சிறப்புக்கட்டுரைகள்

மு.க. 60

முத்துமாறன்

அது 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு மதிய நேரம். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மு.கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். 1980-ல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் விரைவிலேயே முறித்துக்கொண்டபின் 24 ஆண்டுகள் ஓடியிருந்தன. கலைஞர் கருணாநிதியுடன் அதற்கு முன்பாக இரண்டுமுறை சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். தூதர்களாக மன்மோகன்சிங்கையும் குலாம் நபி ஆசாத்தையும் அனுப்பிவைத்தார். அதன் பின்னர் உருவானதுதான் தேசிய முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணி அடுத்த இரண்டு தேர்தல்களை மத்தியில் வென்றது. நலிந்துபோயிருந்த காங்கிரஸ் கட்சி ஓரளவுக்கு பலம் பெற்று ஆட்சியில் அமர உதவி செய்தது. கருணாநிதி மாநிலத் தலைவராக இருந்தபோதும் கூட குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அளவில்  செல்வாக்கு செலுத்தக்கூடியவராக இருந்தார். தொடர்ந்து இல்லாவிட்டாலும் கூட ஒரு சில சமயங்களில் அவர் மத்தியில் ஆண்ட தலைவர்களைப் பணிய வைத்திருக்கிறார். குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நடத்தியுமிருக்கிறார்.

1969-ல் முதல்வர் பொறுப்பை ஏற்றபின்னர் மத்தியில் குடியரசுத்தலைவர் தேர்தல் வந்தது. பிரதமர் இந்திரா, தன் சொந்த கட்சியான காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக வி.வி. கிரியை நிறுத்தினார். கருணாநிதி, இந்திராவுக்கு ஆதரவாக, திமுகவின் 25 எம்பிகள், 130 எம் எல் ஏக்களை வி.வி.கிரிக்கு வாக்களித்து வெல்ல வைத்தார். இந்த உறவு தேர்தல் கூட்டணியாக மாறியது. 1971-ல் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை ஓராண்டுக்கு முன்பாக கலைத்து தேர்தல் நடத்தினார். அதே சமயத்தில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார் கருணாநிதி. ஆனால் சட்டமன்றத்தில் எந்த இடமும் போட்டியிட அளிக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்துக்கு மட்டும் பத்து இடங்கள் அளித்தார்.

அடுத்ததாக அவர் எடுத்தது மாநில சுயாட்சி மற்றும் மத்திய மாநில அரசுகள் இடையிலான உறவு பற்றிய நிலைப்பாடு. நீதியரசர் ராஜமன்னாரை தலைவராக நியமித்து மூன்று உறுப்பினர் குழு உருவாக்கினார். அக்குழுவை அறிக்கை வெளியிடச்செய்தார். இந்தியாவிலேயே மத்திய மாநில அரசுகளுக்கிடையில் உறவு எப்படி இருக்கவேண்டும் என்று குழு அமைத்து சிந்தித்து அறிக்கை அளித்தது தமிழ்நாடுதான்( அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட மாநிலங்கள் இடை மன்றம் உருவாக்குவது என்பது பல ஆண்டுகள் செயல்படுத்தப்படவே இல்லை. பின்னாளில் திமுக பங்கேற்ற தேசிய முன்னணி அரசு மத்தியில் அமைந்த பின்னர்தான் இந்த மன்றம் உருவாக்கப்பட்டது).  1974ல் இந்த குழு அறிக்கையை முன்வைத்து மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். மாநில சுயாட்சிக்காக அகில இந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தினார். உத்தரபிரதேசத்தில் கூட மாநில  சுயாட்சிக்கான கூட்டங்களில் கருணாநிதி கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

1982-ல் காஷ்மீர் மற்றும் ஆந்திர அரசுகளை இந்திரா காந்தி கலைத்தபோது, அதைக் கண்டித்து மிகப்பெரிய கூட்டத்தை மெரினா கடற்கரையில் அகில இந்திய தலைவர்களைஅழைத்து நடத்தினார்.

