சிறப்புக்கட்டுரைகள்

மாவோ பேத்தியிடம் 4000 கோடி

செழியன்

சீனாவில் மாவோ உண்டாக்கிய கம்யூனிசப் புரட்சி பல்வேறு மாற்றங்களைப் பார்த்துவிட்டது. இன்று சீனாவை கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு கொண்டிருந்தாலும் அதன் ஆட்சிமுறை முதலாளித்துவ முறை போல ஆகிவிட்டது. ஆயினும்  இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான மக்களை வறுமையின் பிடியில் இருந்து அவர்கள் மீட்டுள்ளனர். அமெரிக்க பொருளாதாரமே கூட சீன முதலீடுகளை நம்பியிருக்கும் காலம் இது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தகத்தில் நாம் அவர் களுக்குச் செய்யும் ஏற்றுமதியை விட அவர்களிடமிருந்து நாம் செய்யும் இறக்குமதி மிக அதிகமாக இருப்பதாக பலர் இங்கே வருத்தப்படுவதைக் காண்கிறோம். ரஷ்யாவில்  சோஷலிசம் வீழ்ச்சி அடைந்த பின்னர் காலமாற்றத்துக்கு ஏற்ப சீனாவும் தன் கதவுகளைத் திறந்துவிட்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் அங்குள்ள நியூ பார்ச்சூன் பத்திரிகை சீனப் பணக்காரர்கள் 500 பேர் பட்டியலை வெளியிட்டது. அதில் ஆச்சரியமூட்டிய ஒரு பெயர் காங் டாங்மெய். இவர் மாவோவின் இரண்டாவது மனைவி வழி வந்த பேத்தி. பொதுவுடைமை  தத்துவ ஆசான் மாவோவின் பேத்தி இன்று நாலாயிரம் கோடிக்கு அதிபதி. சீனப் பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கு இடம் 242 ஆக உள்ளது. இது பற்றி பலரிடம் கருத்துக் கேட்டு சீன கம்யூனிசம், அதன் அரசியலை உணர முயன்றோம்.

இரா.ஜவஹர், பத்திரிகையாளர்

முதலில் இந்த செய்தி உண்மைதானா என உறுதி செய்ய வேண்டும். உண்மையாக இருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இன்றைய சீனா ஒரு சோஷலிச நாடு என்று நான் கருதவில்லை. அது ஒரு முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்பது எனது கருத்து. எனவே அங்கே கோடீஸ்வரர்கள், பெரு முதலாளிகள் இருப்பதிலோ கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வாரிசுகளே கோடீஸ்வரர்களாக இருப்பதிலோ ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்படியானால் கம்யூனிசம் அவ்வளவுதானா?

செத்துவிட்டதா என்றால் இல்லை; சோஷலிச நாடாக இருந்து முதலாளித்துவ நாடாக வீழ்ச்சி அடைந்துள்ள ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் ஸ்டாலினும் லெனினும் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாளித்துவத்தின் உச்சம் என்று புகழப்பட்ட அமெரிக்காவில் மாபெரும் நெருக்கடி ஏற்பட்டு மீளமுடியாத சுழலில் சிக்கிய மக்கள் வறுமையில் வாடுவதை கண்ணால் பார்க்கிறோம்.

எனவே ஒரு புதிய வகையான சோஷலிசமும் கம்யூனிசமுமே இதற்குத் தீர்வாக அமையும். விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும்.

