காலையில் எழுந்தபின்தான் தெரிந்தது பாத்ரூம் தண்ணீர் குழாயை மூட மறந்துவிட்டேன் என்பது. இரவு முழுக்க தண்ணீர் கொட்டி டேங்க் காலி. இதற்கு ஒரு வழி யாரும் கண்டுபிடித்திருந்தால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில்
வசிப்போர் பலருக்கு பெரும் உதவியாக இருந்திருக்கும். ஒரு சின்ன பொத்தானைத் தயார் செய்து குழாயில் பொருத்திவிட்டால் அது செல்போனுக்கு சிக்னல் அனுப்பும்படி செய்துவிடலாம். தண்ணீர்
கொட்டுவதை நாம் செல்போன் மூலமே கூட நிறுத்தி விடலாம். நான் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் ஐபிஎம்மில் வேலை செய்த காலத்தில் செய்தது இது போன்ற ஒரு வேலைதான்.
புகழ்பெற்ற வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான வேர்ல்பூல் பற்றி அறிந்திருப்பீர்கள். நம்மில் பெரும்பாலோர் வீடுகளில் அவர்களின் சாதனங்கள் உள்ளன. நான் அவர்களுக்கு‘கிச்சன் டேப்லட்’ உருவாக்கும் திட்டப்பணியில் இருந்தேன். அடுக்குமாடி வீடுகளில் இருக்கும் ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அடுப்பு, ஏசி போன்றவற்றில் ஒரு பொத்தானைப் பொருத்துவது. அந்த பொத்தான் ஒருவர் கையில் வைத்திருக்கும் கிச்சன் டேப்லட்டுக்கு சிக்னல் அனுப்பும். அந்த சாதனங்களை தொலைவில் இருந்தே இயக்கிக் கொள்ளலாம். ஆஃப் செய்யலாம். ஆன் செய்யலாம். இப்போது அந்த டேப்லட் இன்னும் மேம்படுத்தப்பட்டு பிரிட்ஜில் இருக்கும் கோழிக்கு மசாலா தடவி, அடுப்புக்கு அனுப்பி வேகவைத்து, வீட்டுக்குத் திரும்பியவுடன் சாப்பிட ரெடியாக வைக்கும் அளவுக்கு தயாராகிவிட்டது. எம்பெடட் ஜாவா டெக்னாலாஜியில் அழகாக இதைச் செய்துவிடலாம். ஆக மாமி கையில் இருந்து சமையலறையை மெக்கானிக் கைக்கு அனுப்பிவிட்டாயிற்று. குழாயைத் திறந்து வைத்துவிட்டு வருவது மனிதனின் தவறு என்றால் அதை தொழில்நுட்பம் மூலமாக எளிதாகச் சமாளித்துவிடலாமே. இதில் எவ்வளவு சிறந்த ஒரு தொழில் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் பார்த்தீர்களா?
இதே போல கேரியர் ஏசி நிறுவனம். தொழிற்சாலை களுக்கு ஏசி மெஷின்களை அளித்து அவற்றைப் பராமரிக்கிறது. எங்கோ ஒரு இடத்தில் ஏசி ரிப்பேர் ஆகிவிட்டது என்றால் அவற்றை ஏணிவைத்து ஏறி எங்கே ரிப்பேர், எப்படி ரிப்பேர் என்றெல்லாம் ஒரு தொழிற்சாலையில் கண்டுபிடிப்பதென்றால் சாதாரணமான வி௸ஷயமா? பொழுதுவிடிந்துவிடும். அதனால் இதற்கும் ஏசி மெஷின்களில் பொருத்தக்கூடிய பொத்தான் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தோம். இப்போது யாரும் ஏறவேண்டாம். கீழே இருந்தே, எல்லா ஏசி மெஷின்களையும் சரியாக வேலை செய்கின்றனவா? ஏதாவது கோளாறா என்று பரிசோதித்துவிடலாம்.
நானெல்லாம் இங்கே அரசு பள்ளியில் படித்துவிட்டு அமெரிக்கா போனவன். கணினித்தொழில் நுட்பத்தில் எங்களை இப்படித்தான் அந்த நாடு பயன்படுத்திக் கொண்டது.
மனிதனின் வேலையை புத்திசாலித்தனமாக திறனாக செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்வது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் இப்படிச் செய்வதற்கு ஏராளமாக இருக்கிறது.