அதைபோலவே மிக முக்கியமானது மதுரையிலே நடத்திய டெசொ மாநாடு. அப்போதைய முக்கிய அகில இந்திய தலைவர்கள் எல்லோரும் கலந்துகொண்ட மாநாடு அது. ஈழத்தமிழர்களுக்காக அகில இந்திய அளவில்கருத்தொற்றுமையை உருவாக்கச் செய்யப்பட்ட முக்கியமான முயற்சிகளில் அதை ஒன்றாகக் கருதலாம். அதன் பின்னர் ஜனதாதளம்,இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி ஒரு முக்கிய முயற்சி. சென்னை மெரினாவில் சீரணி அரங்கில் தேசியமுன்னணித் தலைவர்கள் ஒரேமேடையில் கூடினார்கள். விபிசிங் பிரதமர் ஆனார்.

அதைவிட்டால் ஐக்கிய முன்னணி பரிசோதனை களில் தேவகவுடா, குஜ்ரால் போன்ற பிரதமர்கள் உருவான சம்பவங்களில் முக்கிய பங்கை கருணாநிதி வகித்தார். அப்போது ஐகே குஜ்ரால்  பிரதமராக இருந்த அரசு கவிழ்க்கப்பட்டது. அதற்கு திமுக மீது ஜெயின் கமிஷன் குற்றம் சாட்டியதை அடுத்து காங்கிரஸ் திமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டதற்கு ஐக்கிய முன்னணி அரசு சம்மதிக்காததே காரணம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக ஜெயில் சிங்,  முதல் தலித் சமூக குடியரசுத் தலைவராக கே ஆர் நாராயணன், முதல் பெண் குடியரசுத்தலைவராக ப்ரதிபா பாட்டீல் - ஆகியோர் தேர்வுகளில் கருணாநிதி முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார். இப்படி பல்வேறு விஷயங்களில் அகில இந்திய அளவில் கருணாநிதி ஒரு வலுவான தலைவராக தன்னை ஆக்கபூர்வமாக முன்வைத்திருந்தார். 1998-ல் அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்டு வாஜ்பாய் அரசை கவிழ

வைத்தது. அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பாஜக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. ஆனாலும் ஒரு வாக்குவித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு தோற்றது. பிறகு குறைந்த பட்ச செயல்திட்ட அடிப்படையில் அயோத்தி, பொதுசிவில்சட்டம்,

சட்டப்பிரிவு 370 போன்றவற்றை விலக்கி வைத்து பாஜகவுடன் கூட்டணிக்குக் கரம் கொடுத்ததன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகள் பாஜக கூட்டணி அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் இடம் பெற்றனர். 2004-ல் சென்னை கலங்கரை விளக்கம் அருகே நடத்திக்காட்டிய மாபெரும் பொதுக்கூட்ட மேடையில்  சோனியா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த வலுவான கூட்டணியைத் தொடர்ந்து மத்தியில் இரண்டு முறை ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செல்வாக்குடன் கருணாநிதி ஆதிக்கம் செலுத்தினார்.

இன்று அவர் சக்கர நாற்காலியில் மௌனமாக அமர்ந்திருக்கும் சூழலில் அவரது சட்டமன்ற வைரவிழாவுக்கு அகில இந்திய தலைவர்களைக் கூட்டியிருக்கிறார் அவரது மகன் முக ஸ்டாலின். குடியரசுத்தலைவர் தேர்தல் வருகிற நிலையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியாகவும் இது உருவாகியிருக்கிறது. இதில் அரசியல் கிடையாது என்று முக ஸ்டாலின் கருத்துத் தெரிவித்திருக்கலாம். இது கருணாநிதியின் பெயரால் நடக்கிற  விழா என்கிறபோது அதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றால் குழந்தை கூட நம்பாது.  எங்களைக் கூப்பிடவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்ட தமிழிசையின் கருத்தில் அர்த்தம் பொதிந்திருக்கிறது. தந்தை செயல்படாத நிலையில் செயல்தலைவராக இருக்கும் ஸ்டாலின் நிகழ்த்திக்காட்டும் அகில இந்திய அரசியல் செயல்பாடு இது. பாஜகவுக்கு எதிரான அணிதிரட்டல். இப்படியொரு முக்கியமான முயற்சியாக ராயப்பேட்டையில் நடக்கும் விழாவின் ஓசை கோபாலபுரத்தின் இல்லத்தில் கேட்காமலா போய்விடும்?

ஜூன், 2017.