சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் வெளியிட்ட ஓர் அரசாணை திருக்குறள் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழார்வலர்களிடம் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி மகாதேவன் பள்ளிகளில் திருக்குறளில் 108 அதிகாரங்களைச் சொல்லித்தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதை ஏற்று தமிழக அரசு அதில் 105 அதிகாரங்களை சொல்லிக்கொடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.
ராஜரத்தினம் என்பவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் சொல்லித்தரவேண்டும் என்று தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த அரசாணை உண்மையில் பெரிதும் வரவேற்கத்தகுந்த ஒன்று. அத்துடன் இந்த ஆணையில் திருக்குறளைக் குறிப்பிடும்போது பொதுமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது தனிப்பட்ட முறையில் பல திருக்குறள் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது!
ஆம். இதுவரை திருக்குறள் தமிழ் வேதம் என்ற பொருளில் தமிழ்மறை என்றுதான் பாராட்டப்பட்டது. இதில் மறை என்ற சொல்லுக்குப் பதிலாக இப்போது முறை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும்.
திருக்குறளை பொதுமுறை என்று அழைக்கவேண்டும் என்று பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் வாசித்த ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரையில் கேட்டுக்கொண்டிருந்தார் ஒடிஷாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன். அவரிடம் பேசியபோது, “நான் மட்டுமல்ல நிறைய பேர் இந்தமாறுதலை எதிர்நோக்கி இருந்தார்கள். எல்லோருக்குமே இது மகிழ்ச்சி அளிக்கும்” என்கிறார். அத்துடன் “பொதுமறை என்று ஒன்று இருக்கவே முடியாது. பொதுவாக இருப்பது எப்படி மறையாக இருக்கும்? இது ஒரு முரணாக இருக்கிறது. பொது நூல் என்று சொல்லலாம். இதைவிட பொதுமுறை என்பது சரியாக இருக்கும். முறை என்கிற சொல்லை வள்ளுவர் குறளில் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தாலே நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தமிழக வரலாற்றில் சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு ஓய்ந்து சைவ மடங்கள் ஓங்கிய காலகட்டத்தின் பின்னர் திருக்குறள் கையிலெடுக்கப்படும்போது திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த தமிழ்வேதமாகிய திருக்குறள் என்று அது குறிக்கப்படுகிறது. அதுதான் ஆரம்பம். அது பின்னர் தமிழ்மறை ஆகிறது.
வேதங்களின் அடிப்படையே அது கடவுளால் அருளிச்செய்யப்பட்டது என்பார்கள். அது எழுதாக்கிளவி. அதற்கு ஆசிரியர் இல்லை. அதே சமயம் திருக்குறளின் உள்ளடக்கத்தை நாம் வேதத்துடன் ஒப்பிட முடியாது. யார் இதை எழுதியது என்று தெரியும். இது அன்றாடம் நடக்கும் லௌகீக விஷயங்களைப் பற்றிச்சொல்கிறது. சக மனிதனின் குரலாக உள்ளது. இதை வேதம் என்றோ மறை என்றோ சொன்னவர்கள் தவறான நோக்கத்தில் செய்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை! திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதற்காக அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம்.
ஆனால் இன்றைக்குப் புதிய சிந்தனைகள் உருவாகி இருக்கும் நவீன காலகட்டம். திராவிட, தமிழ்த் தொன்மங்களுக்கு நேரில் பார்க்கக்கூடிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரீகம் 1924-ல் தான் கண்டு பிடிக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள் அதன் பின்னர்தான் அச்சுவடிவம் பெற்று நம் கண்முன்னால் வந்துள்ளன. கீழடி நாகரிகம் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவை நம் மரபு பற்றி தரும் புதிய வெளிச்சம் கிடைக்காமல் இருந்திருந்தால் திருக்குறள் தமிழ் வேதம் என்று தொடர்ந்து மகிழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் இப்போதைய சூழலில் திருக்குறளை மறுநிலைப்படுத்துதல் தேவைப்படுகிறது,” என்கிறார் அவர் “மறை என்றால் மறைக்கவேண்டிய விஷயம். நிச்சயமாக திருக்குறள் மறைக்கப் பட வேண்டிய நூல் அல்ல . மறை என்ற சொல் பொதுவாக உபதேசப் பொருள் . இது ஒரு மதம் சார்ந்ததாகவே கருதப் படுகிறது. திருக்குறளோ மதம் சாராதது, மானுடர் அனைத்துக்கும் பொருந்தும் முறையை மறையெனல் தகுமோ ? முறை என்ற சொல்லுக்கு treatise - நூல் என்றும் பொருள். ஆகவே இதைப் பொதுமுறை என்று அழைத்தலே சரி” என்கிறார் தொழிலதிபரும் குறள் ஆர்வலருமான கே.தங்கராஜ்.
