திருமணமான இளைஞர்களிடம் தென்படும் துள்ளலும் உற்சாகமும் அதிகபட்சம் நான்கு மாதங்கள் நீடிப்பதே பெரிய விஷயமாக உள்ளது.
திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன பெரும்பாலான ஆண்கள் விரக்தி மனப்பான்மையிலும், எதையோ பறிகொடுத் தது போலவும், கடுமையான ஸ்ட்ரெஸ்ஸுடன் இருக்கிறார்கள். கணவர்களுக்கு உண்டாகும் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபடுவது எப்படி என்று பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
திருமணம் தான் வாழ்வின் சேருமிடம் என்றோ, அதுதான் வாழ்வின் முடிவு என்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் ஆண்கள் தங்கள் சோஷியல் வாழ்வை குறுக்கிக்கொள்ளக்கூடாது.
நண்பர்களுடன் நேரம் செலவிடுவது ஆகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர். திருமணம் ஆனதும் கிழவன் ஆகிப்போன எண்ணத்துடன் நண்பர்களின் ஜமாவை புறக்கணிக்க ஆரம்பிக்கின்றனர் ஆண்கள். அப்படிச் செய்யாமல் அடிக்கடி கால நேரக் கட்டுப்பாடு இல்லாமல் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு ஒரே ஒரு தோழியுடன் உறவை மெயிண்டெயின் செய்வது சிக்கலை வர வழைக்கும். என்னதான் முற்போக்கு என்றாலும் எல்லா மனைவிகளுக்கும் பொஸஸிவ்நெஸ் இருக்கும். இது தேவையில்லாத சண்டையை வர வழைத்து வெறுப்பை உண்டாக்கும். ஆண்கள் , கள்ளத்தனமான திருட்டு உறவில் இருந்து பிடிபட்டு திட்டு வாங்கிச் சாவதை விட , இதைப்போல ஒன்றுமில்லாத வெட்டி உறவுக்காகச் சந்தேகப்பட்டு தர்ம அடி வாங்குவதுதான் நடக்கிறது. அதனால் ஒரு தோழி என்றெல்லாம் சிக்கனம் பார்க்காமல் ஒரு குழுவுடன் பழகுங்கள்.
அந்தக் குழுவில் சில ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கலாம். அந்தக் குழுவோடு பழகுவது நல்ல உற்சாகத்தையும் தேவையற்ற சந்தேகங்களுக்கு வழி வகுப்பதையும் தடுக்கும். அந்தக் குழுவில் மனைவியையும் சேர்த்து விடலாம். அது உங்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தது.
மனைவியுடனான சண்டைகளை , பிரச்சனைகளை எந்த நெருங்கிய நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அதிலும் குறிப்பாக எந்த பெண்களிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
குழந்தை பிறந்ததும், செலவுகள் எகிறும். ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது பாட்டி, தாத்தா உதவி தேவைப்படும். குடும்ப பாலிடிக்ஸ் , ஈகோ இதையெல்லாம் கைவிட்டு விட்டு பாட்டிகளிடம் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்தால் , அவர்கள் குழந்தையை அருமையாக வளர்த்தெடுப்பார்கள். அவர்களுக்குத் தேவையான மரியாதையைச் செய்யுங்கள். பாட்டி குழந்தை வளர்த்தாலே, பாதி ஸ்ட்ரெஸ் ஆண்களுக்கு குறையும்.
பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தகுதிக்கு மீறி இழுத்துப்போட்டுக்கொள்ள வேண்டாம். குறைவான ஃபீஸ் வாங்கும் சிறப்பான பல பள்ளிகள் இருக்கின்றன. பெரிய பள்ளியில் குழந்தையைச் சேர்த்து நம் வீராப்பைக் காட்ட வேண்டும் என்பதில்லை. பள்ளிக்கு அருகிலேயே வீடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது நடந்து செல்லும் தூரத்தில்.
லோன் போட்டு சொந்த வீடு வாங்கவே வாங்காதீர்கள். அதே சமயத்தில் எக்கச்சக்க வாடகை கொடுத்து லக்சூரி அபார்ட்மெண்டையும் வாட கைக்கு எடுக்காதீர்கள். அளவான விலையில் அனைத்து வசதிகளோடும் வாடகை வீடு கிடைக்கும். என்ன , நாமே களத்தில் இறங்கிக் கொஞ்சம் அலைய வேண்டும்.
