ஓவியம் ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

மேடை தந்த ஆசிரியர்

ப.திருமாவேலன்

எனக்குத் தெரிந்த முதல் பேராசிரியர், அ.சங்கரவள்ளிநாயகம் தான். அப்புறம் தான் ‘பெரிய பேராசிரியர்' க.அன்பழகன்!

கோவில்பட்டியில் பேராசிரியர் அ.சங்கர வள்ளிநாயகம், கவிஞர் ஆ.முத்துராமலிங்கம், புலவர் மு.படிக்கராமு( எனது தந்தையார்) ஆகிய மூவரும் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோராக வலம்வந்தார்கள். அந்தக் காலத்தில் யாரோ அப்படிச் சொன்னதாக பேராசிரியர் தான் ஒரு கூட்டத்தில் சொன்னார்கள். வ.உ.சி,பாரதி,சிவா காலம் இந்திய விடுதலைக் காலம், என்றால் இவர்கள் மூவரும் வலம் வந்தது தமிழ் மறுமலர்ச்சிக்காலமாக கோவில்பட்டிக்கு இருந்தது. விசுவகர்மா பள்ளித் திடலில் இவர்கள் 'திருவள்ளுவர் மன்றம்' வளர்த்தார்கள். வ.உ.சி. வாழ்ந்த வீடும் அங்குதான் இருந்தது. வள்ளுவம் வளர்த்ததால் அதுவே 'வள்ளுவர் திடல்' ஆகிவிட்டது. அருகில் உள்ளது, காந்தி மைதானம். அதில் பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. இதில் பேசாத இலக்கியவாதிகளே இல்லை. 1971 முதல் வள்ளுவர் அங்கும் வந்து வாழத் தொடங்கினார்!

பேராசிரியர் முதலில் இராசபாளையம் சேவுகப்பாண்டியர் பள்ளியில் பணியாற்றினார்கள். அப்போதுதான், தையலர் பாலு மாமா மூலமாக  என் தந்தையாருக்கும் அவருக்கும் நட்பு உருவானது. அங்கே முதலில் திருவள்ளுவர் மன்றம் தொடங்கினார்கள். ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அங்கு தொய்வின்றி தொடர்ந்து வருகிறது. உணர்ச்சிப்பாவலர் ம.முத்தரசு, தனது மூச்சாகக் கொண்டு அதனை இயக்கி வருகிறார். கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரிக்கு தமிழ்ப்பேராசிரியராக சங்கரவள்ளிநாயகம் வந்தபிறகு எனது தந்தையாரையும் கோவில்பட்டிக்கு வரவழைத்துக் கொண்டார். அங்கும் திருவள்ளுவர் மன்றம் தொடங்கினார்கள். இங்கும், இப்போதும் பேராசிரியக் கவிஞர் கருத்தப்பாண்டியன், ச.திருமலைமுத்துசாமி(பேராசிரியரின் மகன்), ஆசிரியக் கவிஞர் நம்.சீனிவாசன் உள்ளிட்ட நண்பர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இராசபாளையத்திலும் கோவில்பட்டியிலும் நின்று நிலைக்கக் காரணம் பேராசிரியர் போட்ட வீரிய விதையே!

தவத்திரு.குன்றக்குடி அடிகளார், பெரும்புலவர் பா.நமசிவாயம், சாலமன் பாப்பையா, தமிழ்க்குடிமகன், சோ.சத்தியசீலன், இரா.செல்வகணபதி, அ.வ.இராசகோபாலன், அறிவொளி, இளம்பிறை மணிமாறன், விசயலக்குமி நவநீதகிருட்டிணன், சுகிசிவம்... இத்தகைய பெரும்பேச்சாளர்களை எல்லாம் இளம்வயதில் பார்க்கவும் கேட்கவுமான வாய்ப்பை வழங்கிய அறிவுப் பல்கலைக் கழகம் தான் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம்.