இன்றைக்கு திருக்குறள் ஒரு சுதந்தரமான இலக்கியம்; மந்திரமானதோ மறைவானதோ அல்ல என்று சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கிறது. திருவள்ளுவர் நாத்திகர் என்று பெரும்பாலும் யாரும் சொல்வதில்லை. அவர் இறை நம்பிக்கை உடையவரே. ஆனால் அதை யார் மீதும் திணிக்கவில்லை. இந்த இறை நம்பிக்கை சார்பான குறள்கள் கூட திருக்குறளில் ஒரு துளியாகத்தான் இடம் பெற்றுள்ளன. ஆனால் திருக்குறள் முழுக எங்கும் வியாபித்து இருப்பது அறம். மண்ணில் எப்படி வாழ்வது என்பது பற்றிய அறம். ஒவ்வொரு மதத்துக்கும் உலகில் தனித்தனி மறை நூல்கள் உள்ளன. எல்லா மதங்களுக்கும் பொதுவான மறை நூல் ஒன்று உண்டு என்று சொல்வதே மிகப்பெரிய கற்பனை. அது சாத்தியமும் இல்லாதது. எனவே உலகப் பொதுமறை என்பதை விட முறை என்பதே சரி என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.“மனிதர்களை ஆன்மிக நெறிப்படுத்துவது மறையாக இருக்கட்டும். மனிதர்களை அறநெறிப்படுத்துவதால் திருக்குறள் முறையாகவே இருக்கட்டும். உலகப் பொதுமுறை என்பது ஆர்வத்தால் திருத்தப்பட்ட வார்த்தை அல்ல. அறிவால் தீட்டப்பட்ட வார்த்தை. எனவே அதை வரவேற்கிறேன்” என்று அந்திமழையிடம் கூறுகிறார் கவிஞர் நெல்லை ஜெயந்தா.
“குறளில் முப்பாலின் கருத்துகள் வாழ்வியலை வடித்துக்கொடுத்த அமுதமாகும். இந்த முறையில் தனிமனித ஒழுக்கமுடன் வாழ்ந்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்று வழிகாட்டும் பொதுமுறையாகும். உலக மக்கள் அனைவரும் பின்பற்றி வாழக்கூடிய பொதுமுறை வாழ்வியல் முத்துக்கள்தான் திருக்குறள். குறுகிய எல்லைகளைத் தாண்டி பரந்த எல்லைகளில் பயணிக்கும் பொதுமுறையே திருக்குறள்!” இது கவிஞர் மதுரை பாபாராஜ்-இன் கருத்து!
“பொதுவாக வேதம் என்ற சொல்லே நமக்குள் பேதங்களை உருவாக்குவதாக அமைந்துவிட்டது. ஆகவே அதை வேதம் எனப்பொருள்தரும் மறை என்று அழைக்காமல் பொதுமுறை என்று அழைப்பதே சிறந்தது. சமயசார்புள்ள இயக்கங்கள் திருக்குறளைக் கையில் எடுக்கும் இந்த சூழலில் இதுவே சரியான அணுகுமுறை” எனத் தெரிவிக்கிறார் கவிஞர் பழநிபாரதி.
தற்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பொதுமுறை என்று குறளை அரசாணையில் குறிப்பிட்டபோது, துறை அலுவலர்கள் ‘எழுத்துப்பிழை’ என்று நினைத்துக்கொண்டு பொதுமறை என்று திருத்தம் கோரினார்களாம். இது பிழை அல்ல; பிழைத்திருத்தம் என்று சொல்லவேண்டி வந்ததாம். இப்படி வெளியான அரசாணையை செய்தியாக வெளியிட்ட சில நாளிதழ்களும் முறை என்பதற்குப் பதிலாக மறை என்றே வெளியிட்டுவிட்டன!
ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒரு மாணவன் கடந்து செல்வதற்குள் 105 குறள் அதிகாரங்களையும் அவன் கடந்து செல்லவேண்டும் என்பதே மிக முக்கியமான சமூகப் பங்களிப்பாக அமையும் என்பதே தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பு!
திருக்குறள் உலகம் தழுவிய பார்வையுடையது காலத்தை வென்று நிற்பதுடன், காலத்திற்கேற்ப புதுப் பொருள்களையும் தந்து தொட்டனைத்தூறும் மணற்கேணியாய், அனைவருக்கும் பயன்படும் ஊருணியாய் விளங்குகிறது. எல்லோருக்கும் ஏற்றது. ‘விதி’ என்பதன் பழைய பொருளை மாற்றி, இதைச் செய்தால் இது நடக்கும், இதைச் செய்யாவிட்டால் இன்னது விளையும் என்று முறைப்படி விளக்குவது திருக்குறள்.
