சிவகுமார சுவாமிகள் 
சிறப்புக்கட்டுரைகள்

தினமும் எட்டாயிரத்து ஐநூறு மாணவர்களுக்கு சாப்பாடு!

முகங்கள்-1 : சிவகுமார சுவாமிகள்

முத்துமாறன்

பெங்களூரு அருகே உள்ள மாகடி என்ற தாலுகாவில் இருந்து தும்கூரில் இருந்த அறுநூறு ஆண்டுகள் பழைமையான சித்தகங்கா என்ற லிங்காயத்து மடத்தில் சிறுவனாக இருந்தபோதே கொண்டுபோய் சேர்க்கப்பட்டவர் சிவண்ணா.

ஒரு விவசாயக் குடும்பத்தில் 13வது குழந்தையாக  பிறந்தவரான இவர் மடத்தில் கல்விகற்று 1930ல் அம்மடத்தின் தலைமைப்பொறுப்புக்கு சிவகுமார சுவாமிகள் என்ற பெயருடன் வந்தார். அப்போது மடத்தின் சார்பில் ஒரு சமஸ்கிருத கல்விநிலையம் மட்டுமே இருந்தது. மடத்தில் செல்வமும் குறைவாகவே இருந்தது. தினந்தோறும் அவர் மாட்டுவண்டியில் ஏறி சுற்றுப்புறத்தில் இருந்த மக்களைப் பார்வையிடப் போவார். அவருக்குப் புரிந்ததெல்லாம் ஒன்றுதான். இம்மக்களை கல்வியால் மட்டுமே மேல்நிலைக்குக் கொண்டுவர முடியும். அதற்கு வெறும் கல்வி மட்டும் தந்தால் போதாது. சாப்பாடு போட்டு தங்குமிடமும்
கொடுத்தால்தான் அவர்கள் கற்கமுடியும் என்பதை உணர்ந்தார்.

அதற்காக பணக்காரர்களை சந்தித்து மடத்துக்கு நிதியோ உணவோ தானியங்களோ தருமாறு கேட்டுக்கொண்டார். கல்விநிலையங்களைத் திறந்தார். சாதி வேறுபாடு இன்றி எல்லோரையும்
சேர்த்துக்கொண்டார். லட்சக்கணக்கானவர்கள் இங்கே படித்து மேம்பாடு அடைந்தார்கள். இன்றைக்கு அந்த மடம் 126 கல்விநிலையங்களை நடத்துகிறது என்றால் அது லேசுப்பட்ட விஷயம் அல்ல. இதில் பொறியியல் மருத்துவக் கல்வி நிலையங்களும் அடங்கும்.

கர்நாடகத்தில் சக்தி வாய்ந்த லிங்காயத்துப் பிரிவின் மடாதிபதி அவர். அவரிடம் நெருங்க, அவரது ஆதரவைப் பெற எல்லா அரசியல்வாதிகளும் முயன்றார்கள். ஆனால் அனைவரையும் தும்கூர் மடத்தில் அவர் ஒன்றாகவே வரவேற்றார். சமமாகவே நடத்தினார்.  இவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர் என்றால் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவைச் சொல்லலாம்! ஆனாலும் அவருக்காக வெளிப்படையாக ஆதரவை சிவகுமார சுவாமிகள் அளித்ததே இல்லை!

அரசியல் விவகாரங்களில் அரிதாகவே அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதை அவர் கண்டித்ததும் அதில் ஒன்று.

எஸ்.எம்,கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தினார். அதை கிராமப்புற முன்னேற்ற நிதி திரட்டுவதற்காகக் கொண்டுவருவதாகச் சொன்னார். அப்போது சுவாமி இதை எதிர்த்து கடுமையான கடிதம் ஒன்றை முதல்வருக்கு எழுதினார். ‘இந்தத் திட்டமானது அப்பாவிடம் திருடி மகனுக்குக் கொடுப்பதற்குச் சமமானது' என்று அவர் அதில் சாடினார்.

இன்று தும்கூர் மட கல்விநிலையத்தில் 8500 மாணவர்களுக்கு கல்வியும் உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. தினந்தோறும் மடத்தில் இதற்காக இரண்டாயிரம் கிலோ அரிசியும் அதற்கேற்ப காய்கறிகள், பருப்புவகைகளும் வேகின்றன!

சுவாமி தன் 111வயது வயதில் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு 100 வயதானபோதே தனக்கு ஒரு சமாதியை எழுப்பி அதில் அமர்ந்து இந்த உடலை நீக்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனால் அவரது பக்தர்கள் கோரிக்கையால் அந்த முடிவைக் கைவிட்டிருந்தார். நடமாடும் கடவுள் என்றே மடத்து பக்தர்களால் அழைக்கப்பட்டிருந்தார் அவர். நீண்ட வாழ்வு அவருடையது. நிறைவானதும் கூட.

பிப்ரவரி, 2019.