சிறப்புக்கட்டுரைகள்

மிதித்து வாங்கவேண்டும்!

உலகம் உன்னுடையது

இரா. கௌதமன்

சமீபத்தில் தென் இந்தியாவின் சிறந்த விற்பனையாளருக்கான விருதை ஒரு ஊடக நிறுவனத்திலிருந்து பெற்றிருக்கும் மகேந்திரா முல்லத் ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உரிமையாளர். வேளச்சேரியில் உள்ள அவரது ஷோரூமில் அந்திமழைக்காக அவரை சந்தித்தோம். வித விதமான வண்ண மயமான சைக்கிள்களுக்கு நடுவே அமர்ந்து உரையாடத் தொடங்கினார் மகேந்திரா முல்லத்.

“விவேகானந்தா கல்லூரியில் தாவரவியல் படித்தேன். சொந்த ஊர் மூணாறு. அதனால் இயற்கை மற்றும் பசுமையான இடங்கள் மீது தனி ஈர்ப்பு. கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் சேர்ந்து பத்திரிகை நடத்திய அனுபவமும் உண்டு. மயிலை செய்திகள் ஆரம்பித்தது நாங்கள் தான். கல்லூரிக்குப் பிறகு டிஐ சைக்கிள்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன்.

நான்கு வருட வேலைக்குப் பிறகு கேரளாவிற்கு மாற்றல் வந்தது. என் மனைவிக்கு சென்னையை விட்டுக் கிளம்ப மனமில்லை. மீண்டும் வேலை தேட வேண்டும். அப்போது டிஐ சைக்கிள்ஸ் டீலர் ஒருவருடன் சேர்ந்து நாமே தனியாக விற்பனைத் தொழில் தொடங்கினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினோம்.

முதலில் அண்ணா நகரில் 500 சதுர அடியில் மிகச் சிறிய அளவில் 2003 -ல் தொடங்கப்பட்டது ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் நிறுவனம்.

சென்னையில் சைக்கிள் வாங்க வேண்டுமென்றால் பிராட்வே செல்வார்கள். அங்கே நம்முன்னே சைக்கிளை அசெம்பிள் செய்து தருவார்கள். இதுதான் வழக்கமாக இருந்தது. நாங்கள் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட நினைத்தோம். துணி மற்றும் நகைகளுக்கான கடை மாதிரி ஏசி ஷோரூம் வைத்தோம். நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்து 2004 ல் வேளச்சேரி ஷோரூம் தொடங்கினோம். அதற்கடுத்து வியாபாரம் கைவரத் தொடங்கியதும் தாம்பரம், அசோக் நகர் பிறகு கேரளா, ஆந்திரா என்று தற்போது 17 கடைகள் உள்ளது.

நாம் எப்போதுமே மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். இந்தியாவில் சைக்கிள் வைத்திருப்பது என்பது ஏழ்மையின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுப்புற சூழலை மனதில் வைத்தும் சைக்கிள் உபயோகிப்பவர்கள் அதிகம். அதுவுமில்லாமல் சைக்கிள் ஸ்போர்ட்ஸ் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடரும் என்று நம்பினோம்.

எங்களுடைய போட்டியாளராக இருப்பது இன்னொரு சைக்கிள் நிறுவனம் கிடையாது. மின்னணு சாதனங்கள்தான். குழந்தைகளுக்கு 15 வயதுவரை சைக்கிள் மீது மிகப் பெரிய மோகம் இருக்கும். இன்றைக்கு அந்த இடத்தை மொபைல், வீடியோ கேம்ஸ், டி.வி, ஐ பேட் என்று எலக்ட்ரானிக் சாதனங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. குழந்தைகள் கவனத்தை இதிலிருந்து சைக்கிளின் பக்கம் எப்படி திருப்புவது என்றுதான் யோசிக்கிறோம்.

ஆரம்ப காலகட்டங்களில் சாதாரண வகை சைக்கிள்களின் வியாபாரம்தான் அதிகமாக இருந்தது. இப்போது ஸ்போர்ட்ஸ் சைக்கிள்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உத்தேசித்துதான் வேளச்சேரியில் ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் எலைட் என்று தொடங்கினோம். அடுத்து அண்ணா நகரில் இதேபோன்று 4000

சதுர அடியில் இன்னும் பெரிய அளவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் முப்பதாயிரத்தில் தொடங்கி நாலரை லட்சம் வரையில் இருக்கிறது.

