சிறப்புக்கட்டுரைகள்

மீண்டும் வாருங்கள் லீ

லீ குவான்

மு.செந்தமிழ்ச்செல்வன்

லீ குவான் யூ மறைந்த செய்தி கேட்டவுடன் மிக நெருக்கமாக இருந்த ஒருவரை இழந்தது போன்ற உணர்வு.

சென்னையை விட சிறிய, அதை விட மோசமாக இருந்த சிங்கப்பூரை உலகத்திலேயே முதன்மையான நாடுகளில் ஒன்றாக மாற்றியவர் இவர் என கேள்விப்பட்ட போது நம்புவதற்குச் சிரமமாக இருந்தது. ஆனால் சிங்கப்பூருக்கு நேரில் சென்ற போது தான் அதை முழுதாக நம்ப முடிந்தது. மாநகரச் சாலைகளில் 100கிமீ வேகத்தில் செல்லும் விலையுயர்ந்த வாடகைக் கார்களும் டவுன் பஸ்களாக சொகுசுப் பேருந்துகளும் சுத்தமான சாலைகளும் மெட்ரோ ரயில் நிலையங்களும் கடைகளும் ஒன்றோடொன்று இணைந்து சிங்கப்பூர் முழுதுமே ‘சுத்தமான குளுகுளு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்’ போன்று காணப்பட்டது.

ஆண் பெண் பேதமின்றி அதே நேரத்தில் எந்த வித தவறான நோக்கத்திற்கும் இடமின்றி சர்வ சாதாரணமாக நள்ளிரவிலும், நம் வீட்டுக்குள் இருப்பது  போன்ற உணர்வுடன் இருப்பதைப் பார்த்து உண்மையிலேயே பரவசம் ஏற்பட்டது.

சிங்கப்பூருக்குச் சென்ற இரண்டாம் நாள். இரவு 11 மணிக்கு ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பசியில்லை என்ற என் மகளை மட்டும் தனியாக இறங்கி, தங்கியிருந்த விடுதிக்குப் போகச் சொன்னேன்.  நானும் மனைவியும் மகனும் அடுத்த நிலையத்தில் இறங்கி உணவருந்தி விட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு விடுதிக்குச் சென்றோம். யோசித்துப் பார்த்தபோது  இது போன்று நம் சொந்த கிராமத்தில் கூட இயல்பாய் பாதுகாப்பாய் உணர்ந்திட முடியாது என்பதை உணர்ந்தேன். அப்போது தான் லீ என்கிற மாமனிதரின் மன உறுதி மிக்க தலைமையின் மகத்துவம் புரிந்தது. அடுத்த நாள் சிங்கப்பூர் மியூசியம் சென்று அவரின் நினைவாக One Man's view of the World என்ற அவரின் நூலை 2500 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.

அதில் அவர்  ஜெர்மனியின் முன்னாள் அதிபரும் அவரின் நண்பருமான ஹெர்மட் ஸ்மித்துடனான உரையாடலில், ஸ்மித் ‘உங்களின் பதவிக்காலத்தில் நீங்கள் உண்மையிலேயே பெருமையுடன் நினைவு கொள்ளும் உயர் நிகழ்வுகள் ஏதும் உண்டா’ என்ற கேட்கிறார்.

'ஆம், அது நான் அனைவரையும் சமம் என உணரச் செய்தது. நான் இதைச் சீன நகரமாக ஆக்கவில்லை. சீன மொழியைப் பிரதான மொழியாக்க வேண்டும் என வலியுறுத்திய சீனப் பற்றாளர்களைத் தடுத்து, அனைவருக்கும் பொது மொழியாக ஆங்கிலத்தை வைத்துக்கொள்வோம் என்றேன். அது மக்களை ஒன்றுபடுத்தியது. இனம், மொழி, மதம் என்கிற எதனாலும் மக்களை நாங்கள் வேறு படுத்தவில்லை. ஆங்கிலத்தை முதல் மொழியாக பள்ளியில் போதித்து வருகிறோம்’ எனக் கூறுகிறார்.

இந்த வரிகளைப் படித்த போது, இந்திய அரசியல் நிர்ணய சபையில், ஆட்சி மொழி எது என்கிற ஓட்டெடுப்பில் ஆங்கிலமும் இந்தியும் சமமான ஓட்டுகள் பெற்று, தலைவரின் முடிவு ஓட்டு ஒன்றால் மட்டுமே இந்தி ஆட்சி மொழி ஆனதை எண்ணிக்கொண்டேன். ஆங்கிலம் ஆட்சி மொழியாகியிருந்தால்,  நம் நாட்டின் வேறுபாட்டுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று தொலைந்து போய் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கலாமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. தஞ்சை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் சென்றவர்கள் தாங்களும் உயர்ந்து தங்கள் ஊரிலிருந்த சொந்த பந்தங்களையும் வாழ வைத்தனர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் லீ என்ற உன்னதமான தலைவருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

லீ அவர்களே தமிழகத்தில் வந்து மீண்டும் தாங்கள் பிறந்து எங்களையும் வழி நடத்துங்கள்!!

ஏப்ரல், 2015.