உதாரணத்துக்கு நமது ஸ்ரீபெரும்புதூரை எடுத்துக் கொள்வோம். நிறைய வாகனத் தயாரிப்பு மற்றும் உதிரிப்பொருட்கள் தயாரிப்புதொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றை அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். அங்கே போர்ட், ஜி எம், சாடர்ன் போன்ற பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்து கொடுக்கிற கம்பெனிகளில் ஒரு சீட் தயாரித்துக் கொடுக்கிற கம்பெனியை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் லான்சிங் நகரில் லியர் கார்ப்பரேஷ௸ன் என்று ஒரு நிறுவனம். இப்போது இது நம்ம ஸ்ரீபெரும்புதூருக்கே வந்துவிட்டது. ஒரு சீட் தயாரிக்க அந்நிறுவனம் சுமார் 200 வெவ்வேறு ஆட்களிடமிருந்து மூலப்பொருட்களை வாங்க வேண்டியிருக்கும். இன்று காலையில் இந்த கலர் சீட் செய்ய ஆரம்பித்தால், திடீரென்று கார் நிறுவனம் வேறு கலர் சீட் உடனே வேண்டும் என்பார்கள். மாற்ற வேண்டும். எல்லாம் தயாராகி சீட் கார் கம்பெனிக்குப் போனால் அங்கே ஒரு நூல் வெளியே தொங்கினாலும் அவ்வளவுதான். திருப்பி அனுப்பிவிடுவார்கள். இவ்வளவையும் சரியாக நிர்வகிக்க ஒரு மென்பொருள் உதவிசெய்கிறது. காலையில் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டுமெனில் யார் யாரிடமிருந்து என்ன வரவேண்டும்? என்ன இல்லை? எது குறைவாக உள்ளது? எல்லாவற்றையும் ஒரே மென்பொருள் உங்களுக்குச் சொல்லி விடும். எனக்குத் தெரிந்து இதுபோன்ற இந்தியத் தயாரிப்பு மென்பொருள் எதுவும் ஸ்ரீபெரும்புதூரில் பயன்பாட்டில் இல்லை. நம் கணிப்பொறி வல்லுனர்கள் நிச்சயமாக இங்கே உதவி செய்யலாம். மெக்கானிக் எஞ்சினியர்களும் கணிப்பொறி எஞ்சினியர்களும் இணைந்து செயல்பட்டால் இது சாத்தியம். உற்பத்தியும் மேம்படும். நமக்கு ஒரு மென்பொருள் தொழில்வாய்ப்பும் உள்ளது.
சாலையோரங்களில் மல்லிப்பூ விற்கும் தாய்மார்களைச் சென்னையில் பார்க்கும்போதெல்லாம் எனக்கு Proflowers.com கண்டிப்பாக ஞாபகம் வரும். முதன்முதலாக அமெரிக்காவில் ஆன்லைனில் பூ விற்க ஆரம்பித்து ஜெயித்தவர்கள் அவர்கள்! உங்களுக்கு யாருக்கு பூங்கொத்து எப்போ அனுப்பவேண்டும்? அவர்களிடம் சொன்னால் போதும். என்னவிதமான பூ அனுப்பவேண்டும்? நீங்களே எழுதி அனுப்பவேண்டுமா? பூ வேண்டாம் பரிசுப்பொருள் அனுப்பவேண்டுமா? அல்லது கிப்ட் வவுச்சர் அனுப்பவேண்டுமா? ஒரு வாரத்தில் அனுப்பவேண்டுமா? எட்டுமணி நேரத்தில் அனுப்பவேண்டுமா? எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் ஏற்ற சேவைக் கட்டணம். கலிபோர்னியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வேலண்டைன்ஸ் தினத்தன்று 500 பூங்கொத்துகளை அனுப்பி இத்தளத்தை ஆரம்பித்தார்கள். இப்போது 70 லட்சம் வாடிக்கையாளர்களாம்! 185 ரக பூக்களை அப்படியே வாசனை மாறாமல் அனுப்புகிறார்கள்.
எல்லாம் தொழில்நுட்ப ஜாலம்தான்! நம்மூரிலும் இப்போது அதுபோன்ற பூங்கொத்துகள் அனுப்பும் இணைய தளங்கள் வந்துள்ளன. அவை தங்கள் சேவையை சரியாக செய்கின்றன என்பது உறுதியாகத் தெரியும் பட்சத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஆட்கள், ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ பூக்களையோ பரிசுகளையோ அனுப்பலாம்! மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்பும் இதில் உள்ளது. ஆக ஐடி தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் அடங்கி உள்ளது வெற்றி!
(கட்டுரையாளர் சென்னையில் உள்ள டென்த் ப்ளானெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர்)
செப்டெம்பர், 2013.