முதல் சில வருடங்கள் டிஐ சைக்கிள்களை மட்டுமே விற்று வந்தோம். பிறகு வாடிக்கையாளர்களின் தேவை பல வகைப்பட்டதாக இருந்ததால் அனைத்து கம்பெனி சைக்கிள்களையும் விற்கத் தொடங்கினோம். இந்தியாவில் சைக்கிள் விற்பனையில் பெங்களூரு தான் முன்னிலை வகிக்கிறது. சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒன்றரை கோடி சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன.

சைக்கிள் விற்பதோடு நின்றுவிடாமல் வாடிக்கையாளர்களை எப்படி இதில் ஈடுபடுத்துவது என்று யோசித்து சைக்கிளிங் கிளப் தொடங்கினோம். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் நீண்ட தூர சைக்கிள் பயணங்களுக்காக திட்டமிட்டு சரியாக செய்து வருகிறோம். 50 கிலோ மீட்டர், 100 கிலோ மீட்டர் என்று ஆரம்பித்த பயணம், சென்ற முறை 30 பேர் கொண்ட குழு 1000 கிலோ மீட்டரை 60 மணி நேரத்தில் கடந்தது வரை வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற சைக்கிளிங் கிளப்புகளுடனும் இணைந்தும் செயல்படுகிறோம்.

5 வருடங்களுக்கு முன்பு வரை எங்களுடைய வாடிக்கையாளர்களாக நாங்கள் வகைப்படுத்தியிருந்தது 15 வயதுக்கு குறைவானர்கள்தான். ஆனால் இப்போது நாங்கள் 25 லிருந்து 35 வயதுக்குள்ளானவர்களைத் தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களாக பார்க்கிறோம். கல்லூரியில் படிக்கும் வரை உடலை பேணி பாதுகாத்துவிட்டு வேலைக்கு சேர்ந்த ஐந்தே வருடத்தில் உருவம் மாறி விடுகிறார்கள். அவர்களுக்கு உடற்பயிற்சியை  உற்சாகத்துடன் செய்ய வைக்க சைக்கிள் உதவுகிறது. இன்றைய தேதியில் அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான ஐடி கம்பெனிகளில் இதை வரவேற்கவும் செய்கிறார்கள்.

பல இடங்களில் இதற்கு தடையாக இருப்பது சாலைகளும், வாகன ஓட்டிகளும். முதலில் வாகன ஓட்டிகளின் மனோபாவம் மாற வேண்டும். சைக்கிள் ஓட்டுபவருக்கும் சாலையில் இடமுண்டு என்று அவர்கள் உணர்ந்தால் பெரிய மாற்றம் வரும். அடுத்ததாக அரசும் இதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.

சாலைகளில் மேலை நாடுகளைப் போல தனியாக சைக்கிளுக்கான பாதை அமைத்தால் சைக்கிள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். காற்று மாசுபடுதல், எரி பொருள் சிக்கனத்தைப் பற்றி யோசிக்கும் அரசாங்கம் இதற்கான தீர்வாக சைக்கிள் இருப்பதை கவனிக்க வேண்டும்.

கடந்த வருடத்திலிருந்து ஆன் லைனில் சைக்கிள் விற்பனையை தொடங்கியுள்ளோம். காலத்திற்கேற்ப எங்களையும் மாற்றிக் கொள்வதற்கான தேவைக்காக மட்டுமே இது.

பொதுவாக சைக்கிளை ஆன் லைனில் வாங்க முடியாது. சைக்கிள் வாங்க முடிவெடுப்பவர்கள் கண்டிப்பாக சைக்கிளை ஓட்டிப்பார்க்க வேண்டும். பயோ சைசிங் என்ற டெக்னாலஜி உலகம் முழுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாங்கள் தான் இந்த முறையை முதன் முதலில் கொண்டு வந்தோம். இதன்படி ஒருவரின் உடல் எடை, உயரம் மற்றும் கை, கால்களின் அளவுக்கு ஏற்ப சைக்கிளின் உயரம், ஹேண்டில் பாரின் நீளம் போன்றவை இருக்க வேண்டும். இல்லை எனில் கழுத்து, முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த அளவிற்கேற்ப அவர்களுக்கான சைக்கிளை பரிந்துரைப்பதோடு அதன் அளவுகளையும் இங்கேயே மாற்றியும் தருகிறோம்.

எங்கள் வியாபாரம் உடல் நலம் மற்றும் இயற்கையை பாதுகாப்பது என்ற சமூக நோக்கோடும் இருப்பது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது” என்கிறார் மகேந்திரா.

ஏப்ரல், 2016.