பொதுவாக அறிஞர்கள், பேச்சாளர்கள் அமைப்புகள் நடத்தினால் அது அவ்வளவாக வளராது. நீடிக்காது. அவர்களுக்கு 'மற்றவர்களை' அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பாலும் இருக்காது.இன்னும் சொன்னால் அமைப்பின் நிர்வாகம் என்பது வேறு, சுவைபடவும் உணர்ச்சிமயமாகவும் பேசுவது என்பது வேறு. அது ஒரு சிலருக்குத் தான் வாய்க்கும். அத்தகைய தனித்திறமை கொண்டவர்களாக பேராசிரியரும் எனது தந்தையாரும் இருந்தார்கள்.

 பேராசிரியர் மணிக்கணக்கில் பேசுவார். ஆய்வுகள் செய்தார். கல்லூரிப் பணி செய்தார்.  எழுதிக் கொண்டும் இருந்தார். அமைப்பும் நடத்தினார். திறமையானவர்களைக் கொண்டாடினார். திறமைசாலிகள் அனைவரையும் அழைத்து வந்தார். புதியவர்களைத் தூக்கிவிட்டார். பழையவர்களைப் போற்றினார். சரியான சங்கப்பலகையாக இருந்தார் சங்கரவள்ளிநாயகம்!

மதுரையில் இருந்து ஒரு பேச்சாளர், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற விழாவுக்கு வருகிறார். குறிப்பிட்ட பேருந்து நிறைந்துவிட்டது. அடுத்த பேருந்து இரண்டு மணிநேரம் கழித்துத் தான் புறப்படும். முழுமை அடைந்து விட்ட அந்த பேருந்துவின் ஓட்டுநர், அந்த பேச்சாளரிடம் ஐந்து ரூபாய்( 1980க்கு முன்னால் நடந்தது இது!) கூடுதலாக வாங்கிக் கொண்டு உள்ளே இருக்கச் சொல்லிவிட்டார். அது நடத்துனருக்குத் தெரியவந்தது. தன்னுடைய அவசரத்தை அந்த  பேச்சாளர் சொன்னார். 'கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தில் நான் இன்று பேசுகிறேன். அதனால் 6 மணிக்கு அங்கே இருந்தாக வேண்டும்' என்று சொல்கிறார். அப்போது அந்த நடத்துனர், 'பேராசிரியர் சங்கரவள்ளி நாயகம் நடத்தும் அமைப்பு அது. உங்களிடம் போய் டிரைவர் பைசா வாங்கிவிட்டாரே' என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுள்ளார்! இதுதான் பேராசிரியர் சேர்த்த சொத்து!

எங்கள் குடும்பத்தோடு இருந்தது குடும்ப நட்பு. நட்பு என்று கூடச் சொல்லக்கூடாது. ஒரே குடும்பம்தான். எனது தந்தையாருக்கு வேலை கிடைத்த தகவலை எங்களது வாழவந்தாள்புரம் கிராமத்துக்கு நள்ளிரவில் நடந்து வந்து பேராசிரியர் சொன்னதாக அப்பா சொல்வார்கள். அப்போது பெரிய வேலிக்கருவேலம்முள், பேராசிரியரின் காலில் இறங்கிவிட்டது. அவரது காலை தனது மடிமீது வைத்து எனது பாட்டி சீனியம்மாள் மருந்திட்டாராம். பேராசிரியருக்கு உடல்நலிவு ஏற்பட்டபோது  மூன்று நாளைக்கு ஒருமுறை எங்களது கிராமத்தில் இருந்து இளநீர் குலைகள் வந்து இறங்கியது. இவை எல்லாம் ஒரே குடும்பமே என்பதற்கான உதா ரணங்கள்! வள்ளுவரின் குறளில் அறிவு, அறத்தை விட அன்புக்கு மிக அதிகமாகவே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாக நடந்து கொண்டவர் பேராசிரியர். மிகச்சரியான உண்மையான அன்பே, அனைத்து அறத்துக்கும் அடித்தளமாக அமைந்து விடும் என்று நினைப்பார்.

