விஜய்சேதுபதி 
சிறப்புக்கட்டுரைகள்

மாற்றத்திற்கான கலைஞன்!

அந்திமழை இளங்கோவன்

‘‘நவம்பர் 6, 2000 முதல் அக்டோபர் 3, 2003 வரை நான் துபாயில் வாழ்ந்தேன். அங்கே தமிழகத்தைச் சார்ந்த நண்பர்களுடன் தங்கி இருந்தேன். துபாயை மறக்க முடியாது. என் கனவுகளுக்கு இறக்கை கொடுத்தது துபாய்தான்.

சினிமாவில் எதுவுமே எளிதல்ல. தயாரிப்பு நிறுவனங்களில் என் புகைப்படத்தை விட்டுச் செல்வேன். பல நேரங்களில் துணை இயக்குநர்கள் கூட என் புகைப்படத்தைச் சீண்டுவதில்லை. ஒரு படத்தில் நான் ஜூனியர் ஆர்டிஸ்டாக நிராகரிக்கப்பட்டேன். பல வேளைகளில் கடைசி நேரத்தில் என்னை வேண்டாமென்று சொல்லிவிட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுப்பார்கள். எதுவும் என்னைச் சோர்வடையச் செய்யவில்லை. தொடர்ந்து வாய்ப்பிற்காக முயற்சி செய்தேன். பல நேரங்களில் கூட்டத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன். எம்.குமரன் கு/ணி  மகாலட்சுமியில் ஒரு பாக்ஸிங் சண்டைக் காட்சியில் சுற்றியிருக்கும் கூட்டத்தைக் கூர்ந்துபார்த்தால் என்னை அடையாளம் காணலாம். புதுப்பேட்டை படத்தில்  சிறுவேடத்தில் நடித்தேன். பல படங்களில் கதாநாயகனின் நண்பனாக நடித்துள்ளேன்.

சினிமாவில் ஒரு பகுதியாக இருக்கவேண்டுமென்பதுதான் அப்போது நான் விரும்பியது. எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. பள்ளியிலிருந்தே நான் சுமாரான மாணவன் தான். விளையாட்டிலோ வேறு விஷயங்களிலோ எனக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால் எதையும்

சாதிக்கலாம் என்பதே என் அனுபவம். கதாநாயகன் ஆனபோதே என் கனவு நனவாகிவிட்டது. மற்றதெல்லாம் போனஸ் தான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை இன்னும் விரும்புகிறேன். அது தியேட்டருக்குள் கிடைக்கும் கைத்தட்டல்கள். என் வேலையை நான் சரியாக செய்திருப்பதாக அது கூறுகிறது. இது விஜய் சேதுபதி பல பேட்டிகளில் கூறியிருப்பதன் சுருக்கமான தொகுப்பு.

முகமற்ற துணை நடிகராக இருந்து இன்றைய நிலைக்கு  இவர் வந்ததன் காரணத்தை யோசித்தபோது கிடைத்த பதில்:

‘‘ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக நடித்து வெற்றி அடையும்போது அதேபோன்ற பாத்திரங்களில் அவரை நடிக்க வைப்பது என்பது திரைத்துறையில் ஒரு வருத்தத்துக்குரிய வழக்கம். அவரை இயக்குபவர்களின் விருப்பம் மற்றும்

வசதிக்கேற்பத்தான் இது நடக்கிறது என்றாலும் அந்த நடிகருக்கு இது துரதிருஷ்டமாக அமைந்துவிடுகிறது. ஒரே கதாபாத்திரத்தை எந்திரம்போல் திரும்பத்திரும்ப செய்வது தாங்கமுடியாத ஒன்று. மாறுபட்ட பாத்திரங்களை ஒரு நடிகருக்குக் கொடுக்காததும் ஒன்றுதான்; நட்ட செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருப்பதும் ஒன்றுதான். செடி கருகுவதுபோல் நடிகரின் திறமையும் வீணாகிவிடும்.''

இது   Something like an autobiography –யில் அகிரா குரசோவா கூறியது. அகிரா குரசோவா சொன்னதை விஜய்சேதுபதி பின்பற்றியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.

 வரும் பக்கங்களில் விஜய்சேதுபதியை இயக்கிய மூன்று இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களை நம் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

- அந்திமழை இளங்கோவன்