சிறப்புக்கட்டுரைகள்

முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது

விநாயக முருகன்

கடந்தாண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஒருவித மனஅழுத்தத்தில் இருந்தேன். அதிலிருந்து விடுபடவே சில நாட்கள் தேவைப்பட்டன. மீண்டும் அதே வித மனநிலையை இப்போது உணர்கிறேன்.

கடந்த வாரம் சோம்பலான விடுமுறை தினமொன்றின் காலைப்பொழுதில் நண்பர் விஜயமகேந்திரன் எனது அலைபேசியில் தொடர்புகொண்டார். நண்பர் குமரகுருபரன் இறந்துவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். நான் நம்பவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் குமரகுருபரனுக்கு இயல்விருது அறிவித்திருந்தார்கள். மருத்துவமனை வாசலில் நண்பர்கள்

சோகமாக நின்றிருந்தனர்.  கவிஞர் மனுஷ்யபுத்திரன் கனத்த மவுனத்துடன் கலங்கி உட்கார்ந்திருக்க அருகே நின்றிருந்த செல்வி உள்ளே போய் பாருங்க என்றார். உள்ளே சென்று நண்பர் குமாரை பார்க்க தோன்றவில்லை. இனி எதுவும் வராது அல்லவா? ஆனால் மனிதனுக்கு மரணமில்லை என்று பாரதி எப்பவோ சொன்னது இன்னமும் சத்திய வாக்காகத் தான் இருக்கிறது. சாதாரண மனிதர்களுக்கு பொருந்துமோ இல்லையோ அது கவிஞனுக்குத்தான் சாலப்பொருந்தும். கவிஞர்கள் ஒரு சொல்லாகவோ, ஒரு படிமமாகவோ நமது மூளைக்குள் நிரந்தரமாக உறைந்துவிடுகிறார்கள். 

குமாருடன் எனக்கு வருடக்கணக்கில் எல்லாம் நட்பு இல்லை. எங்கள் நட்பு குறுகிய காலம்தான். ஒரு வருடம் படைப்புகள், பேஸ்புக் வழியாகவும் ஆறுமாதம் நேர்ப்பழக்கமும். ஆனால் அந்த குறுகிய காலம்தான் இன்னும் பல ஆண்டுகள் எனது மனதில் குறிஞ்சிப்பூக்கள் மலரும் தருணமொன்றாய் பசுமையாக தொடரும் என்று தீர்க்கமாக நம்புகிறேன். 

வலம் நாவலை படித்துவிட்டு ஒருநாள் தொடர்புகொண்டார். கமல் நடித்த நாயகன் திரைப்படத்தை காலங்கடந்து இன்னமும் ரசிக்கிறார்கள். நாயகன் பாணியில் ஒரு படம் எடுக்கபோகிறேன். அயோத்திதாசர் வரலாறை ஸ்கிரிப்ட்டாக எழுத ஆரம்பித்துள்ளேன். எப்படியும் முப்பது சீன்களை வலம் நாவலிலிருந்து எடுத்துவிடுவேன். நான் இரட்டைமலை சீனிவாசன் வாரிசுகளை கூட பார்த்து சில தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன் என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. ஏங்க இந்த விபரீத ஆசை? படமெடுக்க பணத்துக்கு எங்கே போவீங்க என்றேன். அதெல்லாம் பார்த்துக்கலாம்டா என்றார். ஒருநாள் வாங்க. நாம இதைப்பற்றி பேசலாம் என்றார்.               

சில நாட்கள் கழித்து அவரை மீண்டும் தொடர்புகொண்டேன். மதுரையில் முருகேச பாண்டியன் இல்லத்திருமணவிழாவுக்கு நானும் விஜயமகேந்திரனும் அவருடன் காரில் சென்றோம். செங்கல்பட்டு தாண்டியதும் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம். பேச்சுவாக்கில் விஜயமகேந்திரன் பத்மராஜன் படங்களை பற்றி ஆரம்பித்தார். குமரகுருபரன் தனக்கும் பத்மராஜன்தான் பிடித்த கலைஞர் என்று சொன்னார். பத்மராஜன் தனது குறுகியகாலத்தில் அசுர சாதனை செய்துவிட்டார். தனது வாழ்நாளில் மிகப்பெரிய உழைப்பை கொட்டிய கலைஞன். எழுத்தைபோலவே சினிமாவிலும் சிகரம் தொட்டவர். பத்மராஜனின் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு. ஆண் வாரிசுகள் யாரும் நாற்பது நாற்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள். அதனாலேயே அவர் வெறியோடு  உழைத்தார். மரணத்தை முன்கூட்டியே உணர்ந்துதான் அவர் எண்ணற்ற படங்களை இயக்கினார் என்றார்.

பிறகு குமரகுருபரன் சென்னையில் கால்நடைத்துறை படிப்பை முடித்துவிட்டு பத்திரிகைகளில் பணியாற்றியது. சில பல புனை பெயர்களில் கட்டுரைகள் எழுதியது. நவீன இலக்கியத்தின்மீது கொண்ட ஈடுபாடு, கவிதைகள் எழுத ஆரம்பித்தது, ஊடகங்களுடன் தொடர்பு, சினிமாத்துறையில் நுழைய முயற்சி செய்தது என்று அவரது பரந்துப்பட்ட பரிமாணங்களை எங்களிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவம் மலைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அறுபது வயதை தொட்டவர்களுக்கே வாழ்க்கையில் அவ்வளவு அனுபவச்செறிவு அமையும். அறுபது வயதில்தான் திரும்பி பார்க்க நாம் சந்தித்த அவ்வளவு மனிதமுகங்களும்  நினைவுக்கு வரும்.         

