சிறப்புக்கட்டுரைகள்

மிகச் சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான்!

மதிமலர்

பாடகர் டி.எம். சவுந்தரராஜனுடன் தொடர்ந்து 13 ஆண்டுகள் பயணித்து ‘இமயத்துடன்' என்ற பெயரில் அவரது வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும் ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் விஜயராஜ்.

தொலைக்காட்சியில் 150 வார தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பும் அளவுக்கு நீளமான இந்த படத்தை டி.எம்.எஸ் உயிருடன் இருந்தபோதே முழுவதும் பார்த்து ஆமோதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் பழகிய, பணிபுரிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் என பலருடனும் டி.எம்.எஸ் சந்தித்து உரையாடுகிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் இளையராஜா, ரஹ்மான் வரை பலரை டி.எம்.எஸ் சந்தித்துப் பேசுகிறார். பாடகிகள் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரும் அவருடன் பேசும் காட்சிகளும் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் டி.எம்.எஸ் பற்றிக்கூறும் காட்சிகளுமாக இப்படம் மிகச்சுவாரசியமாக, இனிமையான பாடல்களுடன் அமைந்திருக்கிறது. அதன் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜயராஜுடன் அவரது அனுபவம் பற்றிப் பேசினோம்.

‘‘ 1946 - ல் கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டூடியோவில்தான் டி.எம்.எஸ். முதல் முதலில் தன் பாடல் வாழ்வைத் தொடங்கினார். அதே இடத்தில் டி.எம்.எஸ். தன் நினைவலைகளைப் பேசவைக்க ஆசைப்பட்டேன். அதன் உரிமையாளரிடம் அதற்கான அனுமதி பெறுவது பெரும் சிரமமாக இருந்தது. மாதக்கணக்கில் அலைந்தபின்னர் அனுமதி தந்தார்கள். கோவையில் படப்பிடிப்பு நடப்பதால் அங்கே இருக்கும் பட்சிராஜா ஸ்டூடியோவிலும் டி.எம்.எஸ் அவர்களை வைத்துப் படம் எடுத்துவிடலாமே என்று நினைத்து அதன் உரிமையாளரான சிவஞானம் செட்டியார் அவர்களைச் சந்தித்தேன். அவர் பேசவே இல்லை. சைகையிலே அடுத்த வாரம் வாருங்கள் பார்க்கலாம் என்றார். என்னடா இவர் இப்படி மதிக்கவே மறுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். வரும்போது பார்த்தேன், பட்சிராஜா ஸ்டூடியோவின் கழுகு சின்னம் உடைந்து கிடந்தது. எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்தவாரம் மீண்டும் அவநம்பிக்கையுடன் பட்சிராஜா ஸ்டூடியோ சென்றேன். மீண்டும் அதே இடம். கழுகு சின்னம் மட்டும்  வைக்கோல் கொண்டு மூடப்பட்டு இருந்தது. செட்டியார் வந்தார். என்னை உட்காருமாறு சைகை காட்டினார். கழுகு சின்னத்தை மூடி இருந்த வைக்கோலை அப்புறப்படுத்துமாறு சொன்னார்.  கழுகு சின்னம் புதிதாக நின்றது! ஒரே வாரத்தில் பதினைந்தாயிரம் செலவழித்து அந்த சின்னத்தை செப்பனிட்டிருந்தார் அவர். அவரது முகத்தைப் பார்த்தேன். பெருமையும் குறும்பும் தெரிந்தது. ‘‘ எப்படியும் நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். படப்பிடிப்பின்போது எல்லோருக்கும் நம் செலவில்தான் சாப்பாடு'' என்று சொல்லிவிட்டார் அந்தப் பெரிய மனிதர். பட்சி ராஜா ஸ்டூடியோவுக்கு டி.எம்.எஸ். வந்தபோது அவரது கால் காரில் இருந்து தரையில் படவே விடவில்லை. அப்படித் தாங்கினார்கள்... 

