சிறப்புக்கட்டுரைகள்

முதலாளித்துவ அமைப்பில் அரசியல் என்பதும் ஒரு தொழில்

சஞ்சனா மீனாட்சி

அருணன்’ என்னும் புனைப்பெயரில் எழுதும் இரா. கதிரேசன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். படைப்பிலக்-கியத்திலும் இலக்கிய விமர்சனத் துறையிலும், சமூக,தத்துவ ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். ஐந்து நாவல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சமூக, அரசியல், வரலாறு, தத்துவ, இலக்கிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். 1975-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தொடங்கியதில் இருந்து அதில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட அருணன் பல ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்தார். இப்போது அதன் கௌரவத் தலைவராக இருக்கிறார். அந்திமழைக்காக அவரிடம் சீன நிலவரம் மற்றும் அங்குள்ள கோடீஸ்வரர்கள் பற்றிப் பேசினோம்:

கம்யூனிஸம் என்பது முதலாளிகளுக்கு எதிரானதா அல்லது பணத்திற்கு பகைமையானதா?

இரண்டும் இல்லை. கம்யூனிசம் என்பது தனிமனித முதலாளிக்கோ பணத்திற்கோ எதிரானது அல்ல. பணம் ஒரு சிலரிடம் மலைபோல குவிவதற்கும், கோடிக் கணக்கான அடித்தட்டு மக்கள் ஒட்டச் சுரண்டப்படுவதற்கும் வழி வகுக்கின்ற இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்புக்கு எதிரானது. மனித குலம் தோன்றிய போது கூடவே இந்த முதலாளித்துவ அமைப்பும் தோன்றவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட இல்லாதது தான் இது. எல்லாம் மாறும் என்னும் விதிக்கேற்ப இதுவும் மாறும், அதனிடத்தில் இதையும் விட ஓர் உன்னத சமுதாய அமைப்பு எழும். அதுவே கம்யூனிசம்.

தமிழ் இலக்கிய கலாசார வரலாற்றில் கம்யூனிச சிந்தனை ஏற்கெனவே உண்டா? அல்லது இது இறக்குமதியான சிந்தனை மட்டும்தானா?

நமது பாரம்பரியத்திலும் பொதுவுடைமைச் சிந்தனை உண்டு. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய கம்பராமாயணத்திலேயே  ‘பூவலயம் தனி அன்று பொது என்பர்’ என்று தனியுடைமைச் சமுதாயம் ஒழிந்து வரும் பொதுவுடமைச் சமுதாயம் பற்றிய ஏக்கம் வெளிப்பட்டுள்ளது. ‘எல்லோரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இங்கே இல்லாரும் இல்லை. உடையாரும் இல்லை மாதோ’ என்று இன்னும் நுணுக்கமாக விவரித்துள்ளான் கம்பன்.

‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை..‘ என்று எதிர்கால இந்தியா பற்றிய சித்திரத்தைத் தீட்டியது மட்டுமல்லாது அதன் உள் கூறாக ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ’ என்றும் அருமையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தான் பாரதி.

இது, கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் -ஏங்கெல்ஸ் கம்யூனிச சமுதாயத்திற்கு தந்த கச்சிதமான இலக்கணத்தை அற்புதமான இலக்கியமாக்கியதாகப் படுகிறது. ‘ஒவ்வொருவர் சுதந்திர வளர்ச்சியானது அனைவரது சுதந்திர வளர்ச்சிக்கும் ஒரு நிபந்தனையாக இருக்கும்’ என்று அவர்கள் சொன்னதை மனதில் நிறுத்தி பாரதியின் வரிகளைப் படியுங்கள். நான் சொல்வதன் அர்த்தம் புரிபடும்.