மனச்சோர்வில்லாமல், ஆர்வத்துடன் செயல்பட்டால், அடைய முடியாத இலக்கு என்பது எதுவுமே இல்லை என்று ஓங்கி முழக்கமிடுவது.திருக்குறளைப் படித்து, வாழ்வில் பின்பற்றி நடந்தால் ஒருவர் பொருள் பொதிந்த, பொருள் நிறைந்த, இன்ப வாழ்க்கை வாழலாம்..
சமயச் சார்பற்ற, அதே சமயம் அனைத்து மதத்தினரும் போற்றும் ‘பொது விதி’ என்ற பொருள் தரும்படி இருக்கும் திருக்குறளை பொதுமறை என்பதை விட பொதுமுறை என்பதே பொருத்தம்.
-சி. இராஜேந்திரன் ஐ ஆர் எஸ்
வள்ளுவர் குரல் குடும்பம்
‘ஒரு செயலைச் சரியாகச் செய்யவேண்டும். அதை எவ்வாறு சொல்கிறோம்? ‘முறையாகச் செய்யவேண்டும்’.
முறை என்னும் சொல்லுக்கு ‘வழி, நெறி, நிரல்’ போன்ற பொருள்கள் உள்ளன. வாழ்க்கையை சரியான வகையில், சரியான நெறியில் வாழ்வதற்கான வழிகளை வள்ளுவம் வகுத்துக் கொடுக்கிறது. வாழ்வியல் உண்மைகளை நிரல்படப் பேசுகிறது.
முறையானவற்றை முறையான வகையில் முறையோடு கூறும் வள்ளுவத்தை ’உலக பொது முறை’ என்று கூறுவது முறைமையேயன்றோ?”
-டாக்டர் சுதா சேஷைய்யன், சொற்பொழிவாளர், எழுத்தாளர்
திருக்குறள் இனம், மொழி, மதம் கடந்த மனிதம் போற்றும் முப்பால் முறை நூல்.
தனி மனித ஒழுக்க வாழ்விற்கு, குடும்ப வாழ்விற்கு, சமுதாய வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைகளை அடையாளம் காட்டுகிறது அறத்துப் பால் .
கல்வி, அறிவு, பணி, தொழில், உறவுகள், நட்பு என பல துறைகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முறையாக வழிகாட்டி வாழ்வை செழுமைப் படுத்துகிறது பொருட்பால்.
இன்பம் துய்ப்பதில் வரையறைகளையும், வரம்புகளையும் வகுத்து வாழ்வின் இன்பத்தையும் முறைப்படுத்தி செழுமைப் படுத்துகிறது இன்பத்துப்பால்.
முப்பரிமாணங்களிலும் குறள் சொல்லுவ தெல்லாம் எக்காலத்தும், எவராலும் சமய சார்பற்று ஏற்றுக் கொள்ளப்படும் வாழ்வியல் ஒழுங்கு முறைகளையே.
ஹெலினா கிறிஸ்டோபர், குறள் ஆய்வாளர்
இதுவரை தமிழ் அறிஞர்கள் ‘கீதை எதற்கு, வேதங்கள் எதற்கு, பைபிள் எதற்கு, மனுதர்மம் எதற்கு, நமக்கு வள்ளுவர் தந்த திருக்குறள் இருக்கிறது’ என்று மதசார்புள்ள மறைநூல்களுக்கு ஒரு மாற்று நூலாகத்தான் திருக்குறளை முன்னிலைப்படுத்தி‘பொதுமறை’ என்று முழங்கி வந்துள்ளனர். காலப்போக்கில் ‘மறை’ என்ற சொல்லுக்கான பொருளையும் மறந்து விட்டனர்.
‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ என்று வள்ளுவர் சொல்லும்போது, இவ்வாறான மறைநூல்களைப் பற்றித்தான் கூறுகிறார். அதற்காக திருக்குறள் ஒரு மறைநூலாகி விடாது. மறை நூல்களில் முறைகளும் இருப்பதுபோல, முறை நூல்களிலும் மறைகளைப் பற்றியான கருத்துக்கள் ஆங்காங்கே காணப்படும். மறைநூல்களில் மறைமொழிகள் மிகும்,முறைநூல்களில் முறைமொழிகள் மிகும். ஒரு நூல் முறை அல்லது மறை நூலா என்பதை அறிய ‘மிகைநாடி மிக்க கொளல்’ வேண்டும். சான்றோராக வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிமுறைகளை பெரும்பாலான விகுதியில் மிகுதியாகக் கொண்ட திருக்குறளை ஒரு ‘பொதுமுறை’ என்று சொல்வதே முறையானதும் சரியானதும் கூட.
டாக்டர் அஷ்ரஃப், திருக்குறள் ஆர்வலர்.