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் டி.எம்.எஸ் வரும்போது அவருடன் டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் அவர்களை அழைக்கலாம் என விரும்பினோம். அவர்களின் தந்தையார் ரத்னம் அவர்கள் டி.எம்.எஸ். அவர்களின் பள்ளித்தோழர். அனிதா ரத்னம் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். விவரத்தை விளக்கினேன். கோவைக்கு விமான டிக்கெட், தங்க நல்ல விடுதி எல்லாம் ஏற்பாடு செய்துவிடுவீர்களா? என்றார். எனக்கு வயிற்றைக் கலக்கியது. அவ்வளவு பட்ஜெட் இல்லையே என்று மனசு கடமுடா என்றது.  ‘வேண்டாம் விஜயராஜ்.. இப்படியே எழுந்து ஓடிவிடு' என்று எனக்குள் யாரோ கட்டளையிட்டார்கள். நான் அந்த அம்மையார் முகத்தைப் பார்த்தேன். அவரோ தாமரை  போல் மலர்ச்சியாக இருந்தார். நான் மெல்ல எழ முயன்றேன். அவர் ‘எங்கே போகிறீர்கள்.. இருங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார். அப்புறம் சொன்னார்: ‘‘ நீங்கள் ஒன்றும் செலவழிக்க வேண்டாம்.. எல்லாம் என் பொறுப்பு..'' . காபி அமுதமாக மாறிவிட்டது.

அனிதா ரத்னம் சொன்ன நேரத்துக்கு கோவை வந்தார்... டி.எம்.எஸ். உடன் உரையாடினார். சென்ட்ரல் ஸ்டூடியோ வாயிலில் நுழைய அவர்கள் நடந்து எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடம். ‘‘ நாம் இப்போது வாயிலில் இருந்து ஸ்டூடியோவுக்குள் இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டோம். எனக்கு அப்போது ஆறு மாதங்கள் ஆனது. வாய்ப்புக்காக வாசலிலேயே அவ்வளவு நாள் காத்திருந்தேன். தியாகராஜ பாகவதர் போல பாடும் சாயல் இருந்ததால் அவர் முன்னர் பாடிய ராதை உனக்குக் கோபம் ஆகாதடி என்ற பாடலையே ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்று பாட வாய்ப்பு கிடைத்தது'' என்றார் அவர்.  அது நடிகர் நரசிம்மபாரதி நடித்த கிருஷ்ண விஜயம் படம். அப்படத்துக்கு இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு. அந்த படம் 1950ல்தான் வெளியானது. இந்தபாடலில்  நரசிம்ம பாரதி ஒரே நேரத்தில் பல கிருஷ்ணர்களாகத் தோன்றுவார். சென்ட்ரல் ஸ்டூடியோவின் பாழடைந்துபோன ஒலிப்பதிவுக்கூடத்தில், தான் முதல் பாடல் பாடிய அதே அறையில் நின்று அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக்காட்டியது மிகப்பெரிய நிகழ்வு. 