கம்யூனிச நாடான சீனாவில் கோடீஸ்வரர்கள் இருப்பது பற்றியும் மாவோவின் பேத்தி 242-வது பணக்காரராக இருப்பது குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

சீனா இன்று பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அதைக்கண்டு மிரளுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் லண்டனில் ஒரு மாதம் இருந்தேன். அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சீனா போயிருந்தார். அதையொட்டி அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை அந்த நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது. அதில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பல கோடிப் பேரை வறுமையிலிருந்து சீனா மீட்டிருக்கிறது என்றும் உலகில் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக வளர்ந்து நிற்கிறது என்றும் அதனோடு நெருங்கிய உறவு கொள்ள இங்கிலாந்து விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆக எதிரிகளே புகழும் அளவுக்கு அங்கே வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த சாதனைக்குக் காரணம் அங்கு ஆட்சியில் உள்ள சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் நிதானமான நோக்கும் போக்கும். 1949-ல் அங்கே புரட்சி வெற்றி பெற்ற போது அதுவொரு பின் தங்கிய நிலப் பிரபுத்துவ நாடாக இருந்தது. அங்கே சோசலிசக் கட்டுமானத்தைச் செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. தாங்கள் தற்போது கட்டியமைத்து வருவது சோசலிச ஆரம்ப நிலையே என்கிறார்கள். அதிலே தனியார் மூலதனம் நிராகரிக்கப்படுவதில்லை. தேசப் பொருளாதாரத்தின் கேந்திரமான அங்கங்களை பொதுத்துறையில் பராமரித்துக் கொண்டே தனியார் துறையையும் அனுமதிக்கிறார்கள்.

இந்தியா போல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பதில்லை. மாறாக அவற்றோடு தனியாரையும் போட்டி போடச் சொல்கிறார்கள். உள்நாட்டில் இல்லாத நவீன தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காக அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறார்கள் அரசின் உரிய கட்டுப்பாடுகளோடு... இந்த நிலையில் அங்கே கோடீஸ்வரர்களும் உருவாகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களது ஆதிக்கம்  சமுதாயத்தில் வந்துவிடாதபடி கம்யூனிஸ்டு கட்சி நாட்டைக் காவல் காக்கிறது. கொசு வருகிறது என்பதற்காக ஜன்னலை அடைத்தே வைத்திருக்கமுடியாது. ஜன்னலைத் திறப்போம். அதே நேரத்தில் கொசுக்களை தடுக்க வலையும் அடிப்போம் என்பதே தங்களது கொள்கை என்கிறார்கள் சீனக் கம்யூனிஸ்டுகள்.

மாவோ சொன்ன விஷயங்களில் இருந்து இன்றைய சீனா எவ்வாறு மாறி உள்ளது?

சீனப்புரட்சியில் மாவோவின் பங்களிப்பை இப்போதும் அங்கீகரிக்கிறார்கள் சீன கம்யூனிஸ்டுகள். இதிலே ஸ்டாலினை முற்றிலும் மறுதலித்த ரஷ்யாவின் குருச்சேவ் தலைமையிலிருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். அதே நேரத்தில் காலத்திற்கேற்ப, தங்களது தேசத்துக்கு ஏற்ப மார்க்சியத்தை பிரயோகிப்பதில் தனிப்பாதைக் கண்டவர்கள் சீனர்கள்.டெங் சியோவோ பிங் இது விஷயத்தில் புதுத்தடம் போட்டுக்கொடுத்தார். தனது காலத்திலேயே சோசலிசக் கட்டுமானத்தை முடித்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் சில அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மாவோ. அவற்றைக் கைவிட்டு ஒரு நிதானமான நிலைக்கு நாட்டைக் கவனமாகத் திருப்பியதில் டெங்கின் பங்கு அளப்பரியது.

இன்றைய தேதிக்கு சிபிஎம், சிபிஐ கட்சிகளின்  சுய சொத்து விவரமே சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் தேறும். இந்த சொத்து சேர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது?

