார் பத்து வருடகாலமாக உச்சரிக்கப்படுகின்ற சொல்லாக மட்டுமே இருந்திருக்கின்றது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இதனை அடிக்கடி சொல்லிவந்திருக்கின்றார். போரில் வெற்றிபெற்றால் 13 அல்ல அதற்கு மேலாகச் செல்வதற்கும் தயார் என இந்தியத் தலைவர்களுக்கு மகிந்த ராஜபக்‌ஷ வாக்குறுதியளித்திருந்தார். அதுவும் ஒருவகையில் தேர்தல் வாக்குறுதி போலத்தான் இருந்துள்ளது. போரில் வெற்றிபெற்றதும் 13 ‘மைனஸை’ நோக்கியே மகிந்த ராஜபக்‌ஷ செல்லத் தொடங்கினார். 13 பிளஸ் எனச் சொன்ன அவர் 13 இல் உள்ளதைக்கூட கொடுப்பதற்குத் தயாராகவிருக்கவில்லை என்பதுதான் உண்மை. 13 என்று சொல்லும் போது மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை அதற்குள் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராகவிருக்கவில்லை.

இந்த நிலையில்தான் 13க்குள் எதுவும் இல்லை என்பதையும், அதிகாரப் பரவலாக்கல் குறித்து அதற்குப் புறம்பாகச்  சிந்திக்க வேண்டும் எனவும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். வடமாகாண சபை உருவாக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. ஆளுநரை மாற்றுவது, பிரதம செயலாளருடன் முரண்டுபிடிப்பது என்பவற்றுடனேயே இந்தக் காலம் போய்விட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்துடன், சுமூகமாகச் செயற்படும் ஒரு நிலைக்கு வடமாகாண சபை வந்திருக்கின்றது. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் 13க்குள் எதுவும் இல்லை என்பதையிட்டு வெளிப்படையாகவே பேசுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது துணிந்திருக்கின்றார். மோடியின் கருத்துக்களும் அதனை ஒத்ததாகவே இருப்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போதைய புதிய அரசாங்கம் கொள்கையளவில் பலவற்றை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் இந்தியப் பிரதமர் நடத்திய பேச்சுக்களின்போதும் மாகாண சபைக்கான காணி மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களில் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தி யிருக்கின்றார். நடைமுறையில் புதிய அரசாங்கம் சில நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. முக்கியமாக, மற்றொரு தேர்தல் எதிர்கொள்ளப்படுகின்றது. ஏப்ரலில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜூனில் பொதுத் தேர்தலை நடத்துவது என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. இப்போது தமிழர்களுக்கு சாதகமாகச் செய்யப்போய், மகிந்த ராஜபக்‌ஷ போன்ற எதிராளிகளுக்கு வாய்ப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துவிடக்கூடாது என மைத்திரிபால அரசாங்கம் கருதுவதாகத் தெரிகின்றது. அதனால்தான் பொறுமையாக இருங்கள் என இந்தியப் பிரதமர் கூட்டமைப்பிடம் சொல்லியிருக்கின்றார் எனக் கருதலாம்.

மோடி விஜயத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிப்பது. ஏற்கெனவே  ராஜபக்‌ஷ முன்னெடுத்த இரண்டு விடயங்கள் இந்தியாவுக்கு சீற்றத்தைக் கொடுத்திருந்தன. ஒன்று - சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்புத்  துறைமுகத்தில் தரித்துச் செல்ல அனுமதி வழங்கியது. இரண்டு - கொழும்பில் பெருமளவு செலவில் துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது. இந்த இரண்டும் தமது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் என டில்லி அஞ்சியது. தன்னைத் தோற்கடிக்க ’றோ’ முன்னின்று செயற்பட்டது என ராஜபக்‌ஷவே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தமையும் கவனிக்கத்தக்கது. 

இப்போது சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனிமேல் இடமில்லை என மைத்திரிபால அரசாங்கம் உறுதியாகக் கூறிவிட்டது. சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட துறைமுக நகரத் திட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்வதா இல்லையா என்பதையிட்டுத் தீர்மானிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் மோடியின் வருகையின்போது ஏற்பட்ட அதிரடித் திருப்பங்கள்.

ராஜபக்‌ஷவின் காலத்தில் இலங்கையில் சீனா வகித்த பங்கை இப்போது தனது கைகளில் எடுத்துக்கொள்ள இந்தியா முற்பட்டிருக்கின்றது!

     (கட்டுரையாளர்  இலங்கையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)

ஏப்ரல், 2015.