பாகப்பிரிவினை படத்துக்கான வெற்றிவிழா.  டி.எம்.எஸ் அவர்களும் மேடையில் உள்ளார். அவரை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்கிறார்கள். பாடுகிறார். எல்லோருக்கும் விருதுப்பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. அதில் நடித்த மாட்டுக்குக்கூட வழங்கப்படுகிறது. பாடகருக்கு இல்லை. அப்போது பாடகர்களுக்கு படவெற்றிவிழாவில் விருது வழங்குவது வழக்கம் இல்லை. இறுதியாக தேசிய கீதம் பாட டி.எம்.எஸ்&ஸை அழைத்தார்கள்.  ‘நான் என்ன சும்மா இந்தப் பாடல்களைப் பாடவா வந்தேன்..?' என அவருக்குள் கோபம் பொங்கியது. தேசிய கீதம் முடிந்தபின், எல்லோரும் ஒரு நிமிடம் நில்லுங்கள் என்றவர்.. இனி நான் பாடப்போவதில்லை.. ஊருக்குப் போகிறேன் என்றார். என்ன, என்ன... என்று எல்லாரும் அதிர்ந்தார்கள்... மாட்டுக்குக் கூட விருது கொடுக்கிறீர்கள்.. பாடகனுக்கு கிடையாதா என்று மேடையிலேயே குமுறினார்... தயாரிப்பாளர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதன் பிறகுதான் பாடகர்களுக்கு விருதுகொடுக்கும் முறை ஏற்பட்டது. எஸ்.பி.பி.யுடன் சந்தித்துப் பேசுகையில் டி.எம்.எஸ்.  இந்தத் தகவலைச் சொல்லி, ‘‘நீங்கள் எல்லாம் இன்று பல ஷீல்டு வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அது நான் சண்டை போட்டதால் கிடைத்ததுதான்,'' என்றார். டி.எம்.எஸ்ஸின் வாய்ப்புகள் குறைந்தபோது அதை நிரப்பிய ஆண்குரல் எஸ்.பி.பியுடையது. இருவரும் உரையாடும் நிகழ்ச்சி மிக அழகாக அமைந்தது. டி.எம்.எஸ்சுக்கு பாலசுப்ரமணியன் என்றொரு மகன் பிறந்து இறந்துவிட்டான். அந்த பெயரில் ஓர் அறக்கட்டளை வைத்து ஓசைப்படாமல் ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் தான தருமங்களுக்காக டி.எம்.எஸ் கொடுத்துவந்தார். அந்தத் தகவலை எஸ்.பி.பி.யுடன் முதல்முதலாகப் பகிர்ந்துகொண்டார். எஸ்.பி.பி நெகிழ்ச்சியுடன் ‘ அந்த பாலசுப்ரமணியன் இடத்தில் இந்த பாலசுப்ரமணியன் இருக்கிறேன்' என்று சொல்லி அவர் கரங்களைப் பற்றிக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்காக கங்கை அமரன் &டிஎம்எஸ் சந்திப்பு நடந்தபோது ஓர் அரிய தகவலை கங்கை அமரன் கூறினார். இளையராஜா இசையில் தீபம் (பின்னாளில் இதே பெயரில் வெளியான படம் அல்ல) என்ற படத்துக்காக 1968&லேயே டி.எம்.எஸ் ஒரு பாட்டுப் பாடி இருக்கிறார். அப்போது பாவலர் பிரதர்ஸ் என்றபெயரில் அவர்கள் இசை அமைத்தனர். ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு' எனத்தொடங்கும் அப்பாடலை எழுதியவர் கங்கை அமரன். அந்த படம் வெளிவரவில்லை. அந்த பாடலை நெடுநாள் தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்கவே இல்லை. கடைசியில் இசைத்தட்டு சேகரிப்பாளர் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன் அவர்கள் இல்லத்தில் இருந்தபோது இளையராஜா பாப்பிசைப் பாடல்கள் என ஒரு இசைத்தட்டு இருந்தது. அதன் மேல் வரிசையாய் எழுதப்பட்டப் பாடல்களில் கடைசியாக அந்தப் பாட்டைக் கண்டடைந்தேன். அந்தப் பாட்டையும் இந்த ஆவணப்படத்தில் சேர்த்தேன்.

டி.எம்.எஸ்,  தான் பாடியதில் மிகவும் புகழ்பெற்ற பக்திப்பாடலான உள்ளம் உருகுதைய்யா என்ற பாடலைப் பற்றி பின்வருமாறு பல நேர்காணல்களில் சொல்லி உள்ளார்: ‘‘பழனிக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு முஸ்லிம் பையன் உள்ளம் உருகுதடா என்று பாடிகொண்டிருந்தான். அவனிடம் என்ன பாட்டு என்றேன். ஒரு அம்மா மலைமேல் பாடிக்கொண்டிருந்தார் என்றான். நான் உடனே ஆர்மோனியத்தை எடுத்து உள்ளம் உருகுதையா... என்று அந்த வரியை சற்று மாற்றி இசையமைத்துப் பாடினேன்.''