கையில் எப்போதும் கொஞ்சம் சேமிப்பை வைத்துக்கொள்ளுங்கள். சேமிப்பு அதிகமானதும் நிலம் வாங்கிப்போடுங்கள். ஐந்து அல்லது பத்து வருடம் கழித்து நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது சொந்த வீடு திட்டம் போட்டுக்கொள்ளலாம்.
தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டாம். மனைவியுடன் வருடத்திற்கு மூன்று முறையாவது சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். வார இறுதியில் தவறாமல் சினிமா , மால், பீச் , ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டும். இந்த மனைவி கடமை முடிந்ததும் தனியாக நண்பர்களோடு வருடத்திற்கு நான்கு முறை சுற்றுலா செல்ல வேண்டும்.
புதுப்புது இடங்களுக்கு செல்லுங்கள். இதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டாம். உங்கள் ஊரிலேயே கண்களைத் திறந்து பார்த்தால் நிறைய இடங்கள் இருக்கும். விதம்விதமான கிளப்கள் இருக்கும். வெவ்வேறு இயக்கங்கள் , குழுக்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். விருப்பப்பட்ட எதேனும் ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்.
கோவில் , கும்பாபிஷேகம் , பட்டிமன்றம், இசைக் கச்சேரி , குதிரைச் சந்தை , கூவாகம் திருவிழா எனப் பல நிகழ்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்தையும் தொலைக்காட்சிகளில் பார்க்காமல் நேரில் அவ்வப்போதாவது சென்று பாருங்கள். ஏதேனும் ஒரு விளையாட்டை பழக்கப் படுத்திக்கொள்ளுங்கள். விளையாட ஆட்கள் கிடைக்கவில்லையெனில் ஜாக்கிங் , நீச்சல் போன்ற ஆரோக்கியமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
பாலியல் சுதந்திரம் , தனி மனித சுதந்திரம் என்றெல்லாம் கிளப்பி விடுவார்கள். அதையெல்லாம் நம்பிக் கள்ளக் காதலில் ஈடுபடாதீர்கள். நல்ல காதலே நம்மை இந்த டார்ச்சர் செய்கிறதென்றால் கள்ளக்காதலை யோசித்துப் பாருங்கள். செத்து சுண்ணாம்பாகிப் போவீர்கள். அதனால் வரும் வலியால் தினம் தினம் செத்துப் பிழைப்பீர்கள்.
கொஞ்சம் கிளுகிளுப்பு வேண்டும் ஆண்களுக்கு. இன்னொரு பெண், பக்குவமான பெண் எனில் , ஃப்ளிர்ட்டிங்க் அளவுக்குச் செல்லலாம். அது உறவாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில சுருக் வழிகள்:
1) அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள்
2) கடன் வைத்துக்கொள்ளாதீர்கள்
3) அடுத்தவரை பார்த்து, எதையும் , எதற்கும் ஏங்காதீர்கள்
4) மனைவிக்கு சின்னச் சின்ன கிஃப்ட் வாங்கிக்கொடுங்கள்.
5) மனைவி எதிர்பாராத நேரத்தில் முத்தம் கொடுங்கள். பொது இடங்களில், நாகரீகமாக அன்பு முத்தம் குடுங்கள். அது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்
6) எக்ஸ்ட்ரா உறவு வேண்டவே வேண்டாம்.
7) கணவன் ஃபோனை மனைவியும் , மனைவி ஃபோனை கணவனும் நோண்டலாகாது.
8) உங்களை விட இளம் வயதினரோடு ஈகோ இல்லாமல் பழகுங்கள். அதே போல பழுத்த முதியவர்களோடும் பழகுங்கள்.
9) குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அதற்குக் குளிப்பாட்டி விடுங்கள் , அதனுடன் பேசிக்கொண்டே இருக்கலாம்.
10) தினமும் இரண்டு முறை நீண்ட நேரம் நிம்மதியாகக் குளியுங்கள்.
அக்டோபர், 2017.