குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அந்த நடிகை. நாடகங்களிலும் நடித்து வந்தவர். பின்னர் வங்காள சினிமாவின் மறுமலர்ச்சி இயக்குநர்களில் ஒருவரான மிருணாள் சென்னின் படத்தில் நடித்தார். தொடர்ந்து இன்னொரு சாதனையாளரான ரித்விக் கட்டக்கின் படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு முக்கியமான படங்கள். இரண்டு முக்கியமான இயக்குநர்கள். இந்த வாய்ப்பு அவரை உலகத்தை மாற்றுப் பார்வையில் பார்க்கச் செய்தது. குறிப்பாகப் பெண்களின் நிலைமை பற்றி யோசிக்க வைத்தது. மூன்றாவதாக அவருக்குக் கிடைத்தது சினிமாவின் ஆகப் பெரிய கலைஞரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு. படப்பிடிப்புத் தொடங்குவற்கு முன்பே படத்தின் திரைக்கதைப் பிரதியை நடிகையிடம் படித்துக் காட்டினார் இயக்குநர்.
He read me the entire story. I was stunned. This was the first woman- centered screenplay I had encountered. I was not going to play second fiddle to the main male character as in all plays and films I had acted in or was familiar with. (My films My Life page.20)
இரண்டு விஷயங்கள் நடிகைக்குப் புலப்பட்டன. சுயமாக யோசித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்ணின் பாத்திரம். தானும் இந்தப் பாத்திரமும் வேறல்ல என்று தோன்றியது. படத்தில் அந்தத் தன்னம்பிக்கை வெளிப்படவும் செய்தது. இது முதல் விஷயம். இவ்வளவு மரியாதையாகப் பெண்ணை சித்தரிக்கும் இயக்குநர் மீது காதலும் கனிந்தது. இத்தனைக்கும் அவர் நடிகையை விடவயதில் துல்லியமாக இரு மடங்கு மூத்தவர். நடிகையின் வயதில் அவருக்கு மகனும் இருந்தான். ஆனால் காதலுக்குதான் வயது கிடையாதே. இயக்குநரும் காதலித்தார். இது இரண்டாவது சங்கதி. இயக்குநர் அடுத்த படத்தின் மையப் பாத்திரமாக அதே நடிகையைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு நடிகையின் திறமை என்பதோடு அவர் மீதிருந்த காதலும் காரணம். அதிர்ஷ்டவசமாகப் படத்துக்கான கதையும் காதலை மையப்படுத்தியதுதான். தாகூரின் ‘சிதைந்த கூடு’ (நஷ்டெநீர்) என்ற குறுநாவல். தனிமையிலேயே வாழ விதிக்கப்பட்ட நுண் உணர்வுள்ள ஒரு பெண் அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற மைத்துனன் மேல் காதல் கொள்கிறாள். பொதுவாகவே வங்காளப் புனைகதைகளில் வரும் அண்ணிகள் பேரழகிகள். மைத்துனர்களால் காதலிக்கப்படவே ஜென்மமெடுத்தவர்கள். சமூக கட்டுப்பாடுகளும் குற்ற உணர்வும் ஏற்பட அந்தக் காதல் அவசரமாக முடிந்து போகிறது. தாகூர் தன்னுடைய சொந்த அனுபவத்தைச் சொன்ன குறுநாவல். அது ரவீந்திரருக்கும் அவருடைய அண்ணன் ஜோதீந்திரநாத்தின் மனைவி காதம்பரிக்கும் இடையில் நிலவிய நேசத்தைச் சொன்ன படைப்பு.
‘சிதைந்த கூடு’ குறுநாவலின் திரைவடிவம் மிகப் பெரும் கலைப்படைப்பாகக் கொண்டாடப்பட்டது. கதா பாத்திரங்களுக்கிடையிலான உறவு ஆழமாகவும் உண்மையுணர்வுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. நடிகையும் இயக்குநரும் பரஸ்பர நேசத்துடன் இருக்கும்போது அது அப்படித்தானே இருக்கும். தொடர்ந்து அடுத்த படத்திலும் அந்த நடிகையே முக்கியப் பாத்திரத்தை ஏற்றார். படப்பிடிப்புப் பாதியை எட்டியபோது இந்த நேசம் எல்லாரும் மெல்லுகிற ரகசியமானது. இயக்குநரின் வாழ்வில் சலனத்தை ஏற்படுத்தியது. இந்த உறவை இயக்குநரின் மனைவி ஒப்புக் கொண்டார். ஆனால் அவருடைய மகன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மகன் மீது பெரும் பாசம் கொண்ட இயக்குநருக்கு காதலிலிருந்து பின் வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நடிகையிடம் அவர் சொன்னார். “விலைமதிப்பில்லாத உன்னுடைய நேசத்தை நான் என் பிள்ளைக்காக விட்டுக் கொடுக்கிறேன்”. அந்த இயக்குநர் இந்தியத் திரையுலகின் பெருங்கலைஞரான சத்யஜித்ராய். நடிகை மாதவி முகர்ஜி. இருவரையும் பரஸ்பரம் நெருங்கச் செய்த படம் ‘சாருலதா’.
இருவருக்கும் ஏற்பட்ட உறவும் முறிவும் ராயின் அடுத்த படமான ‘கா புருஷ் ஓ மகா புருஷ்’ படத்தில் தெரிந்தது. அதிலும் மாதவி முகர்ஜிதான் மையப் பாத்திரம். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தின் முதல் பகுதி ‘கா புருஷ்’. அதாவது கோழை. காதலித்த பெண்ணைக் கைவிடும் கோழை. இது ராயின் ஒப்புக்கொள்ளல். ஆண் பாத்திரமான அமிதாபா ராய் ஒரு திரைக்கதை ஆசிரியன். படம் தயாரிப்பிலிருக்கும்போதே இது சத்யஜித் ராய் தன்னைப் பற்றிச் செய்துகொள்ளும் விமர்சனம் என்று பேச்சு எழுந்ததாக மாதவி முகர்ஜி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார். படத்தின் முடிவில் இன்னொருவனின் மனைவியான கருணாவை - மாதவி முகர்ஜியை - ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிக் குறிப்பு எழுதுகிறான் அமிதாபா ராய். பழைய காதல் மனதிலிருக்குமானால் தன்னுடன் வந்து விடும்படியும் சொல்லுகிறான்.கருணாவும் வருகிறாள். அவனை வழியனுப்பவோ அவனுடன் இணைந்து கொள்ளவோ அல்ல. அவனுடைய கோழைத்தனத்தை எள்ளி நகையாடுவதற்காக. பெண் என்றால் ஆணின் விளையாட்டுப் பொம்மையல்ல என்று சொல்வதற்காக. அது ராய் தனக்குத்தானே விதித்து அனுபவித்த தண்டனை என்கிறார் மாதவி. அதன் பிறகு மாதவி ஒருபோதும் சத்யஜித்ராயின் படத்தில் நடிக்கவில்லை.
பிப்ரவரி, 2014.