ஆனால் உள்ளம் உருகுதடா என்கிற டி.எம்.எஸ் கேட்ட பாடல் வரிக்கு ஒரு வரலாறு உண்டு. அது எனக்காக சென்னை காளிகாம்பாள் கோவிலில் காத்துக்கொண்டிருந்திருக்கிறது. ஒரு நண்பரின் அழைப்பின் பேரில் அங்கே சென்றிருந்தபோது, அங்குள்ள முருகன் சன்னதியில் வேலுக்குப் பக்கத் தில் ஒரு கல்வெட்டில் உள்ளம் உருகுதடா என்ற பாடல் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. பாடலைப் பாடியது ஆண்டவன் பிச்சை என்றிருந்தது. வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 2004&ல் ஒரு நாள் ஒரு பத்திரிகையில் ஆண்டவன் பிச்சை பற்றி முரளி சுவாமிகள் எழுதிருந்த கட்டுரை என் கண்ணில் பட்டது. ஆண்டவன் பிச்சை ஒரு பெண் கவிஞர். அவரது படமும் வெளியாகி இருந்தது. உடனே சென்னைக்கு ஓடி வந்து முரளி சுவாமிகளை சந்தித்துக் கேட்டேன். அவர் அவரது வரலாற்றைச் சொன்னதுடன் அவரது பேரன் எண்ணும் கொடுத்தார். அங்கே போய் அவரது புகைப்படமும் பெற்றேன். மயிலாப்பூரில் வாழ்ந்துவந்த மரகதம் என்கிற பெண்ணின் உடலில் திருச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்கிற யோகியின் ஆன்மா புகுந்துகொண்டு அவர்  இறைப்பாடல்களை ஆண்டவன் பிச்சை என்ற பெயரில் பாடத்தொடங்கினாராம். உள்ளம் உருகுதய்யா பாடலுக்குப் பின்னால் இவ்வளவு விஷயம் இருப்பதை டி.எம்.எஸ்.ஸிடம் சொன்னபோது அவர் அப்படியே உருகிவிட்டார்!

இளையராஜாவுடன் டி.எம்.எஸ். அவர்களுக்குப் பிணக்கு ஏற்பட்டது இலங்கைப் பத்திரிகையான வீரகேசரியில் வெளியான ஒரு செய்தியால்தான். அண்ணே அண்ணே சிப்பாயண்ணே என்ற பாடல் தெரியுமல்லவா? அதில் அண்ணே என்று வருவது தவளை கத்துவது போல் இருக்கிறது என்று டி.எம்.எஸ் சொல்லிவிட்டார். அவர் எப்போதும் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடுகிறவர் அல்லவா? பதிலுக்கு இளையராஜா, அவர் என்ன பெரிய பாடகரா.. அவருக்கு பாவத்துடன் பாடவே தெரியாது என்று பதிலுக்கு பொங்கிவிட்டார். அதையும் தாண்டி வானொலி அறிவிப்பாளர் அப்துல்ஹமீது, இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு( தர்மயுத்தம்) பாடலையும் அடுத் ததாக அதே எம்.எஸ்.வி இசையில் தங்கை படத்தில் தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே என்ற பாடலையும் ஒலிபரப்பி டி.எம்.எஸ்ஸுக்கு பாவத்துடன் பாட வருமா வராதா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னது இன்னும் நினைவில் அவரது குரலிலேயே என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்த பலப்பல சிண்டு முடிதல்களால் இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. இந்த நிகழ்வுக்காக நான் இவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கத்திட்டமிட்டேன். உன்னால் முடியவே முடியாது என்றார்கள். இளையராஜாவை அணுகிக் கேட்டபோது பார்ப்போம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஒரு நாள் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையும்போது வழியில் பார்த்துக் கேட்டேன். இங்கேயே நில்லுய்யா.. வர்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். காலையில் போனவர் மாலை ஏழுமணிக்குத்தான் வெளியே வந்தார். அதுவரைக்கும் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வெளியே வந்தவரிடம் இங்கேயே நிற்கிறார் என்று சொன்னார்கள். என்னைப் பார்த்தவர், சரிய்யா... சந்திப்போம் என்றார். அவருக்கு எப்போ ப்ரியோ அப்போ பார்க்கலாம் என்றார் நெகிழ்வுடன். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அந்த சமயம் பார்த்து டி.எம்.எஸ்ஸுக்கு கண் அறுவை சிகிச்சை.. எனவே சில நாட்கள் காத்திருக்கவேண்டியிருந்தது. அந்த சில நாட்களும் சில ஆண்டுகள் போல் இருந்தன. பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சந்திக்க வந்தேன். மிக உருக்கமான சந்திப்பாக அது அமைந்தது. நான் உங்களை ஒதுக்கலைண்ணா.. புதுக்குரலாக வேணும் என்றார்கள். அதற்காக புதிய குரல்களை அறிமுகப்படுத்தவேண்டியதாயிற்று என்று பல விசயங்களை இளையராஜா சொன்னார். நான் கண்டதிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் உங்களுடையதுதான் என்றார் ராஜா. ஒளிப்பதிவு முடிந்ததும் எங்களை வெளியே அனுப்பி விட்டு அவர்கள் உரையாடல் தனிமையில் தொடர்ந்தது. 

