பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் 1927-ல் பிறந்தவர் மகாஷாய் தரம்பால் குலாட்டி. பிரிவினையின்போது இந்தியாவுக்குக் குடும்பத்துடன் அகதியாய் வந்து சேர்ந்தார். அவர் கையில் இருந்தது 1500 ரூபாய் மட்டுமே. இன்றைக்கு குலாட்டி 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்டிஹெச் மசாலா நிறுவன அதிபர்.
96 வயதாகும் இவரை நாம் பலமுறை தொலைக்காட்சியில் விளம்பரங்களில் பார்த்திருப்போம். எம்டிஹெச் மசாலா வட இந்தியாவில் புகழ்பெற்றது. அதற்கான விளம்பரங்களில் இவர் தோன்றுவார். ஒருநாள் விளம்பரப் படப்பிடிப்பின்போது நடிக்கவேண்டியவர் வரவில்லை. காசு மிச்சம்தானே என்று இவரே நடிக்க ஒப்புக்கொண்டார். அதிலிருந்து இவரே விளம்பரத்தில் தோன்றுகிறார்.
சரி.. அவரது கதைக்கு வரலாம். பாகிஸ்தானில் இருந்து டெல்லி வந்ததும் ஒரு குதிரை வண்டியை வாங்கி ஓட்டினார். இரண்டு அணாவுக்கு கன்னாட்ப்ளேஸில் இருந்து கரோல்பாக்குகு அழைத்துச் சென்றார். ஆனால் அது மிகக் கடினமான வாழ்க்கையாக இருந்தது. சில நாட்கள் ஆட்களே வராமல் பட்டினி கிடக்கவும் நேர்ந்தது. பாகிஸ்தானில் தன் குடும்பத் தொழிலாக மசாலா தயாரித்து விற்பதையே செய்யலாமே என நினைத்தார். குதிரைவண்டியை விற்றுவிட்டு பிறகு கரோல்பாக் அஜ்மல்கான் சாலையில் கடையைத் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பை பாதியில் விட்டவர்தான் குலாட்டி. இருப்பினும் வியாபாரத்தில் கெட்டி.
எம்டிஹெச் என்ற பெயரில் 1959-இல் தொடங்கிய கடை மெல்ல புகழ் அடைந்தது. அதன் பெயரில் உருவான மசாலா வட இந்தியாவில் 80% சந்தையைப் பிடித்துள்ளது. இந்தியாவிலும் துபாயிலுமாக சேர்த்து 18 தயாரிப்பு ஆலைகள் உள்ளன. சுமார் 62 பொருட்களைத் தயாரித்து விற்கிறார்கள்.
குலாட்டிக்கு ஆறு மகள்கள். ஒரு மகன். இவர் 1992-ல் இறந்துவிட்டார். இவ்வளவு வயதானாலும் தினந்தோறும் குலாட்டி தன் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று வேலைகளைக் கவனிப்பதை நிறுத்தவில்லை.
விளம்பரங்களில் தோன்றிவரும் குலாட்டி, வதந்திகளுக்குப் பலியானார். கடந்த ஆண்டு அவர் இறந்துவிட்டதாக செய்திப் பரவியது. எல்லோரும் விசாரிக்கச் செல்ல, அவர் தான் மேலும் இளமை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இவர் தன் நிறுவனத்தில் வாங்கிய சம்பளம் 25 கோடி! இந்தியாவில் இவ்வளவு அதிக சம்பளம் பெற்ற ஒரு நுகர்வோர் நிறுவனத் தலைவர் இவர்தான்!
ஏம்பா திடீர்னு இவரைப்பற்றி?
இந்த குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் இவரும் ஒருவர்.
தாத்தாவுக்கு பத்ம விபூஷண்!
பிப்ரவரி, 2019.