திருவள்ளுவர் மன்றத்தை வழிநடத்தியது அன்பா, அறிவா, அறமா என்று பட்டிமன்றம் வைத்தால் அன்பே வெல்லும். அதுவே பேராசிரியரின் வாழ்க்கை நெறியாக இருந்தது. அதற்கு அடித்தளமாக அமைந்தது, அவரது மனையறமாம் மனைவி வீரலக்குமி அம்மையார். பேராசிரியர் இன்று இல்லை. அவரது உருத் தாங்கிய அர்த்தநாரியாய் அம்மையார் வாழ்கிறார். முன்பு எனது ‘ஆனந்தவிகடன்' கட்டுரைகளைப் பார்த்துவிட்டு தொலைபேசி பேசுவார். 'தைரியமா எழுது திருமா! அத்தை இருக்கேன்' என்பார். 'இதை எல்லாம் பார்க்க மாமா இல்லையே! நம்ம திருமாவா இதுன்னு சந்தோஷப்படுவாங்க' என்பார். ‘அவர்களிடம் கற்றுக் கொண்டதுதான்' என்று நான் சொல்வேன். பள்ளிக் காலத்தில் எனது இதழியல் ஆர்வத்துக்கு அடித்தளமாக இருந்தது பேராசிரியரின் வீடு.

எங்கள் வீட்டில் ‘தினமணி' மட்டும் தான் அப்பா வாங்குவார்கள். பேராசிரியர் வீட்டில் ‘தினகரன்'.  அதேபோல் விகடன், கல்கி, கலைமகள், சாவி, இதயம்பேசுகிறது ஆகிய இதழ்கள் அங்கு தான் இருக்கும். தினமும் மாலையில் அங்கு சென்று படிப்பேன். இதழியல் சுவை அறிந்தது அங்கு தான். அதுவரை பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்த என்னை நாமக்கல் கவிஞர் நூற்றாண்டு விழாக் கவியரங்கத்தை தொடக்கி வைத்துக் கவிதை பாடு என்று பதினொன்றாம் வகுப்பில் கட்டளையிட்டு மேடை ஏற்றியவர் பேராசிரியர். கவியரங்கத் தலைமை உணர்ச்சிப் பாவலர் ம.முத்தரசு. கவிதை பாட வந்தவர்கள் கல்லூரி மாணவர்கள். ஆனால் தொடக்கி வைத்தது பள்ளிமாணவனான நான். இதில் என்னுடைய துணிச்சல் எதுவுமில்லை. என்னை ஏற்றிவிட்டது பேராசிரியரின் துணிச்சல். எனது தந்தையாரும் பேராசிரியரும்  அழைப்பிதழ் தயாரித்துக் கொண்டு இருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன் நான். அந்த மேடையில் அறிமுகம் ஆனவர் தான் இன்று இந்த ‘அந்திமழை'யை நடத்திக் கொண்டிருக்கும் அன்புநண்பர் இளங்கோவன். அவரோடு நெல்லையில் இருந்து வந்தவர் தான் இன்று இயக்குநராக இருக்கும் கவிஞர் தாமிரா!

மேடையில் பேசும் போது மட்டுமல்ல, பேராசிரியரின் தனிப்பட்ட உரையாடல்களும் தனித்தமிழ் உரைநடையாகத் தான் இருக்கும். மனப்பாடம் செய்து கொண்டு பேசுவது போல இருக்கும். நண்பர் ஒருவரை அறிமுகம் செய்யும் போது, ‘இவர் கிறித்துவ நெறியாளர்' என்பார். ‘நேற்று இரவு படக்காட்சிக்குச் சென்றோம்' என்பார். மறந்தும் அவருக்கு அயன்மொழிச் சொல் வராது. ஆனால், ஆங்கிலத்தில் பேச வேண்டுமானால் மணிக்கணக்கில் பேசுவார். தனி ஆங்கிலத்தில். கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர்களே அவரது வேகத்துக்கு கொஞ்சம் திணறுவார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவரான நூலகவியல் மேதை அ.திருமலைமுத்துசாமி, பேராசிரியரின் அண்ணன்!