இதேபோல்தான் டி.ராஜேந்தருடனான உறவிலும் டி.எம்.எஸ்ஸுக்கு சிக்கல் ஏற்பட்டது. நானொரு ராசியில்லா ராஜா... பாடலைப் பாடியபிறகுதான் அவருக்கு பாட வாய்ப்புகள் இல்லை என்பது பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. இருவரும் நம் நிகழ்ச்சிக்காக சந்தித்தது பல்லாண்டு இடைவெளியில் நிகழ்ந்தது. டி.ஆர். தன் பாணியிலேயே டி.எம். எஸ்சை எதிர்கொண்டார். நீங்கள் பாடிய அந்தப் பாடலுக்குப் பிறகு மேலும் பல பாடல்கள் என் இசையிலேயே பாடினீர்களே.. நானும்கூட அந்த படத்துக்குப் பின்னர் எவ்வளவு படங்களை எடுத்துவிட்டேன்... என்று சொல்லிக்கொண்டே போக, ஒருகட்டத்தில் டி.எம்.எஸ் எழுந்து டி.ஆருக்கு திடீரென முத்தம் கொடுத்தார்.

அவர் சுமார் பத்தாயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கிறார். பல படங்களின் காட்சிகள் தமிழகத்தில் இல்லை. மலேசியாவில் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவற்றைத் தேடிப்பிடித்து வாங்கி இமயத்துடன் தொடரில் பயன்படுத்தி இருக்கிறேன். அந்நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என் நன்றிக்குரியவர்.

டி.எம்.எஸ். அவர்களுக்கு இளமையில் ஒரு காதல் இருந்திருக்கிறது. அதையும் இப்படத்தில் அவர் நினைவுகூர்கிறார். அப்போது மதுரையில் பஜனைகளில் பாடிக்கொண்டிக்கிறார் அவர். காதலித்த பெண்ணை, பெண் கேட்டுச் சென்றபோது அவரது குடும்பத்தில் இவரது வறுமை நிலையைச் சுட்டிக்காட்டி மறுத்துவிட்டார்கள். அந்த காதல் அப்போதே முறிந்துவிட்டது. அதன் பின்னர் தான் அவர் கோவை செண்ட்ரல் ஸ்டூடியோவுக்கு வாய்ப்பு தேடி நகர்கிறார். எப்போது காதல் பாடல்கள் பாடினாலும் அந்த முதல் காதலியின் முகம்தான் என் மனதில் நிற்கும் என்று அவர் கூறினார். அவரது இளமைக்கால நினைவுகளை அவரது மகள்வயிற்றுப் பேரன் சுந்தரை நடிக்க வைத்து எடுத்திருக்கிறோம். டி.எம்.எஸ்ஸின் தந்தையாக பத்திரிகையாளர் மேஜர் தாசன் நடித்துக்கொடுத்திருக்கிறார்.''  சொல்லி முடித்தார் விஜயராஜ். பதின்மூன்று ஆண்டு உழைப்பு அவரது சொற்களில் தெரிந்தது.

ஏப்ரல், 2018.