கம்யூனிஸ்டு கட்சிக்கு மாநில மாவட்ட அளவில் உள்ள அலுவலகக் கட்டடங்களைத் தான் மாபெரும் சொத்துக்கள் என்கிறீர்கள் என நினைக்கிறேன். அவை சொத்துக்கள் அல்ல. கட்சி நிர்வாகத்துக்கான அலுவலக ஏற்பாடுகள். அவையும் கூட மக்களிடம் உண்டியல் வசூல் செய்து நன்கொடை திரட்டி கட்டப்பட்டவை. இந்த முதலாளித்துவ அமைப்பில் அரசியல் என்பதும் ஒரு தொழிலாகிப் போனது. அதில் இறங்குவதும் லாபம் சம்பாதிப்பதற்கே, அதற்கான முதலீடே தேர்தல் செலவு என்று முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்கள் நினைக்கிறார்கள். அப்படியாகவே செயல்படுகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளிலோ நிலைமை முற்றிலும் வேறு. இங்கு நாங்கள் சொந்த வருமானத்திலிருந்து கட்சிக்கு ‘லெவி’ எனப்படும் நிதி தருகிறோம். எம்.எல்.ஏ. எம்பி.க்கள் கூட அரசு தரும் ஊதியத்தை அப்படியே கட்சிக்குக் கொடுத்து விட்டு அது தரும் சொற்ப அலவன்சையே குடும்பச் செலவுக்குப் பெறுகிறார்கள். காரணம் தேர்தல் செலவை முழுமையாகக் கட்சி செய்கிறது. இதனால் ஊழலின் வேரே வெட்டிச் சாய்க்கப்படுகிறது.  மற்றொரு முக்கிய விஷயம் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து கட்சிக்கு நிதி வாங்குவதில்லை என்பதை ஒரு கோட்பாடாகவே வைத்திருக்கிறோம். இந்த நிலையில் கட்சிக் கட்டடங்கள் எப்படி எழுப்பப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். அவை மக்களால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தரப்பட்ட சீதனம். மக்கள் சொத்து.

கட்சிக்காக,கொள்கைக்காக பாடுபடும்  தோழர்களை இடதுசாரிகளில் நிரம்பக் காண முடிகிறது. உள்ளூர் பிரச்சனைகளுக்கு  குரல் கொடுக்கும் முதல் ஆளாக கம்யூனிஸ்ட்கள்  இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இன்றைக்கு அன்னா ஹசாரே, ராம்தேவ் போன்றவர்கள் பின்னால் மக்கள் செல்வதை பார்க்கையில் கம்யூனிஸ்டுகள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்ததாகத் தோன்றுகிறதே..

‘ஊழல் எதிர்ப்பு’ என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு இதர சமூக பொருளாதார விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டு அன்னா ஹசாரேயை தூக்கிப் பிடித்தது ஆர்.எஸ்.எஸ். அது அடித்தட்டு மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. நகர்ப்புற மத்திய வர்க்கத்தை ஓரளவு ஈர்த்தது. இப்போது அவரையும் தூக்கிக் கடாசிவிட்டு நரேந்திரமோடியை உயர்த்திப் பிடிக்கிறது அதே ஆர்.எஸ்.எஸ்.

ஊழல் எதிர்ப்பு என்கிற போது ஹசாரே பக்கம் சென்ற மக்கள் ஏன் கம்யூனிஸ்ட் பக்கம் வரவில்லை?

ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி உண்மையில் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. அந்த அளவுக்கு அவர்கள் பொதுவாழ்வில் நாணயமானவர்கள்..ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் இந்த உண்மையை மக்களிடம் சொல்வதில்லை. ஆகவே மக்கள் பொய்மானைத் தேடிப் போய் ஏமாறுகிறார்கள்.

இந்தத் தடைகளை உடைத்து ஏன் கம்யூனிஸ்டு இயக்கம் முன்னேற முடியவில்லை..?

நியாயமான கேள்வி. எதிரிகள் தடைகளை உருவாக்கத்தான் செய்வார்கள். அவற்றை மீறி வளர்ச்சி காண கம்யூனிஸ்டுகள் தான் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதனைக் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் அவர்கள் சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். அந்த வளர்ச்சியை அகில இந்திய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் இன்னும் கச்சிதமான திட்டமிடலைச் செய்யவேண்டியதிருக்கிறது. குறிப்பாக கம்யூனிஸ்டு கருத்தியலின் தனித்தன்மையை மக்களிடம் இன்னும் எளிமையாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கேற்ற அறிவுஜீவி வட்டாரம் ஒன்றை உருவாக்க வேண்டியுள்ளது. நிச்சயம் அது எதிர்காலத்தில் நடக்கும். இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தேவையான அளவுக்கு வளரவில்லை என்பது நிஜம். ஆனால் அந்த இயக்கத்தின் வளர்ச்சி நாட்டுக்குத் தேவை, அதைவிட்டால் பாட்டாளிகளுக்கு கதிமோட்சம் வேறு இல்லை என்பது அதை விட நிஜம். தேவையே புதிய கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். இந்தத் தேவையும் கம்யூனிச வளர்ச்சிக்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கொள்ளும்.     

ஜூலை, 2013.