சைவமா, தமிழ் இலக்கியமா, ஆங்கில இலக்கியமா, வரலாறா, பொருளாதாரமா, இலக்கணமா, தமிழக அரசியலா, திராவிடமா,வ.உ.சி.யா, காந்தியா, கலைஞரா எதுவும் பேசுவார். திருவள்ளுவர் மன்றத்தில் மாதக்கூட்டங்கள் தான் கோவில்பட்டியின் திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள். மே மாதம் மட்டும் விடுமுறை. சனவரி மாதம் ஆண்டு விழா. மற்ற பத்து மாதமும் கலந்து கொண்டால் உருவாகும் அறிவுக்கருவுக்கு அளவு கிடையாது. மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று சொற்பொழிவு நடக்கும். தமிழ்நாடே அங்கு வந்து பேசி இருக்கிறது. வரவேற்புரை எனது தந்தையார் என்றால் நன்றியுரை பேராசிரியர் ஆற்றுவார். ஏதோ ஒரு கூட்டத்தில் நன்றியுரை மட்டும் ஒன்றரை மணி நேரம் பேசினார். 9 மணிக்கு தொடங்கிய கூட்டம், மதியம் இரண்டரை மணி வரை கலையாமல் இருந்தது. அத்தகைய குரல்வளமும், அறிவுச் செறிவும் கொண்டதாக பேராசிரியர் பேச்சு இருக்கும். சிவாஜி வசனத்தின் ஏற்ற இறக்கமும் எம்.ஆர்.ராதா பாணியிலான மிமிக்ரி தன்மையும் வாரியாரின் நகைச்சுவையும், புலவர் கீரனின் வேகமும் இருக்கும் அவரது பேச்சில். எதைப் பேசினாலும் மொழியுணர்வும், இனமானமும் தன்மானமும் அடிநாதமாய் ஒலிக்கும்.

பேராசிரியர் பழுத்த ஆத்திகர். குளித்ததும் மணிக்கணக்கில் பூசை அறையில் நின்று பாடல்கள் ஒப்புவித்துவிட்டுத்தான் புறப்படுவார்கள். பூசை நேரத்தில் அங்கே போய்விட்டால் அவர்களோடு சேர்ந்து நாமும் நிற்க வேண்டும். விபூதி பூசி எல்லோருக்கும் வாழைப் பழம் கொடுப்பார்கள். பத்தி குத்திய பழம் சாப்பிடச் சுவையாக இருக்கும்! அவரது ஆத்திகம், இனவுணர்வுக்குத் தடையாகவும் இருந்ததில்லை. அவரது இனவுணர்வு, பக்தியைத் தள்ளி வைக்கவும் இல்லை.

பேராசிரியர் படித்த படிப்புக்கும் சிந்தித்த சிந்தனைக்கும் தர்க்க மூளைக்கும் நிறைய எழுதி இருக்க வேண்டும். எழுதவில்லை. மிகக் குறைவாக அதுவும் இறுதிக்காலத்தில் எழுதினார்கள். ‘‘மீன் போலக் கடலினையெல்லாம் மறித்து வைத்து ஆண்டாலும் மீனாகலாமே தவிர மனிதனாகிவிட முடியாது. பறவையைப் போல் வானமெல்லாம் கட்டி வைத்து ஆண்டாலும் பறவையாகலாமே தவிர மனிதனாகிவிட முடியாது. எந்திரங்கள் எல்லாம் புதிது புதிதாகப் படைத்து ஓட்டினாலும் எந்திரமாகலாமே தவிர மனிதனாக முடியாது. வயிறே வாயாகி உண்டு களித்தாலும் கவந்தனாகலாம். உண்பதும் உறங்குவதுமே இன்பம் என்றால் கும்பகர்ணன் ஆகலாம். இயற்கையை வெல்லும் மாயம் வந்தாலும் இந்திரசித்தாகலாமே அன்றி மனிதனாக முடியாது,'' என்று எழுதி இருப்பார் ஒரு கட்டுரையில்.

கடலை மறிக்கும் குணமுமில்லை. வானம் கட்டும் மனமுமில்லை. எந்திரனாகும் எண்ணமுமில்லை. கவந்தனாகும் கவலையுமில்லை. கும்பகர்ணனாய் வாழும் விருப்பமுமில்லை. இந்திரஜித்தனாய் ஆளும் ஆசையுமில்லை. அதனால் தான் பேராசிரியர் சங்கரவள்ளிநாயகம், மனிதனாய் வாழ்ந்தார்!

ஜூன், 2020.