முந்தையதினம்தான் மதுரையில் மழைபெய்து பூமிகுளிர்ந்துகிடந்தது.  விடுதியில் தங்கினோம். இரவெல்லாம் பேச்சுக்கச்சேரி.   

தனது ஊடக அனுபவங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார். குமுதத்தில் பணியாற்றும்போது நடந்த சுவையான தகவல்களை சொன்னார். அண்மையில் தொடங்கிய தடம் இதழின் போக்கு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கணித்து சொன்னார். அந்திமழை இளங்கோ, அசோகனுடன் தனக்கிருந்த நட்பை பற்றி நெகிழ்வோடு சொன்னார். கல்லூரிக்காலத்திலிருந்து நட்பில் இருப்பதாக சொன்னார். தினமலர், விண்நாயகன் என்று பேச்சு சென்றது. தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்கள் பற்றி பேசினார்.

இலக்கிய வட்டாரத்தில் குமாருக்கு பரிச்சயம் இல்லாத ஆட்களே இல்லை. இலக்கியத்தில் இருக்கும் மோசமான குழு அரசியலை தாண்டியும் அவர் எல்லாரிடமும் சகஜமாக பழகியுள்ளார். அதுபோலவே இலக்கிய வட்டத்தில் இருக்கும் பலரது தனிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துள்ளார். அதில் பெண்கவிஞர்களின் எண்ணிக்கை கணிசம்.

விஜயமகேந்திரன் குமாரை பார்த்து “அண்ணே. நீங்க ஒரு சுமைதாங்கிண்ணே. எல்லா வீட்டு பிரச்சினைகளையும் தீர்த்து வச்சுருக்கீங்க. நீங்க ஒரு சின்னகவுண்டர்ண்ணே” என்று கிண்டல் செய்தார். குமாரை கிண்டல் செய்யும்போது அவர் சிரிக்கமாட்டார். அவர் முகத்தில் சிறு திகைப்பை வெளிப்படுத்துவதுபோல நடிப்பார். என்னடா அண்ணனை இப்படி ஓட்டுறீங்களே என்று தலையில் அடித்துக் கொள்வதுபோல ஒரு அதிர்ச்சி கலந்த பாவனையை வெளிப்படுத்துவார். ஆனால் உள்ளுக்குள் அவர் அந்த கிண்டலை ரசிக்கவே செய்வார் என்று எனக்கு தெரியும்.

பத்திரிகையில் எழுதி எழுதி எனக்கு புனைவுகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. கவிதைகள் தவிர பெரிதாக எந்த இலக்கிய வடிவத்திலும் என்னால் இறங்க முடியவில்லை. ஆனால் நாவல்கள், சிறுகதைகள் என்று தொடர்ந்து வாசிப்பேன் என்றார். குமாரின் கவிதைகள் பெரும்பாலும் நுட்பமான மைக்ரோ சித்தரிப்புகள் கொண்டவை அல்ல. தனிமனித ஏக்கம், இறப்பை எதிர்நோக்கிய அலைக்கழிப்பும் தனிமையும் கொண்ட உணர்வுகளால் நிரம்பியவை. ஆத்மாநாம், நகுலன் பள்ளியை சேர்ந்தவை. ஆனால் அந்த கவிதைகளில் தெறிக்கும் தர்க்கமின்மையும், மொழிக்கூர்மையும்,

சொற்களின் லாவகங்களும் வசீகரிக்க வைக்கும். குமாரின் இரண்டு தொகுப்புகளும் வெளிவந்த காலத்தில் கொண்டாடப்பட்டவையே.        

மறுநாள் காலை மதுரையிலிருந்து நாங்கள் கிளம்பும்போதும் குமார் மட்டும் அதே அறையில் தங்கிக்கொண்டார். அன்று இரவுதான் திருநெல்வேலி செல்லபோவதாக சொன்னார். நாங்கள் விடைபெறும்போது மீண்டும் தனிமையின் ரேகைகள் அவரது முகத்தில் படர்வதை கவனித்தேன்.   

அவருடன் இறுதியாக தொலைபேசியில் பேசிய நாளன்று நான் ஒரு கட்டுரைத்தொகுப்புக்காக வேலை செய்து கொண்டிருந்தேன். அதிலொரு கட்டுரையின் தலைப்பு “ஒரு பயணமும் பத்மராஜனின் படங்களும்”. அந்தக்கட்டுரையை எழுதி முடித்துவிட்டு மறுநாள் அவரை சந்திக்கும்போது அவரிடம் காட்ட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். மறுநாள் அவர் இல்லை. முடித்துவிட்ட அந்த கட்டுரையில் எப்படி குமாரின் மறைவை ஒரு தகவலாக சேர்ப்பது என்றும் தெரியவில்லை.

ஜூலை, 2016.