டி.எஸ்.எஸ்.மணியன், ஊடகவியலாளர்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்பெல்லாம் முழுநேர தொழில்முறை புரட்சிக்காரர்கள் இருந்தனர். ப்ரொபெஷனல் ரெவல்யூஷனரீஸ். இப்படி பிஆர் ஆக இருப்பது பெரிய கௌரவம். அவர்களின் செலவுக்கு மாதம் தோறும்  கட்சி பணம் தரும். ஆனால் இன்று சிபிஐ, சிபிஎம், எம்.எல். குழுக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தற்போதைய அரசியல் போக்கில் சிக்கி ஊழலில் மாட்டி உள்ளனர். அவர்கள் தங்களைப் ஃபுல்டைமர் என்றுசொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் புரட்சி செய்யும் வேலை எதுவும் செய்வதில்லை. சும்மா ஆட்களைச் சுற்றிப் பார்த்து பேசிவருகிறார்கள். இவர்கள் அல்லாது தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அது மிகவும் பிரச்னையாகி நடவடிக்கை எடுக்கும் நிலைமையும் உருவானது உண்டு. சீனாவைப் பொருத்தவரை மாவோவுக்கு நான்கு மனைவிகள். அவர்களின் மூலமாகப் பிறந்த பேத்திகள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சொல்லும் 4000 கோடிக்கு அதிபதியான மாவோவின் பேத்தி சுயமாக தொழில் செய்து சம்பாதித்திருப்பார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாறிவரும் கொள்கை இது போன்ற கோடீஸ்வரர்களை அனுமதிக்கிறது.

கோவை ஈஸ்வரன், எழுத்தாளர்

சீனாவில், ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு- ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், 1949-ல் சோசலிசப் பொருளாதாரத்துக்கான பலமான அடித்தளத்தை, மாவோவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் இணைந்து நிறுவி அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது. சீன சமுதாயத்திலும் அரசமைப்பிலும் முதலாளித்துவம் மீண்டும் தலையெடுத்துவிடாமல் செய்ய, மகத்தான கலாச்சாரப் புரட்சியை மாவோ நடத்தினார். அவரின் மறைவுக்குப் பிறகு சீனாவில் ஆட்சிக்கு வந்த டெங்-சியோ-பிங் கும்பல், சோஷலிசப் பாதையில் சீனத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, ‘பூனை கருப்பாக இருந்தால் என்ன, வெள்ளையாக இருந்தால் என்ன, எலியைப் பிடித்தால் சரி’ என்று கூறி, சந்தை சோஷலிசம் எனும் பெயரில், முதலாளித்துவ மீட்சிக்கு வழிவகுத்தனர். இன்றைய சீனம், சோஷலிச நாடல்ல, முதலாளித்துவ நாடுதான். எனவே, அங்குள்ள இன்றைய தலைமுறையினர், ‘லாபமே நோக்கம், சொத்துக் குவிப்பதே வாழ்க்கை’ என்ற முதலாளித்துவ அலையில் அடித்துச் செல்லப்படுவது தவிர்க்க முடியாததே. ஒருவேளை, மாவோவின் பெயர்த்தியும் இந்த அலையிலே சிக்கியிருக்கலாம்.

அல்லது இச்செய்தி  ஏகாபத்தியவாதிகளும் அவர்களின் இந்திய முகவர்களும் செய்துவரும் அவதூறாகவும் இருக்கலாம்.

அப்பா கம்யூனிஸ்டாக இருப்பதால் பிள்ளையோ பேத்தியோ கம்யூனிஸ்டாகத் தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அப்படிப் பார்ப்பது நிலவுடைமைச் சிந்தனை. மாவோவின் பேத்தியைப் பற்றி குறிப்பிடும் ஊடகங்கள் இன்னொரு விஷயத்தை மறந்துவிடுகின்றன. லியு ஷாவோ சி என்பவர் மாவோவின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஆனால் மாவோ தலைமையேற்று நடத்திய பண்பாட்டுப் புரட்சிக்கு எதிரானவராக அவர் இருந்தார். அவருடைய பேரன் இன்றைக்கு சீனாவில் மாவோவின் கருத்துகளைத் தூக்கிப் பிடிப்பவராக இருக்கிறார். இதுபோன்ற தகவல்களை வெளியிடாத ஊடகங்கள் மாவோயிசத்துக்கு எதிராக கருத்துகளைப் பரப்புவதுபோல்தான் தோன்றுகிறது.

ஜூலை, 2013.